20 வருடங்களுக்கு முன்பு நின்றுபோன ஜல்லிக்கட்டை எப்படியாவது நடத்திவிட வேண்டும் எனத் துடிக்கும் ஹீரோ, அதை நிறைவேற்றினாரா... இல்லையா... என்பதுதான் படத்தின் கதை.
மதுரைக்குப் பக்கத்தில் உள்ள கிராமத்தைச் சேர்ந்தவர் சமுத்திரக்கனி. சமூகத்துக்கு எதிராக யார் என்ன செய்ய முயற்சி செய்தாலும், அதைத் தடுத்து மக்களைக் காப்பாற்றுவார். அந்தப் பஞ்சாயத்தில் வேறு வேறு ஜாதியைச் சேர்ந்த இரண்டு குழுக்கள் எப்போதும் முறைத்துக் கொண்டே இருக்கின்றனர். அதில் உயர் ஜாதியைச் சேர்ந்த சமுத்திரக்கனி, தங்கள் ஜாதியினரையே பகைத்துக் கொண்டு இன்னொரு ஜாதியினருக்கும் ஆதரவாக நடந்து கொள்வார்.
அந்தப் பஞ்சாயத்தில் நடைபெறும் ஜல்லிக்கட்டு, மிகவும் விசேஷமானது. ஜல்லிக்கட்டு பிரச்னையில் இரண்டு ஜாதிகளிலும் தலா ஒருவர் இறந்துவிட, இனிமேல் அந்த ஊரில் ஜல்லிக்கட்டு நடத்த தடைவிதிக்கிறார் கலெக்டர். அத்துடன், சமுத்திரக்கனி வேறு கொலை செய்யப்படுகிறார். இதனால், அதன்பிறகு ஜல்லிகட்டை எடுத்து நடத்த சரியான ஆள் இல்லாமல் போகிறது.
சமுத்திரக்கனி இறந்ததும், அவர் மனைவியையும், சின்ன வயதாக இருக்கும் ஹீரோ சண்முக பாண்டியனையும் மலேசியாவுக்கு அழைத்துப் போகிறார் சண்முக பாண்டியனின் மாமா. 20 வருடங்களுக்குப் பிறகு திருமணத்திற்கு பெண் பார்க்கும் சாக்கில் சொந்த ஊருக்கு வரும் சண்முக பாண்டியன், தன் அப்பாவைக் கொன்றவனைப் பழிவாங்கத் துடிக்கிறார். சமுத்திரக்கனியை கொன்றது யார்? 20 வருடங்களுக்குப் பிறகாவது அந்த ஊரில் ஜல்லிக்கட்டு நடந்ததா? என்பது மீதிக்கதை.
வழக்கமாக முத்தையா இயக்கும் ஜாதிக்கதையை, இந்த முறை பி.ஜி.முத்தையா இயக்கியிருக்கிறார். படத்தின் ஹீரோ என்று பார்த்தால் சமுத்திரக்கனி தான். முறுக்கிய மீசையும், வெடைப்புமாக அச்சு அசல் மதுரைக்காரனுக்குரிய மிடுக்கோடு இருக்கிறார். சண்முக பாண்டியனைவிட அவருக்குத்தான் படத்தில் அதிக இடம்.
விஜயகாந்த் மகன் சண்முக பாண்டியனுக்கு இதுதான் முதல் படம். அவருக்கான குறைந்த காட்சிகளிலும் நடிக்க நிறையவே மெனக்கெட்டிருக்கிறார். ஹீரோயின் மீனாட்சிக்கு பெரிதாக வேலையில்லை. எப்போதும் முறைப்பாகவே திரிந்து கொண்டிருக்கும் வேல.ராமமூர்த்தி மற்றும் மைம் கோபியைப் பார்க்கும்போது ஒருகட்டத்தில் கடுப்பு ஏற்படுகிறது.
பி.ஜி.முத்தையா ஒளிப்பதிவில் ஒவ்வொரு காட்சியும் ரசனையாக இருக்கிறது. உடுக்கை, மேளம், உருமி என கிராமத்து இசையில் பின்னணியை அருமையாகக் கொடுத்துள்ளார் இசையமைப்பாளர் சந்தோஷ் தயாநிதி. கதை நன்றாக இருக்கிறது. வேறு ஹீரோ நடித்திருந்தால் இன்னும் நன்றாக இருந்திருக்கும்.
மதுர வீரன் - பெயரில் மட்டும்தான்...
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.