/indian-express-tamil/media/media_files/2025/10/17/lokha-chapter-1-chandra-2025-10-17-20-53-11.jpg)
தென்னிந்திய சினிமாவில் ஹீரோக்களுக்கு டஃப் கொடுக்கும் வகையில், வசூலில் பெரிய சாதனை படைத்த படம் 'லோகா சாப்டர் 1: சந்திரா'. மலையாளத் திரையுலகில் தொடர்ந்து வசூல் சாதனைகளை முறியடித்து வரும் இந்த படம் விரைவில் ஒடிடி தளத்தில் வெளியாக உள்ளது.
கல்யாணி பிரியதர்ஷன் நடிப்பில் வெளியான 'லோகா சாப்டர் 1: சந்திரா' திரைபபடம் இந்த ஆண்டின் மிகப்பெரிய வெற்றிப்படங்களில் ஒன்றாக மாறியுள்ளது. உலக அளவில் ரூ. 300 கோடிக்கு மேல் வசூலித்து சாதனை படைத்துள்ளது. இதன் மூலம் ரூ300 கோடி வசூல் மைல்கல்லை எட்டிய முதல் மலையாளப் படம் என்ற வரலாற்றையும் 'லோகா' உருவாக்கியுள்ளது. இந்த திரைப்படம் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிய நிலையில், தற்போது இப்படம் டிஜிட்டல் தளத்தில் எங்கு வெளியாகும் என்பதைப் படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக உறுதி செய்துள்ளனர். இந்த திரைப்படம் விரைவில் ஜியோ ஹாட்ஸ்டார் தளத்தில் ஒளிபரப்பாகும் என்று தயாரிப்பாளர்கள் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.
இத்தளம் வெளியிட்டுள்ள ஒரு பதிவில், "ஒரு புதிய யுனிவர்ஸின் ஆரம்பம். லோகா சாப்டர் 1: சந்திரா - விரைவில் வருகிறது" என்று ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளது. அது சமயம், சரியான தேதி இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை என்றாலும், அக்டோபர் 17 (இன்று) முதல் இத்திரைப்படம் ஒளிபரப்பாகும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனால் ரசிகர்கள் இப்போதே சமூக ஊடகங்களில் தங்கள் உற்சாகத்தை வெளிப்படுத்தி வருவதுடன், இந்தி மற்றும் பிற மொழிகளில் டப்பிங் செய்யப்பட்ட பதிப்புகளையும் கோரி வருகின்றனர்.
டொமினிக் அருண் எழுதி இயக்கிய இப்படத்தை துல்கர் சல்மான், தனது வேஃபாரர் ஃபிலிம்ஸ் பேனரின் கீழ் தயாரான இந்தப் படத்தில் கதாநாயகியாகச் சக்தி வாய்ந்த சூப்பர் ஹீரோயின் கேரக்டரில் கல்யாணி பிரியதர்ஷன் நடித்துள்ளார். இவருடன் நஸ்லென், சந்து சலீம் குமார், அருண் குரியன் மற்றும் சாண்டி மாஸ்டர் ஆகியோர் முக்கிய கேரக்டர்களில் நடித்துள்ளனர். ஜேக்ஸ் பிஜோய் (Jakes Bejoy) இசையமைத்துள்ள 'லோகா சாப்டர் 1: சந்திரா' திரைப்படம், வலுவான நடிப்பு மற்றும் அற்புதமான காட்சியமைப்புகளுடன் கற்பனை மற்றும் உணர்ச்சிபூர்வமான கதையைச் சொல்லியுள்ளது. அமைதியாக இருக்கும் ஒருவரை சீண்டினால் என்ன நடக்கும் என்பது தான் இந்த படத்தின் ஒருவரி கதை. ஆகஸ்ட் 28-ந்தேதி திரையரங்குகளில் வெளியான இப்படம், அதன் புதுமையான கருத்தாக்கம் மற்றும் பிரம்மாண்டமான சினிமாவுக்காக விமர்சகர்கள் மற்றும் ரசகர்கள் மத்தியில் பாராட்டுகளைப் பெற்றது.
இதன் வெற்றிக்கு மேலும் ஒரு சிறப்பு என்னவென்றால், இது மலையாளத்தில் மட்டுமல்லாமல், தெலுங்கு மற்றும் தமிழிலும் இந்த படம் வரவேற்பை பெற்று வருகிறது. இது மலையாள சினிமா விரிவடைந்து வரும் பான்-இந்திய அளவிலான ஈர்ப்பைக் குறிக்கிறது. இப்படத்தின் கதை, கல்யாணி பிரியதர்ஷன் நடித்த சந்திரா என்ற சூப்பர் ஹீரோயினை மையமாகக் கொண்டது. அவர் புராணத்தையும் நவீனத்தையும் இணைக்கும் பாலமாகச் சித்தரிக்கப்படுகிறார். படத்தின் பிரம்மாண்டமான விஷுவல் எஃபெக்ட்ஸ், ஈர்க்கும் கதைக்களம் மற்றும் வலுவான பெண் தலைமை கதாபாத்திரம் ஆகியவை மலையாளத் திரையுலகில் புதிய தரநிலைகளை அமைத்ததற்காகப் பாராட்டப்படுகின்றன. இதன் மூலம் பல மொழிகள் தொடர்புடைய சூப்பர் ஹீரோ யுனிவர்ஸை உருவாக்க வெற்றிகரமான முயற்சிகளில் இதுவும் ஒன்றாகும்.
இதன் ஒரு பகுதியாக தயாரிப்பாளர் துல்கர் சல்மான் ஏற்கனவே 'லோகா சாப்டர் 2' படத்தின் டீசரை வெளியிட்டார். அதில் டோவினோ தாமஸ் 'சாதன்' என்ற கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளார். டீசர் வீடியோவில், துல்கர் சல்மான் மற்றும் டோவினோ தாமஸ் இடையேயான வேடிக்கையான உரையாடல், 'லோகா பிரபஞ்சத்தில்' அடுத்து என்ன வரவுள்ளது என்பதைக் குறிப்பால் உணர்த்தியது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.