அப்பவே எங்களுக்கு தெரியும் சிவா அண்ணா இப்படியெல்லாம் பண்ணுவாருனு: மெரினா கைலாசம் கலகல பேட்டி!

சும்மா வாடா சென்னையை சுத்தி பார்க்கலாம்னு” என்னை சென்னை கூடிட்டு வந்தாரு

2012 ஆம் ஆண்டு தமிழ் சினிமாவில் வெளியான வித்யாசமான கதையம்சம் கொண்ட திரைப்படங்களில் ’மெரினா’ படமும் ஒன்று. 2009 ல் 3 தேசிய விருதுகளை சொந்தமாக்கிய பசங்க எனும் மிகச் சிறந்த படத்தை இயக்கிய இயக்குனர் பாண்டிராஜ் தான் மெரினா படத்தையும் இயக்கி, தயாரித்து இருந்தார்.

’வணக்கம் வாழ வைக்கும் சென்னை’ எனும் சிங்கிள் ட்ராக்கில் தமிழ் சினிமா நட்சத்திரங்கள் அனைவரும் தோன்ற, டிவி ஷோக்களில் தலைக்காட்டிக் கொண்டிருந்த சிவகார்த்திகேயன் தான் படத்தின் ஹீரோ என நிறைய சர்ப்பிரைஸ்களுடன் படம் வெளியாகியது.

படத்தில் நமக்கு நன்கு பரீட்சையமான முகம் ஓவியா, சிவகார்த்தியேகன் மட்டும் தான். ஆனால் அவர்களை விட படத்தில் அனைவரையும் கவர்ந்திருந்தது படத்தில் நடித்திருந்த சிறுவர்கள் பட்டாளம். சென்னைக் கடற்கரையில் கண்களை மேயவிட்டால் தென்படும், பரபரப்பான விற்பனையில் ஈடுபட்டிருக்கும் சிறுவர்களைப் பற்றிய படம் என்று படத்தின் ரிலீஸுக்கு முன்பே தகவல்கள் கசிந்தது.

ஆனால் அவர்களின் வாழ்க்கை அச்சு அசலாக எப்படி இருக்கும் என்று நிஜமாகவே வாழ்ந்து காட்டி அசத்தி இருந்தார்கள் படத்தில் நடித்திருந்த சிறுவர்கள். அதிலும், கைலாசம் – அம்பிகாவதி கதாபாத்திரங்களில் நடித்திருந்த கெளதம், பக்கடா பாண்டி இருவரின் முகமும் படம் முடிந்த பின்பு நம் கண்களை விட்டு அகலாமல் இருந்தது.

மெரினாவுக்கு பிறகு படத்தில் நடித்த அனைவரின் வாழ்க்கையும் தற்போது மாறிவிட்டது. சிவகார்த்தியேகன் பற்றி சொல்லவே வேண்டாம், ஓவியாவுக்கு தனி ஆர்மி, நடிகர் சதீஷ் காமெடியனாக உயர்ந்து நிற்கிறார், சிறுவனாக இருந்த பக்கடா பாண்டி கயல் ஆனந்தியுடன் டூயட்டே பாடிவிட்டார்.

ஆனால், பாண்டியுடன் படம் முழுக்க சுற்றி வந்த கெளதம், வேறு எந்த படத்திலும் முகத்தை காட்டவில்லை. கேடி பில்லா கில்லாடி ரங்கா படத்தில் ஒரு சீனில் வந்தது தான் கெளதமின் கடைசி கேமரா முகம். அதன் பின்பு காணாமால் போன கெளதம் இப்போது அடுத்த ரவுண்ட் வர முழு வீச்சில் தன்னை தயார்ப்படுத்திக் கொண்டிருக்கிறார்.

நண்பர் ஒருவரின் உதவியால் கெளதமை நேரில் காணும் வாய்ப்பும் கிடைத்தது.உடனே ஸ்பெஷல் இண்டர்வியூக்கு ரெடி பண்ணியாச்சி.. இதோ நீண்ட ஆண்டுகளுக்கு பிறகு கெளதம் கொடுத்த ஸ்பெஷல் பேட்டி..

கேள்வி: எங்க போனீங்க இவ்வளவு நாளா? ஏன் அதுக்கு அப்புறம் எந்த படத்திலும் நடிக்கல?

பதில்: மெரினாவுக்கு அப்புறம் நிறைய பேர் ஈஸியாக என்னை அடையாளம் கண்டுப்பிடிச்சாங்க. ஸ்கூல எல்லோரும் படத்துல சூப்பரா நடிச்ச, உண்மையாவே சுண்டல் விக்கற பையன் மாறியே இருந்தேனு கூட சொன்னாங்க. அப்புறம் படத்துல நடிக்கவானு அப்பா, அம்மா கிட்ட கேட்டேன். அதெல்லாம் வேணாம். முதல்ல படி அப்புறம் பார்க்கலாம்னு சொல்லிடாங்க. அப்பா கொஞ்சம்  ஸ்ட்ரிக்ட்.அவங்க சொன்னதும் சரின்னு தோணுச்சி. கோயம்புத்தூர் காலேஜ்ல  பிஇ  சேர்ந்து படிச்சேன்.  சினிமா பத்தி அப்ப அப்ப யோசிப்பேன்.

கேள்வி: மெரினா அனுபவம்…

பதில் : மெரினா நடிக்கும் போது ஸ்கூல் படிச்சிட்டு இருந்தேன். ஸ்கூல் லீவ்வுல சொந்த ஊருக்கு  போயிருந்தேன். இயக்குனர் பாண்டியராஜ் என்னோட சித்தப்பா தான்.  ”சும்மா வாடா சென்னையை சுத்தி பார்க்கலாம்னு” என்னை சென்னை கூடிட்டு வந்தாரு. இங்க வந்ததும் கையில் சுண்டல கொடுத்து விற்க சொன்னாரு. கதை, எங்க கேமரா? எதுவும் தெரியாது. சித்தப்பா என்ன சொன்னாரோ அது மட்டும் தான் பண்ண. ஆனா, படம் ரீலிஸ் ஆகி தியேட்டரல பார்க்கும் போது, நானா இது? இப்படிலாமா நான் நடிச்சேன்னு எனக்கே ஆச்சரியமா இருந்தது.

கேள்வி: இப்ப என்ன பண்றீங்க? அடுத்து என்ன ப்ளான்?

பதில்: ஒருவழியாக வீட்ல சொன்னா மாதிரி காலேஜ முடிச்சிட்டன். ஆனாலும் சினிமா மேல ஏதோ ஒரு ஆசை. அதுக்கு தான் ரெடி ஆயிட்டு இருக்கேன். சீக்கிரமா திரையில பார்ப்பீங்க. இப்ப சஸ்பன்ஸ்..

கேள்வி : பிடித்த நடிகர் யார்?

பதில்:எல்லாரையும் பிடிக்கும். ரொம்ப ஃபேவரெட்  தல – தளபதி.  ரெண்டு பேரோட படத்தையும்  பர்ஸ்ட் டே பர்ஸ்ட் ஷோ தியேட்டர்ல பார்த்துருவேன்.

கேள்வி: உங்க கூட நடிச்ச பாண்டி ஹீரோ ஆயிட்டாரு அதப்பத்தி.

பதில்: செம்ம ஹாப்பியாக இருந்தது. எனக்கு கால் பண்ணி சொன்னான். நானும் படத்த தியேட்டருக்கு போய் பார்த்தேன்.  நானும் பாண்டியும் பெஸ்ட் ஃப்ரண்ட். மெரினாவில் நடிச்சபோதே நாங்க செம்ம க்ளோஸ் ஆயிட்டோம்.  விளையாட்டா பேசிட்டு இருந்த பாண்டி ,தனக்கென தனி வழிய தேர்வு பண்ணி இப்ப கலக்கிட்டு இருக்கான்.

கேள்வி: மெரினா கடற்கரைக்கு கடைசியா எப்ப வந்தீங்க?

பதில்: இப்ப சென்னையில தான் இருக்கேன்.  மெரினா முடிச்சிட்டு ஊர் போனதுக்கு அப்புறம்  எந்த படத்துலையாவது மெரினா பீட்சல்லாம் வர மாறி சீன்ஸ் வந்தா உடனே எனக்கும் மெரினா ஷூட்டிங் ஞாபகம் வந்துடும். குதிரை சவாரி, சுண்டல், கடற்கரை எல்லாமே தி பெஸ்ட் மெமரிஸ். எப்ப மெரினா வந்தாலும் அதுதர ஃபீல் வெற லெவல்.

கேள்வி: மறக்க முடியாத சம்பவம்?

பதில்: மெரினா ஷுட்டிங் ஸ்பாட்டில் தான் நடந்தது. சீன் படி நானும்,பாண்டியும் சாமி கும்மிட்டு பட்டையெல்லாம் அடிச்சிட்டு சுண்டல், வாட்டர் பாக்கெட் விற்க கிளம்பனும். இரண்டு பேரும் அதே மாறி கிளம்பி போய் சுண்டல் வித்தோம். உண்மையாவே அன்னிக்கு எல்லாரும் எங்க கிட்டயே சுண்டல் வாங்க ஆரம்பிச்சிடாங்க.. ரெண்டு பேரும் சேர்ந்து ஆளுக்கு 500 ரூபாய் வரை சம்பாதிச்சிட்டோம். உடனே ரெண்டு பேரும் போய் பக்கத்துல இருந்த பிரியாணி கடையில பிரியாணி சாப்பிட்டோம். மறக்கவே முடியாது. அப்ப தான் உணர்தோம் அங்க இருக்க பசங்க லைஃப் எப்படிபட்டதுனு.

கேள்வி: மெரினா சிவகார்த்திகேயன்..கனா சிவகார்த்திகேயனுக்கு உள்ள வித்யாசம்?

அண்ணா ரொம்ப அழகா ஆயிட்டாரு. மெரினா ஷுட்டிங் ஸ்பாட்டல எல்லாரையும் செம்மையாக கலாய்ச்சாரு. சதீஷ் அண்ணாவும், சிவா அண்ணாவும் சேர்ந்தா கேட்கவே வேணாம். நிறைய கதை சொல்லுவாங்க. எங்க கூட ரொம்ப ஜாலியா பழகுவாரு.

அவருக்கு அப்பவே நிறைய ஆசை இருந்தது. ஹீரோ ஆகனும், நல்ல படங்கள் பண்ணனும். அப்பவே எங்களுக்கு தெரியும் சிவா அண்ணா இப்படி ஒரு மாஸ் ஹீரோவா வருவாருனு. எங்க கிட்ட சொல்வாரு பசங்களா, நீங்கதாண்டா இந்த படத்தோட ஹீரோ. நாங்கல்லாம் சும்மா தானு. இப்ப பார்த்தாலும் சரி அவரு சொல்ற முதல் வார்த்தை மெரினா படத்தோட ஹீரோ நீங்க தாண்டா தம்பி.

Get the latest Tamil news and Entertainment news here. You can also read all the Entertainment news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Merina movie child artist gowtham interview

Next Story
நேயர்களின் பேராதரவுடன் புதுவருடத்தை எதிர்நோக்கி ஐஇ தமிழ்!ietamil yearenders success stories 2018 - 2018ல் ஐஇ தமிழ் நேயர்களை அதிகம் கவர்ந்த செய்திகள்
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com
Best of Express