இயக்குனர் பாலச்சந்தரின் சிலை திறப்பு; விழாவிற்கு வராத கமல்ஹாசன்!

நடிகர் கமல்ஹாசன் இந்த விழாவில் கலந்து கொள்வார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அவர் விழாவிற்கு வரவில்லை.

மறைந்த திரைப்பட இயக்குனர் கே. பாலச்சந்தரின் 87-வது பிறந்தநாளான இன்று (ஜுலை 9) அவரது வெண்கல சிலை, அவரது சொந்த ஊரான தஞ்சை மாவட்டம் நன்னிலம் அருகே உள்ள நல்லமாங்குடியில் இன்று திறக்கப்பட்டுள்ளது. பாலச்சந்தரின் மனைவி ராஜம் சிலையை திறந்துவைத்தார். இந்த விழாவில் கவிஞர் வைரமுத்து, இயக்குனர் வசந்த், தயாரிப்பாளர் பிரமிட் நடராஜன் உள்ளிட்ட பல பிரபலங்கள் கலந்து கொண்டனர். நடிகர் கமல்ஹாசன் இந்த விழாவில் கலந்து கொள்வார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அவர் விழாவிற்கு வரவில்லை.

கே. பாலசந்தரின் இந்த வெண்கல சிலையை கவிஞர் வைரமுத்து தான் நிறுவியுள்ளார். இதுகுறித்து அவர் முன்னர் அளித்த பேட்டியில், “அரைத்த மாவையையே அரைத்துக் கொண்டிருந்த தமிழ் சினிமாவில், ஒரு மடைமாற்றத்தை ஏற்படுத்தியவர் கே. பாலசந்தர். சமூகத்தின் இருட்டின் மீது வெளிச்சம் பாய்ச்சி ஒரு கலாச்சார அதிர்ச்சியை ஏற்படுத்தியவர். தமிழ் சினிமாவுக்கு இந்திய முகம் கொடுத்தவர். அவர் படங்களைப் போலவே அவரும் மறக்கப்படக் கூடாதவர்.

அவர் படங்களில் வெற்றிப்படங்கள் தோல்விப்படங்கள் என்று தரம் பிரிக்க முடியாது. புரிந்து கொள்ளப்பட்டவை, புரிந்து கொள்ளப்படாதவை என்று மட்டுமே பிரிக்கலாம். அவருக்கு சிலை அமைப்பது அவருக்கு நான் செலுத்தும் நன்றி மட்டுமல்ல, முன்னோடிகளை மதிக்கும் ஒரு கலாச்சாரம். இந்தப்பணியை என் வாழ்வின் கடமைகளுள் ஒன்று” என கூறியிருந்தார்.

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest Entertainment news in Tamil.

×Close
×Close