கண்ணான கண்ணே பாடலில் வெளிவராத 2வது சரணத்தின் வரிகள் இது தான்

விஸ்வாசம் படத்தில் இடம்பெற்ற கண்ணான கண்ணே பாடலின் இரண்டாவது சரணத்தின் வரிகளைத் தனது முகநூலில் பகிர்ந்திருக்கிறார் பாடலாசிரியர் தாமரை. தொடர்ந்து 7 வாரங்களாக வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் விஸ்வாசம் திரைப்படம் வசூலை அள்ளிக்குவித்து வருகிறது. சிறுத்தை சிவா இயக்கத்தில் அஜித், நயன் மற்றும் அனிகா நடித்திருக்கும் இப்படத்திற்கு டி.…

By: Updated: February 24, 2019, 09:54:03 AM

விஸ்வாசம் படத்தில் இடம்பெற்ற கண்ணான கண்ணே பாடலின் இரண்டாவது சரணத்தின் வரிகளைத் தனது முகநூலில் பகிர்ந்திருக்கிறார் பாடலாசிரியர் தாமரை.

தொடர்ந்து 7 வாரங்களாக வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் விஸ்வாசம் திரைப்படம் வசூலை அள்ளிக்குவித்து வருகிறது. சிறுத்தை சிவா இயக்கத்தில் அஜித், நயன் மற்றும் அனிகா நடித்திருக்கும் இப்படத்திற்கு டி. இமான் இசையமைத்திருக்கிறார்.

இப்படத்தில், அடிச்சு தூக்கு, வேட்டிக்கட்டு, வானே வானே உட்பட அனைத்து பாடல்களுமே ஹிட். ஆனால் இவை எல்லாவற்றிலும், டாப் ஹிட்டாக இருப்பது “கண்ணான கண்ணே” பாடல். பாடலாசிரியர் தாமரையின் வரிகள் வெளியான இந்த பாடல் பலரின் ப்ளே லிஸ்டில் இன்றளவும் மீண்டும் மீண்டும் கேட்கப்பட்டு வருகிறது. அதற்கு இசையும் பாடகர் சிட் ஸ்ரீராமும் ஒரு காரணமாக இருந்தாலும் முக்கிய காரணம் பாடல் வரிகள் தான்.

கண்ணான கண்ணே இரண்டாவது சரணம்

தந்தையின் அரவணைப்பிற்காக ஏங்கும் மகள், மகளின் பாசத்திற்காக ஏங்கும் தந்தையின் உணர்ச்சியின் ஆழத்தைத் தொட்டிருக்கிறது கண்ணான கண்ணே. தற்போது அனைவரும் கேட்டு வரும் பாடலில், ஒரு சரணம் மட்டுமே உள்ளது. ஆனால் இதற்காகத் தாமரை இரண்டு சரணங்கள் எழுதியதாகவும் சில காரணங்களுக்காக அந்த வரிகள் தற்போதுள்ள பாடலில் இடம்பெறவில்லை ஆனால் விரைவில் அதுவும் பாடலாக வெளிவரும் என்று முகநூலில் தெரிவித்திருக்கிறார்.

kannana kanne second saranam lyrics, கண்ணான கண்ணே இசையமைப்பாளர் டி. இமான் மற்றும் பாடலாசிரியர் தாமரை

அவர் தனது முகநூல் பதிவில் கூறியிருப்பது:

“17.2.19. Second Saranam of Kannaana Kannae…. ‘விசுவாசம்’ படத்தின் கண்ணான கண்ணே பாடலின் இரண்டாவது சரணம்.

இந்தப் பாடலுக்கு இரண்டு சரணங்கள் பதிவு செய்ததை ஏற்கெனவே என் முகநூல் பதிவில் குறிப்பிடிருந்தேன். ஒலிப்பேழையிலும் படத்திலும் ஒரு சரணம் மட்டுமே பயன்படுத்தப் பட்டது.
பாடல் வடிவமைக்கப்பட்ட போதே, துண்டுதுண்டாக இரண்டு மூன்று இடங்களில் வருவது போலத்தான் திட்டமிடப் பட்டிருந்தது. சூழ்நிலைக்கேற்ப இரண்டு இடங்களில் பயன்படுத்தலாம் என்று யோசனை !. அப்பா-மகள் உணர்வுக் காட்சிகள் என்பதால் பேசுவதை விட, பாடல் மூலம் நன்றாகக் கடத்தலாம் என்பது புரிதல் !. அந்த வகையில் நான் இரண்டு வெவ்வேறு இடங்களில் பயன்படுத்துவது போன்று எழுதி விட்டேன்.
பிறகுதான் ( எனக்குத்) தெரிந்தது ஒரு சரணம் உள்ள வகையில் இமான் மெட்டமைத்திருக்கிறார் என்று !. ( நீளமான பல்லவி, நீ…ளமான சரணம், மாற்று அனுபல்லவி ). எழுதுமுன்பு எனக்குச் சொல்லப்படவில்லை. சிவா மறந்து விட்டார். படப் பிடிப்புக்கும் போய் விட்டார். இரண்டு மாதம் இடைவெளி விடப்பட்டு போடப்பட்ட மெட்டு அல்லவா ??.

எழுதிய பிறகு இரண்டு சரணங்களுமே அருமையாக இருந்ததால் இயக்குநர் சிவாவுக்கு நிராகரிக்க மனமில்லை. உழைப்பைக் கொட்டி எழுதி விட்டதால் எனக்கும் மனமில்லை விட்டுவிட !. எனவே பாடல் பதிவின் போது இரண்டாவது சரணத்தையும் பதிந்தோம்.
சித்ஸ்ரீராமின் குரலில் அதைக் கேட்கும்போது…. அடடா…ஆகா…????????
ஏற்றுக் கொள்வதைத் தவிர வேறு வழியேயில்லை ????. ஆனாலும் படத்தொகுப்பின் போதும் பட வெளியீட்டு அவசரத்திலும் சேர்க்க முடியாமல் போயிற்று என்றார் சிவா. எல்லோருக்கும் பெருத்த ஏமாற்றம் ! ????.

பாடல் பெரும் வெற்றி பெற்ற பிறகு, எல்லோரும் அந்த இரண்டாவது சரணத்தை வெளியிடுங்கள் என்று துளைக்க ஆரம்பித்தார்கள். இப்போதும் வெளியிட ( ஒலி மட்டும் ) வாய்ப்பிருக்கிறது. வெளியிட முயல்கிறேன் என்று சிவா சொல்லியிருக்கிறார்.
அதற்கிடையில் நான் பாடல் வரிகளை வெளியிடுகிறேன். படித்து ரசியுங்கள்!. பாடகர்கள் பாடி மகிழுங்கள் !.

சூழல் : இரண்டு வயதில், குழந்தையான தன் மகளைப் பிரிந்த தந்தை மீண்டும் 12 வயதில்தான் சந்திக்கிறார். அவளை உடனிருந்து வளர்க்கத் தவறியவர், தான் இழந்த 10 ஆண்டுகளின் வலி மற்றும் தான்தான் தந்தை என்று காட்டிக் கொள்ள முடியாத சூழலில் வேதனைப் படுகிறார். காலம்தான் எப்படியெல்லாம் கல்வீசி ஆடுகிறது !

கண்ணான கண்ணே!
இரண்டாவது சரணம் பாடல் வரிகள்.
————————————————————–
( ஆண் )

தொலைவினிலே இருந்தும்
தொட முயன்றேன் தினமும் !
கனவினிலே அதையும்
செய்தேன் கண்ணே !

அருகருகே நகர்ந்தும்
அடங்குகிறேன் தினமும் !
முகமலரும் சிரிப்பும்
பொய்தான் கண்ணே !

காலங்கள் கல் வீசி ஆடும்…
ஒரு தாயம் விழவேண்டும்..!
இல்லாத பொல்லாத காயம்…
பட நேரும் எழவேண்டும் !

தொடுவானம் தூரம்தான்…
தொடும்போது நீளும்தான் !

விலை இல்லாத ஒன்று
அன்பு என்று
இதோ அறிந்தேன்..!

( முழுக்க முழுக்க மெட்டுக்கு எழுதப்பட்ட பாடல் ).

இணைப்பு :

விசுவாசம் படத்தின் பாடலாசிரியர்கள் அடங்கிய பட விளம்பரம்.
என் கையெழுத்தில் இரண்டாவது சரணம் ☺.”

அஜித் ரசிகர்கள் மட்டுமின்றி பாடலாசிரியர் தாமரையின் தீவிர ரசிகர்களும் இந்த இரண்டாவது சரணத்தின் வரிகளை கேட்க ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர்.

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Entertainment News by following us on Twitter and Facebook

Web Title:Lyricist thamarai releases unheard lyrics of kannana kanne song

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
பிரபலமானவை
Advertisement

இதைப் பாருங்க!
X