ஷங்கர் இயக்கத்தில், சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தின் '2.0' படத்தின் புரமோஷன் கடந்த சில நாட்களுக்கு முன் தொடங்கப்பட்டது. இப்படத்தின் தயாரிப்பு நிறுவனமான லைக்கா, முதன்முதலாக இப்படம் குறித்த புரமோஷன் வீடியோ ஒன்றை கடந்த ஜூன் 24-ஆம் தேதி தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டது.
அதன்பின், அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில், படத்தின் விளம்பர யுக்திக்காக, ரஜினி, அக்ஷய் குமாரின் புகைப்படங்கள் பிரிண்ட் செய்யப்பட்ட ஹாட் ஏர் பலூன்களை பறக்கவிட்டது. லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் ஓர் இந்தியத் திரைப்படத்தை விளம்பரம் செய்வது இதுவே முதல்முறையாகும்.
இந்நிலையில், இப்படத்தின் டிஜிட்டல் மீட் இன்று நடைபெற்றது. அப்போது பேசிய லைக்கா நிறுவனத்தின் கிரியேட்டிவ் ஹெட் ராஜு மஹாலிங்கம், "ரஜினிகாந்த், அக்ஷய் குமார், எமி ஜாக்சன் நடித்துள்ள 2.0 படம் 3டி தொழில்நுட்பத்தில் தயாரிக்கப்பட்டுள்ளது. மொத்தம் 400 கோடி பட்ஜெட்டில் இப்படம் எடுக்கப்பட்டுள்ளது. இந்தியா முழுக்க 1000 திரையரங்குகளில் 2.0 படத்தை வெளியிட ஏற்பாடு செய்துவருகிறோம். இசைவெளியீடு அக்டோபர் இறுதியில் துபாயில் நடக்கிறது. கேளிக்கை வரி குறித்து சரியான முடிவு வரும்வரை படம் தயாரிக்க மாட்டோம்" என்று அவர் கூறினார்.
மேலும், "சீனாவிலும் விநியோகஸ்தர்களை சந்தித்து பேசிவிட்டதாகவும், அங்கு ஆயிரக்கணக்கான 3டி திரைகள் உள்ளது" என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இதே விழாவில் பேசிய தமிழ் திரைப்பட வர்த்தக சபைத் தலைவர் அபிராமி ராமநாதன், "தமிழக அரசின் கேளிக்கை வரி குறித்து தொடர்ந்து தமிழக அரசுடன் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. இன்று மாலை நல்ல செய்தி வெளிவரும் என எதிர்பார்க்கிறோம்" என்று கூறியுள்ளார்.