கொரோனா நிவாரணம்: கிள்ளிக் கொடுக்கிறதா கோலிவுட்?

கொரோனா தடுப்பு பணிகளுக்காக பொதுமக்கள் நிதி அளித்து உதவலாம் என்று மத்திய மாநில அரசுகள் வேண்டுகோள் விடுத்ததும் பாலிவுட், டோலிவுட் சினிமா நட்சத்திரங்கள் பலரும் தானாக முன்வந்து அள்ளிக்கொடுத்த நிலையில், கோலிவுட் வட்டாரம் கிள்ளிக்கொடுப்பதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன.

By: April 7, 2020, 11:58:13 PM

கொரோனா தடுப்பு பணிகளுக்காக பொதுமக்கள் நிதி அளித்து உதவலாம் என்று மத்திய மாநில அரசுகள் வேண்டுகோள் விடுத்ததும் பாலிவுட், டோலிவுட் சினிமா நட்சத்திரங்கள் பலரும் தானாக முன்வந்து அள்ளிக்கொடுத்த நிலையில், கோலிவுட் நட்சத்திரங்கள் கிள்ளிக்கொடுப்பதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன.

உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் அதன் கோரத் தாண்டவத்தை இந்தியாவிலும் நடத்த தொடங்கியுள்ளது. கொரோனா சமூகப்பரவலை அடைவதற்கு முன்பு அதன் பரவலைத் தடுக்கும் நோக்கத்தில் நாட்டு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால், கோடிக்கணக்கான மக்கள் தங்கள் வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கின்றனர். நாடு அனைத்து பணிகளையும் முடக்கியுள்ளதால் பொருளாதாரமும் ஸ்தம்பித்துள்ளது.

ஆனாலும், மத்திய மாநில அரசுகள் கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்க தீவிர நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. கொரோனா தடுப்பு பணிகளுக்கு அரசின் நிதி போதாது என்பதால், பிரதமர், மாநில முதல்வர்கள், பொதுமக்கள் நிதியளிக்க கோரிக்கை விடுத்தனர்.

பிரதமர் மோடி கோரிக்கை விடுத்ததும், முதல் ஆளாக பாலிவுட் நடிகர் அக்‌ஷய் குமார், ரூ.25 கோடி நிதியுதவி அளிப்பதாகக் கூறினார்.

தெலுங்கு சினிமா உலமான டோலிவுட்டில் பாகுபலி நடிகர் பிரபாஸ் ரூ.4 கோடி நிதி அளித்துள்ளார். அதில், ரூ.3 கோடியை பிரதமர் நிவாரண நிதிக்கும் தலா ரூ.50 லட்சம் ஆந்திரா, தெலங்கானா மாநில முதல்வர்கள் நிவாரண நிதிக்கு அளித்துள்ளார். நடிகர் பவன் கல்யாண் ரூ.2 கோடி நிதியுதவி அளித்துள்ளார். நடிகர் சிரஞ்சீவி ரு. 1 கோடியும் மகேஷ் பாபு ரூ.1 கோடியும் அளித்துள்ளனர். ராம் சரண் ரூ.70 லட்சம் நிதியுதவி வழங்கியுள்ளார். இப்படி டோலிவுட் வட்டாரங்கள் கொரோனா நிவாரண நிதிக்காக வாரி வழங்கியுள்ளனர்.

தெலுங்கு சினிமாவைவிட மார்க்கெட் அதிகம் உள்ள தமிழ் சினிமா நடிகர்களும் இதே கொரோனா தடுப்பு பணிகளுக்காக நிதி அளித்துள்ளனர். ஆனால், அது பாலிவுட் நடிகர்கள், டோலிவுட் நடிகர்கள் அளித்த அளவுக்கு இல்லை என்று விமர்சனங்கள் எழுந்துள்ளன.

கொரோனா தடுப்பு பணிகளுக்காக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ரூ.50 லட்சம் வழங்கியுள்ளார். ஃபெப்சி திரைப்பட தொழிலாளர்களுக்கு தனியாக நிதியுதவி அளித்துள்ளார். நடிகர்கள் சிவக்குமார், சூர்யா, கார்த்தி ஆகியோ இணைந்து ரூ.10 லட்சம் நிதி வழங்கியுள்ளனர்.
நடிகர் விஜய் சேதுபதி ரூ.10 லட்சம், சிவகார்த்திகேயன் ரூ.10 லட்சம், தனுஷ் ரூ.15 லட்சம் நிதி அளித்துள்ளனர். ஃபெப்சி திரைப்பட தொழிலாளர்களுக்காக நடிகை நயன்தாரா ரூ.20 லட்சம் நிதியளித்துள்ளார். இன்று நடிகர் அஜித் ரூ.1.25 கோடி நிதியுதவி அளித்துள்ளார். அதில், பிரதமர் நிவாரண நிதிக்கு ரூ.50 லட்சம், தமிழக முதல்வர் நிவாரண நிதிக்கு ரூ.50 லட்சம், ஃபெப்சி திரைப்பட தொழிலாளர்களுக்கு ரூ.25 லட்சமும் நிதியுதவி அளித்துள்ளார்.

தமிழ் சினிமா நடிகர்களின் நிதியுதவியை வரவேற்கும் அதே நேரத்தில், தமிழ் சினிமாவைவிட மார்க்கெட் குறைவாக உள்ள தெலுங்கு சினிமா நடிகர்கள் 2 பேர் அளித்த நிதி அளவுக்குகூட தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திர நடிகர்கள் பலர் அளித்த நிதி இல்லை என்று விமர்சகர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

நாடு கொரோனா நெருக்கடியை சந்தித்துள்ள நிலையில், உதவுவதற்காக பாலிவுட் நடிகர்களும் டோலிவுட் நடிகர்களும் அள்ளி அள்ளி கொடுத்துள்ள நிலையில், தமிழ் சினிமா உலகின் கோலிவுட் நடிகர்கள் கோவிட்-19 தடுப்பு பணிகளுக்கு கிள்ளி கொடுத்துள்ளதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  t.me/ietamil”

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Entertainment News by following us on Twitter and Facebook

Web Title:Kollywood actors rajini ajith sivakarthikeyan vijay sethupathi surya donation to corona mission

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
பிரபலமானவை
Advertisement

இதைப் பாருங்க!
X