எம்.ஜி.ஆர் முதல் அனிருத் வரை – எஸ்.பி.பி நினைவலைகள்

தங்களின் குழந்தைகளைப் பாட்டுப் படிக்க அனுப்புவர்களில், எஸ்.பி.பி முறையாகச் சங்கீதம் கற்காதவர் என்பது எத்தனை பேருக்குத் தெரியும்!

Memories of great legendary singer spb
Memories of great legendary singer spb

SPB Life Tamil: “இந்த தேகம் மறைந்தாலும் இசையாய் மலர்வேன்..”

என்று பாடியவரின் குரல்தான் இனி வரும் ஓரிரு மாதங்களுக்கு தமிழ்நாட்டு மக்களின் மொபைல்களில் மட்டுமல்ல இதய டியூனாகவே இருக்கப்போகிறது.

தாலாட்டு, அன்பு, ஆசை, காதல், மோகம், சோகம், வெறுப்பு, கேளிக்கை, பசி, இழப்பு என மனிதனின் ஒவ்வொரு உணர்ச்சியையும் அப்படியே தன் பாடல்களில் கொண்டு வந்ததாலோ என்னவோ ‘பாடும் நிலா எஸ்.பி.பியின்’ இழப்பு ஒவ்வொரு ரசிகனையும் நிலைகுலையச் செய்திருக்கிறது. ‘இனி எங்களோடு யார் பயணிப்பார்?’ என்ற நடுக்கத்தையும் சிலருக்கு ஏற்படுத்தியிருக்கிறது. 60-களின் இறுதியில் தொடங்கி இன்று வரை எஸ்.பி.பி பாடல்கள் இல்லாத திருவிழாக்களோ மேடை கச்சேரிகளோ இருக்காது.

எஸ்.பி.பி போலச் சிறந்த பாடகராக வரவேண்டும் என்பதற்காக தங்களின் குழந்தைகளைப் பாட்டுப் படிக்க அனுப்புவர்களில், எஸ்.பி.பி முறையாகச் சங்கீதம் கற்காதவர் என்பது எத்தனை பேருக்குத் தெரியும்!

1946-ம் ஆண்டு ஜூன் 4-ம் தேதி பிறந்த இவருக்கு, நன்கு படித்து பெரிய இன்ஜினியர் ஆகவேண்டும் என்பதுதான் கனவு. கல்லூரி படித்துக்கொண்டிருக்கும் ஒருமுறை ‘புதிய பாடகர்களுக்காக’ வைக்கப்பட்ட பாட்டுப்போட்டியில் பங்குபெற்ற இவருடைய பாடலை கேட்ட எஸ்.ஜானகி அம்மா இவருக்கு ஊக்கம் கொடுக்க, சரி முயற்சி செய்துதான் பார்க்கலாமே என்று பாட ஆரம்பித்தார்.

தெலுங்குதான் இவருடைய தாய்மொழி என்று சொன்னால் எந்த தமிழ் ரசிகரும் ஏற்றுக்கொள்ளமாட்டார். அந்த அளவிற்கு இவருடைய உச்சரிப்பு கச்சிதமாக இருக்கும். முதல் பாடல் தெலுங்கு மொழியில் வெளிவந்தாலும், 1969-ம் ஜெமினி கணேசன் நடிப்பில் வெளிவந்த ‘சாந்தி நிலையம்’ திரைப்படத்தில் P.சுசீலாவோடு இணைந்து பாடிய ‘இயற்கை எனும் இளைய கன்னி..’ பாடலும், எம்ஜிஆர் நடிப்பில் ‘வெளியான அடிமைப்பெண்’ படத்தில் வரும் ‘ஆயிரம் நிலவே வா..’ என்ற பாடலும்தான் இவரை இசை உலகம் திரும்பிப் பார்க்கச் செய்தது.

ஆம், முறையாக சங்கீதம் பயிலாமல் தன்னுடைய ஆரம்ப காலத்திலேயே உச்ச நட்சத்திரமான எம்ஜிஆர் அவர்களுக்குப் பாடலைப் பாடியவர் எஸ்.பி.பி. மெல்லிசைக் கச்சேரிகளில் ஆர்வத்தோடு பாடுவது மற்றும் பாட்டுப் போட்டிகளில் பரிசுகளை வாங்கிக் குவிப்பது போன்ற தன்னார்வ செயல்கள்தான் அவரை இந்த உச்சத்திற்குக் கொண்டு சேர்த்தது. மேலும் அந்தக் காலத்திலேயே எம்ஜிஆர், சிவாஜி கணேசன், என்.டி.ஆர், நாகேஸ்வர ராவ் உள்ளிட்ட பிற மொழி ஹீரோக்களுக்கும் பாடியுள்ளார்.

எஸ்.பி.பி பாடல்களில் இருக்கும் இன்னொரு மிகப் பெரிய ப்ளஸ், அவருடைய ‘வாய்ஸ் டோன்’. 80,90 களில் வெளியான ரஜினி, கமல், மோகன் உள்ளிட்ட முன்னணி நடிகர்களின் ஓப்பனிங் பாடல்களை பெரும்பாலும் பாடியவர் எஸ்.பி.பிதான். ஆனால், நிச்சயம் ஒவ்வொரு பாடல்களுக்கும் அது எஸ்.பி.பியின் குரல் போன்று தெரியாது. அதில் நடித்திருக்கும் நடிகர்களின் குரல் போன்றுதான் ஒலிக்கும். வெவ்வேறு நடிகர்களின் ‘body language’-ற்கு ஏற்றபடி அவர் பாடல்களில் சேர்த்திருக்கும் எக்ஸ்ட்ரா எசன்ஸ் இன்றுவரை யாராலும் செய்யமுடியாத மேஜிக்.

கமலின் ‘விக்ரம்’ படத்தில் வரும் ‘என் ஜோடி மஞ்சக்குருவி..’ பாடல், ரஜினியின் ‘பாயும் புலி’ படத்தில் இடம்பெற்ற ‘ஆடி மாச காத்தடிக்க..’ பாடல், சிவகுமாரின் ‘ரோசாப்பூ ரவிக்கைக்காரி’ படத்தில் வரும் ‘மாமென் ஒரு நாள் மல்லியப்பூ கொடுத்தான்..’ பாடல், மணிரத்தினத்தின் அஞ்சலி படத்தில் இருக்கும் ‘ராத்திரி நேரத்தில் ராட்சத பேய்களின் ஸ்டார்வார்ஸ்’ பாடல் என தன் குரலை வேறுபடுத்திப் பாடிய பாடல்களின் பட்டியலும் அதிகம். ஒவ்வொரு ஆண்டும் இவருடைய ‘இளமை இதோ இதோ..’ பாடல் இல்லாமல் தமிழர்களுக்குப் புத்தாண்டு இல்லை.

தான் தேர்ந்தெடுத்த கலையில் எவ்வளவு ஆராய முடியுமோ அந்த அளவிற்கு ஆராய்ச்சிகளையும் அதனை முயற்சி செய்து பார்ப்பதிலும் சலிக்காத மனிதர் எஸ்.பி.பி. அந்த வரிசையில், ‘கண்மணியே காதல் என்பது கற்பனையோ..’, ‘மண்ணில் இந்த காதல் இன்றி..’, ‘சத்தம் இல்லாத தனிமை கேட்டேன்..’ உள்ளிட்ட மூச்சு விடாமல் பாடிய சில பாடல்களின் பட்டியலும் அடங்கும்.

என்றைக்காவது அவர் பாடிய காதல் பாடல்களை உன்னித்து கவனித்திருக்கிறீர்களா? அதிலும் குறிப்பாக ‘என் காதலே என் காதலே என்னை என்ன செய்ய போகிறாய்..’, ‘காதலின் தீபம் ஒன்று..’, ‘நிலாவே வா செல்லாதே வா..’ ‘மேகங்கள் என்னை உரசிப் போனதுண்டு..’ ‘நீலவண்ண ஓடையில் நீந்துகின்ற வெண்ணிலா..’ போன்ற பாடல்களைக் கேட்கும்போது ‘யாருய்யா இந்த மனுஷன். நம்ம உணர்வை அப்படியே சொல்லிருக்காரு’ என்ற மனக்குரல் நிச்சயம் தோன்றாமல் இருக்காது. இந்தப் பாடல்களை அன்றைக்கே நிச்சயம் குறைந்தது 10 முறையாவது கேட்கத் தூண்டும். அந்த அளவிற்கு உணர்ச்சியின் ஆழம் வரை சென்று ஒவ்வொரு பாடலையும் மெருகேற்றியிருப்பார் எஸ்.பி.பி.

சங்கீதம் தெரியாமல், கர்னாடக சங்கீதத்தை முதன்மையாய் கொண்ட ‘சங்கராபரணம்’ படத்துக்காக தன்னுடைய முதல் தேசிய விருதையும் ஹிந்தி தெரியாமல் ‘ஏக் துஜே கேலியே’ படத்துக்காக தன்னுடைய இரண்டாவது தேசிய விருதையும் வாங்கிய மாபெரும் கலைஞர் எஸ்.பி.பி. இசையை மட்டுமே தன் முழு மூச்சாய் கொண்டிருந்தவர் ஒரே நாளில் 19 பாடல்களைப் பாடி கம்போஸ் செய்ததெல்லாம் வேற லெவல். பாடுவது மட்டுமின்றி, இசையமைப்பது, இந்தியா முழுவதும் 13 நடிகர்களுக்கு குரல் கொடுத்திருப்பது என கலைத்துறைக்காக இவர் பணியாற்றிய தொண்டு அதிகம். அதிலும், இவர் திரையில் தோன்றி நடிக்க வந்தது உண்மையில் ஹீரோவுக்கான ஸ்டீரியோடைப்பை பங்கமாக உடைத்தது. குறிப்பாக குணச்சித்திர வேடங்களில் இவர் தோன்றிய அனைத்துப் படங்களும் சூப்பர் ஹிட்.

எம்.எஸ்.விஸ்வநாதன், எம்.ஜி.ஆர், கண்ணதாசன், வாலி, இளையராஜா, வைரமுத்து, மைக் மோகன், ரஜினி, கமல், விஜய், அஜித், ரஹ்மான், அனிருத் என வெற்றி கூட்டணியோடு மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்த தடங்கள் ஆயிரம் உண்டு. எஸ்.பி.பியை அனைவர்க்கும் பிடிக்க மற்றுமொரு காரணம், அவர் மிகவும் எளிமையான மனிதர். கடுமையான சொற்களைப் பேச்சுக்குக்கூடச் சொல்லத் தயங்குகிற மிகவும் பாசிட்டிவான மனிதர்.

இவர் பாடிய அனைத்து பாடல்களையும் கேட்டு முடிக்க ஐந்து வருடங்கள் ஆகும். ஆனாலும் ஒருபோதும் சலிக்காது. இதுவரை நாற்பதாயிரம் பாடல்களைப் பாடி கின்னஸ் உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்தது மட்டுமில்லாமல், 2001-ம் ஆண்டு பத்மஸ்ரீ விருது, 2011-ம் ஆண்டு பத்மபூஷன் விருது எனப் பல விருதுகளைக் குவித்துள்ளார். ஆனால், அவற்றைவிட ரசிகனின் கைத்தட்டல்தான் தனக்கான உயரிய விருது என்பதை ஒவ்வொரு முறையும் பதிவு செய்திருக்கிறார் எஸ்.பி.பி.

இந்தச் செய்தி பொய்யாகிவிடக்கூடாதா என்று நினைக்கும் லட்சக் கணக்கான ரசிகர்களில் ஒருத்தியாக இருந்தாலும்,
“தாய் கொண்டு வந்ததை
தாலாட்டி வைத்ததை
நோய் கொண்டு போகும் நேரமம்மா” என்று எஸ்.பி.பி உருகிப் பாடிய பாட்டு ஒன்று மட்டும்தான் தற்போது ஒலித்துக்கொண்டே இருக்கிறது.

அவர் உடல் இம்மண்ணைவிட்டுச் சென்றாலும், அவர் நமக்காக விட்டுச் சென்ற ஆயிரக்கணக்கான பாடல்கள் காலத்தால் என்றும் அழியாதது. என்றும் பிரகாசமாய் ஒளிர்ந்த ‘பாடும் நிலவு’ இன்று முதல் ஓய்வு எடுக்கச் சென்றுவிட்டது என்பதை ஏற்க மறுக்கிறது மனம்.

கொரோனா பற்றிய விழிப்புணர்வுக்காக அவர் பாடி வெளியிட்ட வீடியோதான் தற்போது வரை எஸ்.பி.பி பாடிய கடைசிப் பாடல். அதற்கு முன் சில ஆல்பப் பாடல்களையும் பாடியுள்ளார். இன்னும் வெளிவராத சினிமா பாடல்களும் இருக்கலாம். அவற்றைப் பொறுத்திருந்துதான் கேட்கவேண்டும். சாட்விக், இர்ஃபான் கான், சுஷாந்த் சிங் உள்ளிட்ட தொடர்ச்சியான பிரபலங்களின் மரணப் பட்டியலில் எஸ்.பி.பி இணைந்திருப்பது யாராலும் எளிதில் ஏற்றுக்கொள்ள முடியாதது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  t.me/ietamil

Get the latest Tamil news and Entertainment news here. You can also read all the Entertainment news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Memories of great legendary singer spb

Next Story
இது வெடிக்கிற திரியா ..? டிரைலர் எப்படி?
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com
Best of Express