விஜய்யின் பிறந்த நாளுக்கு கீர்த்தி சுரேஷ் வரைந்து, பரிசாகக் கொடுத்த ஓவியம், விஜய் வீட்டு வரவேற்பறையை அலங்கரித்து வருகிறது.
விஜய்யின் பிறந்த நாளை முன்னிட்டு கடந்த வருடம் ஜூன் மாதம் 22ஆம் தேதி, தானே கைப்பட வரைந்த ஓவியத்தைப் பரிசாக அளித்தார் கீர்த்தி சுரேஷ். கறுப்பு நிறத்தில் விஜய்யின் நிழல் உருவமும், அதைச்சுற்றிலும் வண்ணங்களும் கொண்ட ஓவியத்தின் கீழே, ‘என்றென்றும் வெற்றிநடை தொடரட்டும்... பல கோடி ரசிகைகளில் ஒருத்தி’ என தமிழில் எழுதிக் கொடுத்திருந்தார் கீர்த்தி சுரேஷ்.
இந்த ஓவியம், விஜய் வீட்டு வரவேற்பறையில் இடம்பிடித்துள்ளது. நடிகரும், இயக்குநருமான ரா.பார்த்திபன் மகள் கீர்த்தனாவுக்கு வருகிற மார்ச் 8ஆம் தேதி திருமணம் நடைபெற இருக்கிறது. அதற்காக அழைப்பிதழ் கொடுக்க விஜய் வீட்டுக்குச் சென்ற பார்த்திபன், விஜய் மற்றும் அவருடைய அம்மா ஷோபா சந்திரசேகரனோடு சேர்ந்து புகைப்படம் எடுத்து ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.
அந்தப் பதிவில், ‘உயரம் எப்படி ஆழத்தில்? அலைகள் கடந்த கடலின் ஆழத்தில்... அமைதியாய் அந்த உயர் நட்சத்திரம். சிரிப்பில் கூட இதயம் விஜயம்! மகனின் பெருமை பூரிப்பாக, ஆத்ம த்ருப்தி இசையாக அவர் தாய்!’ எனக் குறிப்பிட்டுள்ளார் பார்த்திபன்.
அவர் வெளியிட்டுள்ள புகைப்படத்தில், அவர்களுக்குப் பின்னால் கீர்த்தி சுரேஷ் வரைந்த ஓவியம் மாட்டப்பட்டுள்ளது. நடிகையாக அல்ல, ரசிகையாக கீர்த்தி சுரேஷ் தந்த பரிசுக்கு மதிப்பு கொடுத்து தன்னுடைய வீட்டின் வரவேற்பறையில் மாட்டி வைத்துள்ளார் விஜய்.