Advertisment
Presenting Partner
Desktop GIF

மகளிர் மட்டும் - அத்திப்பூக்களை தினமும் சூடுவோம்!

ஜோதிகா நடிப்பில் வெளியாகியுள்ள மகளிர் மட்டும் திரைப்படம் பெண்களுக்கானது மட்டுமல்ல, ஆண்களும் கட்டாயம் பார்க்க வேண்டிய படம்.

author-image
kosal ram
புதுப்பிக்கப்பட்டது
New Update
magalir mattum

வி.சாரதா

Advertisment

படத்தின் பெயரை கேட்டவுடன் பெண்களைக் குறித்த படம் என்பது தெளிவாகிறது. ஆண்களைத் திட்டி எடுத்திருப்பார்கள் என்ற எண்ணம் வரலாம். அதற்காக ஒரு வசனத்தை சுட்டிக்காட்டுகிறேன். "எங்க அப்பாவைத் தவிர வேறு யாரும் நல்லவர்கள் இல்லை என்று எண்ணித் திருமணம் செய்து கொள்ள வேண்டாம் என்று நினைத்துக் கொண்டிருந்தேன். ஆனால் எல்லா ஆண்களும் மோசம் இல்லை. இந்தச் சிஸ்டம் தான் தப்பு" என்று சொல்கிறார் ஜோதிகா. எனவே சமூக அமைப்பு முறையில் குறைபாடுகளை சுட்டிக்காட்டும் இந்தப் படம் அனைவருக்குமானது. குறிப்பாக ஆண்கள் பார்த்து உணரவேண்டியது.

ஆணும் பெண்ணும் சமம். ஒருவருக்கொருவர் சமமாக வாழவேண்டும் என்பது கதையின் கரு. நம் அன்றாட வாழ்வில் காணும் சாதாரணப் பெண்கள் குடும்பத்துக்குள் சந்திக்கும் இன்னல்களை, எவ்வளவு எளிதாகக் கடந்து சென்று விடுகிறோம் என்று உணர்த்துகிறது. மனைவியைப் பெயர் சொல்லிக் கூப்பிடாமல் "ஏய்" என்று கூப்பிடுவது, காலை முதல் இரவுவரை வேலை செய்தாலும், கணவனிடம் திட்டு வாங்காமல் தூங்கச் செல்ல முடியாதது, சாப்பாட்டில் முடி இருந்தால் தட்டைத் தூக்கி எரிவது - இவையெல்லாம் ஒரு பெண் எதிர்கொள்ளும் அன்றாட பிரச்சனைகளாக அங்கீகரித்து சுட்டிக் காட்டுகிறார் இயக்குநர் பிரம்மா.

சுமார் 50 வயதில் இருக்கும் மூன்று பெண்களாக ஊர்வசி, சரண்யா, பானுபிரியா (பள்ளிக்கால தோழியர்) - அவர்களுடன் ஆவணப்பட இயக்குநரும் ஊர்வசியின் மருமகளுமாக ஜோதிகா. பள்ளித் தோழியர் மூவரையும் சந்திக்க வைத்துத் தங்களது பள்ளிக்காலச் சேட்டைகளை நினைவூட்டி பொறுப்புகளிலிருந்து மூன்று நாட்கள் விடுப்பு எடுத்துத் தங்கள் சிறு சிறு ஆசைகளை நிறைவேற்றிக் கொள்ளவும், வாழ்க்கை அனுபவங்களை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளவும் உதவுகிறார் ஜோதிகா.

ஆணாதிக்கம் எப்போதும் வன்முறையாகவே வெளிப்படாது. பிரசவ வலியில் துடித்துக் கொண்டிருக்கும் அண்ணிக்கு ஆட்டோ பிடிக்க ஓட வேண்டிய சமயத்தில் கூட "என் சட்டையை எடுறீ" என்று தங்கையை அதட்டுவதிலும் ஆணாதிக்கம் இருக்கிறது. வயதான தன் அம்மாவைக் கவனித்துக் கொண்டிருந்த மனைவி ஊருக்குச் செல்கிறாள் என்றதும், “திரும்பி வந்துடுவல்ல" என்று கெஞ்சிக் கேட்பதிலும் ஆணாதிக்கம் இருக்கிறது என்பதை உணர்த்துகிறது இந்தப் படம்.

நடு இரவில் நகை அணிந்து செல்வதில்லை சுதந்திரம். மனதுக்குப் பிடித்தவனைத் திருமணம் செய்து கொண்டு அவனுடனேயே வாழ்வது தான் சுதந்திரம் என்ற ஜோதிகாவின் வசனம் சாதிச்சமூகத்தில் ஒரு பெண் எப்படி சிறைவைக்கப்பட்டிருக்கிறாள் என்று துணிச்சலாகக் கூறுகிறது.

தமிழ் திரைப்படங்கள் ஆண்களின் முதல் காதலைச் சிலாகித்துக் கூறியிருக்கின்றன. ஆனால் முதல் முறையாகப் பெண்கள் தங்களின் பள்ளி பருவ முதல் காதலைப் பகிர்ந்து கொள்வதையும், அதுவும் மாமியார் தனது மருமகளிடம் தன் காதலைப் பகிர்ந்து கொள்வதை காட்சிப்படுத்தியதற்கு இயக்குநருக்குப் பாராட்டுகள்.

நான் உனக்கு நிறையக் கஷ்டம் கொடுத்து விட்டேன், என்னை மன்னித்து விடு என்று அழுது புலம்பினாலும் தினமும் குடித்து விட்டே வீடு திரும்பும் கணவன் லிவிங்ஸ்டனிடம் மனைவி சரண்யா, “இதற்கு மன்னிப்பு கிடையாது. அடி வாங்குகிறியா?” என்று கேட்கிறார். பெண்களின் நிலை கண்டு அவர்களின் மீது பரிதாபமோ, அல்லது குற்ற உணர்ச்சியோ மட்டும் போதாது. அது செயல்களில் தெரிய வேண்டும் என்பதை உணர்த்துகிறது.

முதல் காட்சிகளில் "ஹை கோம்ஸ்" என்று பெயர் சொல்லிக் கூப்பிட்டு ஊர்வசியின் மடியில் ஜோதிகா படுக்கும்போது யாராக இருந்தாலும் இது ஊர்வசியின் மகள் என்று தான் நினைத்திருப்பார்கள். ஆனால் பிறகு தான் தெரிகிறது ஜோதிகா ஊர்வசியின் மருமகள் என்று. நமது தமிழ் சீரியல்கள் கொச்சைப்படுத்தியுள்ள மாமியார்-மருமகள் உறவுக்குப் புத்துணர்ச்சி கொடுத்திருக்கிறது இந்தப் படம்.

நடிகர்களின் பெயர் போடும்போது, இவர்களுடன் ஜோதிகா என்று டைடில் கார்டு வருகிறது. அரங்கம் அதிரக் கைதட்டுகள் எழுகின்றன. கதாநாயகர்களின் பெயரைச் சொல்லியே படத்தை அடையாளம் காணும் நம் சமூகத்தில், இந்தக் கைதட்டலை ரசிக்காமல் கண்டிப்பாக எந்தப் பெண்ணாலும் அரங்கில் இருக்க முடியாது. ஜோதிகா கம்பீரமாகப் புல்லட் ஓட்டும் காட்சிகளுக்கு அரங்கில் விசில் பறக்கின்றன.

கருப்புச் சட்டை அணிந்து கொண்டு கைகளை மடித்து விட்டுத் திருமண நிகழ்ச்சியில் பங்கேற்றுப் பேசும்போதும், சுவரில் எழுதப்பட்டிருக்கும் ஸ்வச் பாரத் விளம்பரத்தைப் படம் பிடித்துக் கொண்டே அந்த விளம்பரத்துக்குக் கீழ் மலக்குழிக்குள் இறங்கும் துப்புரவு பணியாளர்களைப் படம் பிடிக்கும்போதும், வீட்டுச் சுவரில் தொங்கும் பறையை அடித்துக் கொண்டாடும் போதும், தந்தை கேரளத்துக்காரர், தாய் தமிழ் எழுத்தாளர் என்று கூறும்போதும், சாதி கும்பலிடமிருந்து காப்பாற்றித் திருமணம் செய்து வைக்கும் தம்பதியினருக்குச் சங்கர், கவுசல்யா என்று பெயரிட்டிருப்பதும் என சமகாலச் சமூக எதார்த்தங்கள் நினைவூட்டப்படுகின்றன.

ஊர்வசி, சரண்யா, பானுபிரியா-மூன்று பேரும் போட்டி போட்டு நடித்துள்ளனர். மிக மிக இயல்பான நடிப்பு. அவர்களின் பள்ளி பருவத்துக் கதாபாத்திரங்களுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் பார்ப்பதற்கு அவர்களையே போலவே இருப்பது கூடுதல் சிறப்பு. அந்த மூவரும் கூட நடிப்பில் அசத்தியிருப்பதால் அதே நபரைப் பார்ப்பது போலவே இருக்கிறது. 38 ஆண்டுகள் கழித்துப் பானுபிரியாவும் ஊர்வசியும் பார்த்துக் கொண்டாலும் அப்போது தான் பிரிந்து சென்றது போலச் சகஜமாகக் கதைகள் பரிமாறிக் கொள்வது உண்மையான நட்பின் வெளிப்பாடாகவே இருந்தது.

சமையலறையில் நின்று கொண்டு பானுபிரியாவின் கணவரை ஊர்வசி கிண்டலடிக்க அதைப் பானுபிரியாவே ரசிப்பது அவர்களின் பள்ளி பருவக் காட்சிகளை நினைவுபடுத்தும் அளவு இயற்கையாக அமைந்துள்ளது.

பெத்தவளுக்கு சமைச்சு போட்டா செத்த பிறகு சொர்க்கம், கட்டியவளுக்குச் சமைச்சு போட்டாம் வாழும் போதே சொர்க்கம் என்று ஊர்வசியின் மகன் கூறும்போது அரங்கில் கிடைக்கும் கைதட்டல்களுக்குப் பின் பல கதைகள் இருக்கின்றன. இது போன்ற வசனங்கள் ஸ்டார் நடிகர்களின் பஞ்ச் டயலாக்குகளை விட அதிக வரவேற்பு பெற வேண்டியவை.

தாயை மதிக்காத மகன் உடனே திருந்தி விடுவதும், கணவர் குடியை விட்டுவிடுவதும் மிக எளிதாக நடந்து விடாது. படத்தை நல்ல முடிவை நோக்கி நகர்த்த வேண்டும் என்பதற்காகக் காட்டப்பட்டிருக்கிறது என்றே எடுத்துக் கொள்ளலாம். அக்டோபர் 30ம் தேதி தான் சந்திக்க வேண்டும் என்ற நிர்ப்பந்தமும், அதற்கான காரணமும், அதற்காகவே எடுக்கும் முயற்சிகள் கதையின் சுவாரசியத்திற்காக சேர்க்கப்பட்டுள்ளன.

மகளிர் மட்டும் திரைப்படம் பெண்கள் கொண்டாடி வரவேற்கும் படமாக அமைந்துள்ளது. அனைவரும் பார்க்கவும், ஒவ்வொரு குடும்பத்திலும் நிலவும் ஆணாதிக்கப் போக்குகளைச் சுட்டிக்காட்டுவதாக இருக்கிறது. ஏற்கனவே குற்றம் கடிதல் திரைப்படம் மூலம் நமக்கு அறிமுகமான இயக்குனர் பிரம்மா - மகளிர் மட்டும் திரைப்படம் மூலம் கவனிக்கத்தக்க படைப்பாளியாக, சமூக பொறுப்பு உணர்ந்த ஒருவராக வெளிப்பட்டுள்ளார். இருப்பினும் இத்தகைய திரைப்படங்கள் 'பெண் சந்தையை' குறிவைத்து அத்தி பூத்தார்ப்போல வரும் நிலைமை மாற வேண்டும். ஒவ்வொரு திரைப்படத்திலும் 'நாயகி' பாத்திரங்கள், யதார்த்த பெண்களுக்கானதாக மாற்றப்பட வேண்டும். அதை நோக்கி நம் படைப்பாளிகள் நகர வேண்டும் என்பதை இங்கே அழுத்தமாக குறிப்பிட வேண்டியுள்ளது.

Tamil Movie Jothika
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment