நடிகர் திலீப் வழக்கில் புதிதாய் சிக்கியுள்ள அந்த 'பெண்' யார்? பதில் சொல்ல முடியாமல் தவிக்கும் நடிகர்!

அந்த இரண்டு நபர்களில் ஒருவர் மிகத் தெளிவாக தமிழ் பேசியிருக்கிறார். அந்த நபர், வக்கீலிடம் பேசிய போது, அடிக்கடி 'மேடம்.. மேடம்' என்ற வார்த்தையை உபயோகித்து...

கேரள சினிமாத் துறையில் ‘மக்கள் நாயகன்’ என்றால் அது நடிகர் திலீப் தான். இவருக்கு மம்மூட்டி, மோகன்லால் போன்று வெறித்தனமான ரசிகர்கள் கிடையாது. ஆனால், இவரது மிகப்பெரிய பலமே குடும்ப ஆடியன்ஸ் தான். இவரது படம் பார்க்க, முதல் நாளில் இருந்தே குடும்பம் குடும்பமாக வர ஆரம்பித்துவிடுவார்களாம். ஆனால், இன்று திலீப்பின் நிலை? மலையாள சினிமா உலகத்திற்கே மிகப்பெரிய தலைக்குனிவாக அமைந்துவிட்டதாக கருதப்படுகிறது.

சொந்த பந்தம், நண்பர்கள் என எல்லோரையும் விட்டுவிட்டு ஒரு நடிகை தனியாக ஷூட்டிங்கிற்கு வருகிறார் என்றால், அது எதனால்? சக நடிகர்களின் மீதுள்ள நம்பிக்கையால் தான். அந்த நம்பிக்கையையே சிதைத்தால் எப்படி மன்னிப்பது? இதுதான் திலீப் மீது மலையாள திரையுலகின் கோபமாக உள்ளது.

கேரளாவில் உயர் பதவியில் இருக்கும் பல போலீஸ் அதிகாரிகள், திலீப்புக்கு மிக நெருக்கமானவர்கள். அப்படியிருந்தும் எப்படி கைதுசெய்யப்பட்டார் என்பது சினிமா வட்டார நண்பர்களுக்கு ஆச்சர்யமாக உள்ளது. நடிகையைக் கடத்துவதற்கு திலீப்தான் திட்டமிட்டார் என்பதற்கான வலுவான 19 காரணங்கள் இருந்ததால், திலீப்பை அவரது நட்பு காக்கிகளால் கூட காப்பாற்ற முடியாமல் போனதாம். திலீப்பை, போலீஸ் காவலில் 15 நாள்கள் வைக்கச் சொல்லியிருப்பதால், இப்போதைக்கு உடனடியாக ஜாமீன் எடுக்க வழியில்லை.

இந்த நிலையில், திலீப்பின் தம்பி அனூப் மூலம், ராம்குமார் என்ற வழக்கறிஞர், அங்காலி நீதிமன்றத்தில் ஆஜராகி, திலீப்பிற்கு ஜாமீன் தரக் கோரி மனுத் தாக்கல் செய்திருந்தார். ஆனால், பாவனா வழக்கு விசாரணை, ஆரம்ப நிலையில் இருப்பதாகக் கூறி திலீப்புக்கு ஜாமீன் வழங்க மறுத்துவிட்டது நீதிமன்றம். மேலும், திலீப்பை 2 நாள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்கவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

போலீஸ் துறையிலும் சரி, மற்ற துறையிலும் சரி, மிகப்பெரிய அளவிற்கு நெருங்கிய தொடர்புகள் வைத்திருந்த திலீப், இந்த வழக்கில் ஜாமீன் கூட கிடைக்காமல் திணறுவதற்கு முக்கிய காரணம் ‘மெமரி கார்டு’ தான். பாவனாவை பாலியல் ரீதியாக துன்புறுத்திய போது, பல்சார் சுனில் அதனை வீடியோவாக எடுத்து அந்த மெமரி கார்டில் தான் சேவ் செய்து வைத்திருந்தார்.

அந்த மெமரி கார்டை, திலீப்பின் மனைவியான காவ்யா மாதவனின் ‘லக்ஷியா’ டெக்ஸ்டைல்ஸில் இருந்து போலீசார் கைப்பற்றினர். இந்த டெக்ஸ்டைல்ஸ் கொச்சியில் காக்கநாடு எனும் பகுதியில் உள்ளது. இந்த டெக்ஸ்டைல்ஸில் இருந்து தான், இவ்வழக்கின் முக்கிய குற்றவாளியான பல்சார் சுனிலுக்கு இரண்டு லட்சம் பணம் கொடுக்கப்பட்டிருக்கிறது.

பிப்ரவரி 17-ஆம் தேதி தான் பாவனா பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளானார். போலீசார் அந்த டெக்ஸ்டைல்ஸின் கேமராக்களை சோதனை செய்த போது, பிப்., 17,18,19 ஆகிய மூன்று தினங்களின் ஃபூட்டேஜ் அழிக்கப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது. போலீஸ் இதுகுறித்து திலீப்பிடம் கேள்வி கேட்ட போது, அவரிடம் எந்த பதிலும் இல்லை.

மேலும், திலீப்பிடம் போலீசார் விசாரணை நடத்திய போது, “பாவனா பாலியல் துன்புறுத்தல் சம்பவம் குறித்து உங்களுக்கு எப்போது தெரியவந்தது. யார் சொன்னார்கள்” எனக் கேள்வி எழுப்பினர். அதற்கு திலீப், ”பிப்ரவரி 18-ம் தேதி காலையில் தான் எனக்கு இந்த விஷயம் தெரியவந்தது. இச்செய்தியை படத் தயாரிப்பாளர் ஆன்டோ ஜோசப் என்னிடம் கூறினார்” என பதில் அளித்திருக்கிறார்.

இதைத் தொடர்ந்து, தயாரிப்பாளர் ஆன்டோ ஜோசப்பிடம் போலீஸ் நடத்திய விசாரணையில், ”சம்பவம் நடந்த பிப்ரவரி 17 அன்று இரவு, திலீப்புக்கு பலமுறை நான் போன் செய்தேன். அவர் போனை எடுக்கவில்லை. அடுத்த நாள் காலை திலீப் எனக்கு போன் செய்தார். அப்போது, பாவனா சம்பவத்தைக் கூறினேன். திலீப் எந்த அதிர்ச்சியையும் காட்டவில்லை. பதில் சொல்லாமலேயே போனை கட் செய்துவிட்டார்” எனத் தெரிவித்திருந்தார்.

அதன்படி, நடிகர் திலீப்பின் செல்போன் ரெக்கார்டுகளை போலீசார் ஆராய்ந்தபோது, பிப்ரவரி 18-ஆம் தேதி காலை, 12 நொடிகள் மட்டும் படத் தயாரிப்பாளர் ஆன்டே ஜோசப்பிடம் திலீப் பேசியிருப்பது உறுதிப்படுத்தப்பட்டது. இதையடுத்தே திலீப் மீது பிடி இறுகியது. இந்த இடத்தில் தான் திலீப் மீதான சந்தேகம் போலீசாரால் ஏறக்குறைய உறுதி செய்யப்பட்டது.

போலீசார் அந்த மெமரி கார்டை கைப்பற்ற ‘லக்ஷியா’ டெக்ஸ்டைல்ஸ் சென்ற போது, அங்கு காவ்யாவின் ‘அம்மா’ சியாமளவும் இருந்திருக்கிறார். அவரிடம் இருந்து தான் அந்த மெமரி கார்டையே போலீசார் கைப்பற்றியுள்ளதாக கூறப்படுகிறது. இதன்பிறகு, போலீசாரின் சந்தேக பார்வை சியாமளா மீதும் திரும்பியிருக்கிறது. இந்த சந்தேகத்திற்கு மற்றொரு முக்கிய காரணமும் உள்ளது. முக்கிய குற்றவாளியான பல்சார் சுனில், தனது இரண்டு ஆட்களை கேரளாவில் ஒரு பிரபல வக்கீலை பார்ப்பதற்கு அனுப்பியிருக்கிறார்.

அந்த இரண்டு நபர்களில் ஒருவர் மிகத் தெளிவாக தமிழ் பேசியிருக்கிறார். அந்த நபர், வக்கீலிடம் பேசிய போது, அடிக்கடி ‘மேடம்.. மேடம்’ என்ற வார்த்தையை உபயோகித்து இருக்கிறார். ‘மேடம் சொல்லச் சொன்னார், மேடம் செய்யச் சொன்னார்’ என கூறியிருக்கிறார். இதனை, அந்த வக்கீல் போலீசாரிடம் தெரிவித்துவிட்டார். இதனால், போலீஸின் பார்வை சியாமளா பக்கம் திரும்பியிருக்கிறது. நடிகை பாவனா பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளானதில் சியாமளவிற்கும் முக்கிய பங்கு இருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர்.

தலைமறைவாக உள்ள காவ்யா மாதவனும், அவரது தாய் சியாமளவும் விரைவில் கைது செய்யப்படலாம் என்றே தெரிகிறது.

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest Entertainment news in Tamil.

×Close
×Close