இரண்டாவது முறையாக ‘விஜய் 62’ படத்தில் விஜய் ஜோடியாக நடிக்க இருக்கிறார் கீர்த்தி சுரேஷ்.
பரதன் இயக்கிய ‘பைரவா’ படத்தில், முதன்முதலில் விஜய்யுடன் ஜோடி சேர்ந்து நடித்தார் கீர்த்தி சுரேஷ். கடந்த வருடம் பொங்கல் விடுமுறையில் இந்தப் படம் ரிலீஸானது. விஜயா புரொடக்ஷன்ஸ் தயாரித்த இந்தப் படம், கலவையான விமர்சனங்களைப் பெற்றது.
‘பைரவா’ படத்துக்குப் பிறகு சூர்யா ஜோடியாக ‘தானா சேர்ந்த கூட்டம்’ படத்தில் நடித்துள்ளார் கீர்த்தி சுரேஷ். விக்னேஷ் சிவன் இயக்கியுள்ள இந்தப் படம், வருகிற பொங்கலுக்கு ரிலீஸாகிறது. தற்போது லிங்குசாமி இயக்கத்தில், விஷால் ஜோடியாக ‘சண்டக்கோழி 2’ படத்திலும், ஹரி இயக்கத்தில், விக்ரம் ஜோடியாக ‘சாமி ஸ்கொயர்’ படத்திலும் நடித்து வருகிறார் கீர்த்தி சுரேஷ்.
இந்நிலையில், மீண்டும் விஜய் ஜோடியாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். ‘துப்பாக்கி’ மற்றும் ‘கத்தி’ படங்களைத் தொடர்ந்து விஜய் - ஏ.ஆர்.முருகதாஸ் மூன்றாவது முறையாக இணைகின்றனர். இன்னும் பெயரிடப்படாத இந்தப் படத்தை, தற்போது ‘விஜய் 62’ என்று அழைத்து வருகின்றனர்.
‘விஜய் 62’ படத்தை, சன் பிக்சர்ஸ் சார்பில் கலாநிதி மாறன் தயாரிக்கிறார். மலையாளப் படங்களில் ஒளிப்பதிவாளராகப் பணியாற்றிய க்ரீஷ் கங்காதரன், இந்தப் படத்தின் மூலம் தமிழில் ஒளிப்பதிவாளராக அறிமுகமாகிறார். தேசிய விருதுபெற்ற ஸ்ரீகர் பிரசாத் எடிட் செய்ய, ஆர்ட் டைரக்டராக சந்தானம் பணியாற்றுகிறார்.
‘மெர்சல்’ படத்தைத் தொடர்ந்து, இந்தப் படத்துக்கும் ஏ.ஆர்.ரஹ்மானே இசையமைக்கிறார். விஜய்யை வைத்து இரண்டு நாட்களுக்கு முன்பு போட்டோஷூட் நடத்தி முடித்துள்ள ஏ.ஆர்.முருகதாஸ், இந்த மாதத்தில் ஷூட்டிங்கைத் தொடங்க இருக்கிறார்.
‘பைரவா’ ரிலீஸான ஒரு வருடத்திற்குள் மறுபடியும் விஜய்யுடன் ஜோடிபோட்ட கீர்த்தி சுரேஷை அனைவரும் ஆச்சரியமாகப் பார்க்கின்றனர்.