பெரும் எதிர்பார்ப்புடன் நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் தயாராகி வரும் எந்திரன் 2.ஓ திரைப்படம் வெளியாக 6 மாதங்கள் உள்ள நிலையில், பட விளம்பரத்திற்காக 3டி தொழில்நுட்பத்துடன் கூடிய 100 அடி ராட்சத பலூனை லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் உள்ள ஹாலிவுட்டில் பறக்கவிடப்பட்டிருக்கிறது.
இயக்குநர் சங்கர் இயக்கத்தில், நடிகர் ரஜினிகாந்த், நடிகர் அக்ஷய்குமார், நடிகை எமி ஜாக்சன் என பலரும் நடித்துவரும் எந்திரன் 2.ஓ திரைப்படத்தை ‘லைக்கா’ நிறுவனம் தயாரிக்கிறது. முழுக்க முழுக்க 3டி தொழில்நுட்பத்தில் உருவாகியுள்ள முதல் இந்திய திரைப்படம் இது. 3டி கமிராவிலேயே படம் முழுவதும் ஒளிப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
படப்பிடிப்புகள் முடிந்து கிராஃபிக்ஸ் தொழில்நுட்ப பணிகள் நடைபெற்று வரும் நிலையில், சமீபத்தில் செய்தியாளர்களை சந்தித்த ‘லைக்கா’ தயாரிப்பு நிறுவனத்தின் தமிழக செயல் அதிகாரி, ராஜூ மகாலிங்கம் “3டி திரையிடல் வசதி கொண்ட திரையரங்குகளில் மட்டுமே இப்படத்தை திரையிட முடியும். இதுவரை 1,500 திரையரங்குகள் மட்டும்தான் இந்தியாவில் 3டி திரையிடல் வசதிகொண்டவையாக உள்ளன. ஆனால், சீனாவில் 10,000 திரையரங்குகளில் அந்த வசதி உள்ளது. இதனால், திரையரங்குகளை 3டி திரையிடல் வசதிகொண்டதாக மாற்ற வேண்டும் என திரையரங்கு உரிமையாளர்களிடம் கோரிக்கை விடுத்து வருகிறோம்”, என தெரிவித்தார்.
இந்த செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்ட திரைப்பட விநியோகஸ்தர் திருப்பூர் சுப்பிரமணியம், “எந்திரன் 2.ஓ. திரைப்படம் வெளியாவதற்கு முன்பு தமிழகத்தில் 300 திரையரங்குகளுக்கும் மேல் 3டி திரையிடல் வசதிகொண்டதாக மாற்ற முயற்சிகள் எடுத்துவருகிறோம். ஒரு தமிழனாக பாகுபலி-2 திரைப்படத்தை விட மாபெரும் வெற்றியை எந்திரன் 2.ஓ அடைய வேண்டும் என நினைக்கிறேன்”, என்றார்.
இந்நிலையில், திரைப்படத்தின் விளம்பரத்திற்காக அத்திரைப்படத்தின் 3டி தொழில்நுட்பம் கொண்ட 100 அடி ராட்சத பலூன் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் பறக்க விடப்பட்டிருக்கிறது. மேலும், துபாய், இங்கிலாந்து, ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளிலும், இந்தியாவின் முக்கிய நகரங்களிலும் இதுபோன்ற பலூனை பறக்கவிட லைக்கா திட்டமிட்டுள்ளது.
இந்த திரைப்படம் வரும் 2018-ஆம் ஆண்டு ஜனவரி மாதம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.