பெரும் எதிர்பார்ப்புக்கு இடையில் பாலாஜி மோகன் இயக்கத்தில் தனுஷ் மற்றும் சாய் பல்லவி நடிப்பில் வெளியாகி இருக்கும் மாரி 2 படத்தின் சுடச்சுட விமர்சனம் இதோ...
படம் எப்படி?
பிரபல ரவுடியான மாரியை (தனுஷ்) கொலை செய்ய பல முயற்சிகள் நடக்கிறது. அவை எல்லாவற்றையும் தவிடு பொடியாக்கி தனக்கென தனி ராஜ்ஜியத்தை உருவாக்கி ராஜாவாக வாழ்கிறார் மாரி. இவரின் கேங்கை கலையும் (கிருஷ்ணா) சேர்ந்து தான் வழிநடத்துகிறார்.
மாரியை சுற்றி சுற்றி காதலிக்கிறார் அராத்து ஆனந்தி (சாய் பல்லவி). கோடிக்கோடியாக கொட்டிக் கொடுத்தாலும் சரி போதைப்பொருள் கடத்துவதில்லை என தீர்மானமாக இருக்கும் மாரியை, கொலை செய்ய வேண்டும் என்ற நோக்கில் ஜெயிலில் இருந்து வருகிறார் வில்லன் பேஜா. (டொவினோ தாமஸ்)
இதற்கிடையில் ஆனந்தியின் காதல் மழையில் வேறுவழியின்றி மாரியும் க்ளின் போல்டாக படம் அடுத்தக்கட்டத்திற்கு நகர்கிறது. ஜெயிலில் இருந்து வெளியே வரும் பேஜா ஆடும் பகடை ஆட்டத்தில் மாரி - கலை இடையேயான நட்பு முறிகிறது.
மாரி மீது கலை பகை கொண்டு அவரை கொல்ல ஆட்களை அனுப்புகிறார். இதில் ஆனந்தி மாட்டிக் கொள்கிறார். அடுத்து ஆனந்தி என்ன ஆகிறார்? மாரியைக் கொல்வதையே லட்சியமாகக் கொண்ட பேஜாவின் திட்டம் என்ன ஆனது? கலை உண்மை நிலையை உணர்ந்தாரா?
இதுப்போன்ற பல கேள்விகளுக்கு வழக்கமான மசாலா படமாக பதில் சொல்கிறது மாரி2.
Dhanush and Sai Pallavi's 'Maari 2' Movie Review in Tamil: மாரி 2 ரசிகர்களை கவர்ந்ததா?
மாரி முதல் பாகம் கலவையான விமர்சனங்களை பெற்றப்போதிலும் ’we want naughty don' என ரசிகர்களின் வேண்டுக்கோளுக்காவே பாலாஜி மோகன் மாரி 2 வை உறுதி செய்தார். அந்த உறுதியில் ஜெயித்தும் காட்டியிருக்கிறார்.
ஒட்டு மொத்த படத்தையும் தனது தோளில் சுமக்கிறார் தனுஷ். நக்கல், நையாண்டி, கலாய் , பஞ்ச் என பட்டையை கிளப்புகிறார். க்ளைமேக்ஸில் 6 பேக்ஸ் சீன் தனுஷ் ரசிகர்களுக்கு செம்ம ட்ரீட். தனுஷ் பேசும் ஒவ்வொரு வசனத்திற்கும் தியேட்டரில் விசில் பறக்கிறது. வடசென்னை போன்ற சீரியஸ் படங்களை தந்துவிட்டு, நடுவில் ரசிகர்களுக்காகவே இதுப்போன்ற மசாலா படங்களை தனுஷ் தர நினைப்பது அவரின் தனி கணக்கு போல.
அராத்து ஆனந்தியாக வரும் சாய்பல்லவி மீண்டும் மீண்டும் பார்க்க தோன்றும் அழகோ அழகு. நடிப்பில் தனுஷூடன் சாய்பல்லவி சண்டை போடுவது அப்பட்டமாக தெரிகிறது. நம்ம மலரு டீச்சரா இது? எனும் அளவிற்கு ரசிகர்களை தனது நடனத்தால், பேச்சால் கட்டி இழுக்கிறார் சாய்பல்லவி.ரவுடி பேபி பாடல் விஷூவல் விருந்து. சொல்லப்போனால் இந்த பாட்டில் தனுஷையே தூக்கி சாப்பிட்டு விட்டார் சாய்பல்லவி.
வில்லன் டொவினோ தாமஸ் மலையாள இறக்குமதி. இவர் பேசும் பல இடங்களில் மலையாள வாசம் அதிகம் தெரிகிறது. ஒருக்கட்டத்தில் தனுஷே “உன்னை பார்த்தால் கூட பயமா இல்லை.. நீ பேசுற லெந்த்தான டயலாக் கேட்க தான் பயமா இருக்கு” என கூறும் அளவுக்கு படத்தில் இவருக்கு அவ்வளவு நீண்ட வசனங்கள்.
ரோபோ ஷங்கர்- கல்லூரி வினோத் முதல் பாகத்தை போலவே இதிலும் காமெடிக்காவே மாரியுடன் நிற்கிறார்கள். பெரிதாக காமெடி ட்ராக் இல்லை என்றாலும், ரோலுக்கு தகுந்தபடி நடித்துள்ளனர். வரலட்சுமி படத்தில் வரும் நேரம் குறைவு என்றாலும் நேர்த்தியான நடிப்பை தந்திருக்கிறார். ஓம் பிரகாஷின் ஒளிப்பதிவு படத்தின் காட்சிக்கு பலம் சேர்க்கிறது.
யுவனின் இசையில் பாடல்கள் ஒகே ரகம். ஆனால் பின்னணி இசையில் இன்னும் சற்றும் கவனம் சேர்த்திருக்கலாம். முதல் பாதியில் விறுவிறுப்பாக நகரும் திரைக்கதை இரண்டாம் பாதியில் ரசிகர்களை பொறுமை இழக்க வைக்கிறது. ஒரு கட்டத்தில் அடுத்த காட்சி என்ன என்பதை ரசிகர்களே யூகித்து விடுகின்றனர்.
படத்தின் கதைக்கு ஏற்றபடி திரைக்கதையில் தேவையில்லாத காட்சிகளை குறைத்திருந்தால் படம் இன்னமும் விறுவிறுப்பாக இருந்திருக்கும்.
இயக்குனர் கவனிக்க மறந்தது ஏன்?
மாரி 2 வில், முதல் பாகத்திற்கான தொடர்ச்சி என எந்த இடத்திலும் தெரியவில்லையே ஏன்? மாரியில் ஹீரோ அளவிற்கு மாஸாக காட்டப்பட்ட புறாக்கள் மாரி 2 வில் எங்கே?
இதுப்போன்ற லாஜிக் விதிமீறல்கள் ஏகப்பட்டது இருந்தாலும் தனுஷ் ரசிகர்களுக்கு படம் டாப் டக்கர் தூள்.. மற்றவர்களுக்கு?
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.