”எந்திரன் 2.ஓ திரைப்படத்தில் 3டி கேமிராவில் எடுக்கப்பட்ட காட்சியை திரையில் பார்த்தபோது நான் வியந்துவிட்டேன். அந்த காட்சியை பலமுறை பார்த்தேன். எத்தனை முறை பார்த்தேன் என்பதே தெரியவில்லை”, என நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.
Advertisment
தமிழ் திரையுலகம் மட்டுமல்லாமல் ஒட்டுமொத்த இந்திய திரையுலகமே வியக்கும் வகையில், 3டி கேமிராவில் நேரடியாக எடுக்கப்படும் எந்திரன் 2.ஓ திரைப்படத்தின் வெளியீட்டுக்காக காத்திருக்கிறது. ஆனால், அந்த திரைப்படத்தின் தொழில்நுட்பம், கதைக்களம் குறித்து படக்குழுவினர் ரகசியமாக வைத்துள்ளனர். இருப்பினும், அவ்வப்போது சின்ன சின்ன விஷயங்களை மட்டும் மக்களுக்கு தெரிவிப்பர். இதனால், ரசிகர்கள் அனைவரின் ஆர்வமும் அதிகரிக்கும்.
அதுபோல்தான், எந்திரன் 2.ஓ திரைப்படத்தின் மேக்கிங் வீடியோவின் இரண்டாம் பாகத்தை படக்குழுவினர் சனிக்கிழமை வெளியிட்டனர். அந்த வீடியோ வெளியானதிலிருந்து, எந்திரன் 2.ஓ. திரைப்படம் எப்போது வெளியாகும் என்ற ஆர்வம் அதிகரித்துள்ளது.
3டி கேமிராவில் நேரடியாக எடுக்கப்படும் இத்திரைப்படத்தின் தொழில்நுட்ப சிறப்புகள், காட்சிகளின் துல்லியம் குறித்து படக்குழுவினர் அந்த வீடியோவில் பேசினர்.
Advertisment
Advertisements
வீடியோவில் பேசிய ரஜினிகாந்த், “சங்கர் இத்திரைப்படத்தின் திரைக்கதையை எழுதும்போதே 3டி தொழில்நுட்பத்தை மனதில் வைத்துக்கொண்டுதான் எழுதியுள்ளார். அதுதான் மிக முக்கியமானது. காட்சிகளை திரையில் பார்த்தபோது நான் வியந்துவிட்டேன். பலமுறை பார்த்தேன். எத்தனை முறை பார்த்தேன் என்பதே தெரியவில்லை. சங்கரை பாராட்டுகிறேன். ஏனென்றால் இது பிரமிப்பாக உள்ளது. மக்களின் அனுபவம் எப்படி இருக்கும் என்பதை காண காத்திருக்கிறேன். பெரிய பெரிய ஹாலிவுட் 3டி திரைப்படங்களுக்கு எந்திரன் 2.ஓ சளைத்தது அல்ல.”, என கூறினார்.
அதேபோல், இயக்குநர் சங்கர் கூறுகையில், ”படத்தின் திரைக்கதைக்கு 3டி தொழில்நுட்பம் தேவைப்பட்டதால், அத்தொழில்நுட்பத்தில் எடுத்துள்ளோம். பல ஹாலிவுட் திரைப்படங்கள் முதலில் 2டி கேமிராவில் படமாக்கப்படும். பின்பு, அதனை 3டி தொழில்நுட்பத்திற்கு மாற்றுவார்கள். ஆனால், எந்திரன் 2.ஓ திரைப்படம் திறன்வாய்ந்த 3டி கேமிரா மூலம் நேரடியாகவே படமாக்கப்பட்டுள்ளது. படத்தின் காட்சிகளை திரையில் பார்க்கும்போது, அந்த கதை எங்கு நடக்கிறதோ, அங்கு நான் இருப்பதுபோன்ற உணர்வு ஏற்படுகிறது. இது திரைப்படம் என்பதை விட ஒரு அனுபவம் என்றுதான் சொல்ல வேண்டும். இத்திரைப்படம் 3டி திரைப்படங்களை எடுக்க பல தயாரிப்பாளர்களுக்கு ஊக்கமாக இருக்கும்.
மேக்கிங் வீடியோவில், படத்தின் ஒளிப்பதிவாளர் நீரவ் ஷா, ஸ்டீரியோகிராஃபர் ரே ஹனீசன், நடிகர் அக்ஷய் குமார் ஆகியோரும் படத்தின் சிறப்பம்சங்கள் குறித்து பேசினர்.