உடல்நலக்குறைபாடு காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் இயக்குனர் பாரதிராஜாவை நேரில் சந்தித்த கவிஞர் வைரமுத்து தனது ட்விட்டர் பக்கத்தில் உருக்கமான பதிவை வெளியிட்டுள்ளார்.
ஸ்டூடியோவுக்குள் முடங்கி கிடந்த தமிழ் சினிமாவை தனது தனித்துவமான படைப்புகளின் மூலம் வெளியுலகிற்கு அறிமுகப்படுத்தியவர் பாரதிராஜா. தனது இயக்கத்தில் பல வெற்றிப்படங்களை கொடுத்துள்ள பாரதிராஜா, இயக்குனர் மட்டுமல்லாது நடிகர் தயாரிப்பாளர் என பன்முக திறமைகொண்டவர்.
ரஜினி, கமல் இணைந்து நடித்த 16-வயதினிலே படத்தின் மூலம் தமிழ் திரையுலகின் இயக்குனராக அறிமுகமாக பாரதிராஜா,தனது முதல் படத்திலேயே கிராமத்து வாழ்வியலை அற்புதமாக காட்டி ரசிகர்களின் பாராட்டுக்களை பெற்றிருந்தார். அதனைத் தொடர்ந்து மண்வாசனை, கல்லூக்குள் ஈரம் என பல கிராமத்து படஙகளையும், டிக் டிக் டிக், சிகப்பு ரோஜாக்கள் உள்ளிட்ட பல சிட்டி படங்களையும் இயக்கியுள்ளார்.
மேலும் ராதிகா, ராதா. ரேவதி, ஸ்ரீதேவி உள்ளிட்ட பல நடிகைகளயும், பாக்யராஜ். மணிவண்ணன் சித்ரா லட்சுமனன் உள்ளிட்ட பல இயக்குனர்களையும் தமிழ் சினிமாவிற்கு கொடுத்துள்ளார். தனது வாழ்நாளில் 6 முறை தேசிய விருதை வென்றுள்ள பாரதிராஜா தற்போது படம் இயக்காத நிலையில். முன்னணி நடிகர்களின் படங்களில் முக்கிய கேரக்டர்களில் நடித்து வருகிறார்.
சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான திருச்சிற்றம்பலம் படம் நல்ல வரவேற்பை பெற்று வரும் நிலையில். கடந்த இரு தினங்களுக்கு முன்பு திடீரென உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்ட பாரதிராஜா சென்னை தி.நகரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். அவர் உடலுக்கு எதவும் இல்லை அவருக்கு ஓய்வு தேவை என்று மருத்துவமனை சார்பில் கூறப்பட்டதாக தகவல் வெளியானது.
இதனிடையே பாரதிராஜா விரைவில் நலம்பெற வேண்டும் என்று பிரான்சில் நடிகை ராதிகா சரத்குமார் பிரார்த்தனை செய்தார். இந்நிலையில் பாரதிராஜாவை மருத்துவமனையில் நேரில் சந்தித்த கவிஞர் வைரமுத்து, தனது ட்விட்டர் பக்கத்தில் உருக்கமாக பதிவை வெளியிட்டுள்ளார்.
இந்த பதிவில் “பாரதிராஜா மருத்துவமனையில் பாரதிராஜாவைப் பார்த்தேன். நலிந்த நிலையிலும் நகைச்சுவை தீரவில்லை. சின்னச் சின்னப் பின்னடைவுகளைச் சீர்செய்ய சுத்த மருத்துவர்கள் சூழ நிற்கிறார்கள். அல்லி நகரத்தை டில்லி நகரத்திற்கு அழைத்துச் சென்ற மகா கலைஞன் விரைவில் மீண்டு வருவார் கலையுலகை ஆண்டு வருவார்” என குறிப்பிட்டுள்ளார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil