விஜய் நடிப்பில் கடந்த வாரம் ரிலீஸான படம் ‘மெர்சல்’. அட்லீ இயக்கிய இந்தப் படம், விஜய்க்கு 61வது படம். விஜய் மாதிரியான முன்னணி நடிகர்கள் ஒரு படத்தில் நடிக்கும்போதே அவர்களின் அடுத்தடுத்த படங்கள் பற்றிய அறிவிப்பு வெளியாகிவிடும். அப்படி ‘மெர்சல்’ படத்தில் நடித்துக் கொண்டிருக்கும்போதே அடுத்த படத்தை, அதாவது ‘தளபதி 2’ படத்தை ஏ.ஆர்.முருகதாஸ் தான் இயக்கப் போகிறது என்ற விஷயம் வெளியானது.
இந்தத் தகவல் இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை என்றாலும், ‘தளபதி 2’ படத்தின் இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் தான் என்கிறார்கள். ஏற்கெனவே விஜய்யை வைத்து ‘துப்பாக்கி’ மற்றும் ‘கத்தி’ என இரண்டு ஹிட் படங்களைக் கொடுத்த ஏ.ஆர்.முருகதாஸ், மூன்றாவது முறையாக விஜய்யுடன் இணைய இருக்கிறார்.
‘தளபதி 2’ படத்தை, ‘கத்தி’ படத்தைத் தயாரித்த லைகா நிறுவனமே தயாரிக்கிறது என்றார்கள். ஆனால், சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிப்பதாகப் பின்னர் செய்தி வெளியானது. ஆனால், இதுவரை எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளிவராத நிலையில், மலையாள ஒளிப்பதிவாளரான கிரீஷ் கங்காதரன் ‘தளபதி 2’ படத்துக்கு ஒளிப்பதிவு செய்யப் போகிறார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
துல்கர் சல்மான் நடித்த ‘நீலகாசம் பச்சகடல் சுவன்ன பூமி’ படத்தின் மூலம் ஒளிப்பதிவாளராக அறிமுகமான கிரீஷ் கங்காதரன், மலையாளத்தில் வெளியான ‘குப்பி’ படத்துக்கான கேரள அரசின் நடுவர் சிறப்பு விருதைப் பெற்றவர்.
ஃபஹத் ஃபாசில் நடித்த ‘மரியம் முக்கு’, துல்கர் சல்மான் நடித்த ‘களி’, ‘சோலோ’, நிவின் பாலி - த்ரிஷா நடித்துவரும் ‘ஹே ஜூடு’ ஆகிய படங்களுக்கு ஒளிப்பதிவு செய்துள்ள கிரீஷ் கங்காதரன், முதன்முறையாக விஜய் படத்துக்கு ஒளிப்பதிவு செய்கிறார். ‘சோலோ’ மூலம் தமிழில் அறிமுகமானாலும், ‘தளபதி 62’ படம்தான் அவரின் நேரடி தமிழ்ப் படமாக இருக்கப் போகிறது.