‘மெர்சல்’ கடந்துவந்த சோதனைகள் : சட்டை கிழிஞ்சிருந்தா தச்சி முடிஞ்சிடலாம்…

‘மெர்சல்’ என்ற ஒற்றைப் படத்தின் மூலம் வச்சி செய்துவிட்டார்கள். ஒருவழியாக எல்லாப் பிரச்னைகளில் இருந்தும் விடுபட்டு நாளை ரிலீஸாக இருக்கிறது ‘மெர்சல்’.

By: Updated: October 17, 2017, 08:13:37 AM

‘சோதனை மேல் சோதனை… போதுமடா சாமி…’ என்று ‘மெர்சல்’ படத்தின் தயாரிப்பாளரான தேனாண்டாள் ஸ்டுடியோ லிமிடெட் நிறுவனத்தின் முரளி பாடாத குறைதான். அந்த அளவுக்கு ‘மெர்சல்’ என்ற ஒற்றைப் படத்தின் மூலம் வச்சி செய்துவிட்டார்கள். ஒருவழியாக எல்லாப் பிரச்னைகளில் இருந்தும் விடுபட்டு நாளை ரிலீஸாக இருக்கிறது ‘மெர்சல்’. படம் தொடங்கியதில் இருந்து இதுவரை என்னென்ன சோதனைகளைக் கடந்து வந்திருக்கிறது என்பதைப் பார்ப்போம்.

* ‘மெர்சல்’ படத்தில் விஜய் நடிக்கிறார், அட்லீ இயக்குகிறார் என்ற தகவல் வெளியானதுமே, ‘இது எந்தப் படத்தின் காப்பியாக இருக்கப் போகிறதோ…’ என்றுதான் முதலில் அனைவரும் நினைத்தனர். காரணம், அட்லீயின் முதல் படமான ‘ராஜா ராணி’, மோகன் – ரேவதி நடித்த ‘மெளன ராகம்’ படத்தைப் போல இருக்கிறது என்றார்கள். இரண்டாவதாக இயக்கிய ‘தெறி’, விஜயகாந்த், பானுப்பிரியா, ரேவதி நடித்த ‘சத்ரியன்’ படம் போல இருக்கிறார்கள். இந்தப் படத்தில் அப்பா – இரு மகன்கள் என மூன்று வேடத்தில் விஜய் நடித்திருக்கிறார் என்ற தகவல் வெளியானதும், கமல் நடிப்பில் வெளியான ‘அபூர்வ சகோதரர்கள்’ படத்தின் காப்பி என்றார்கள்.

* தங்களுடைய நூறாவது படமான இதை, மிகப் பிரம்மாண்டமாகத் தயாரிக்க நினைத்தது தேனாண்டாள் ஸ்டுடியோ நிறுவனம். ஆனால், அவர்கள் நினைத்ததைவிட செலவு அதிகமாகவே ஆகியிருக்கிறது. எல்லாவற்றுக்கும் இயக்குநர் அட்லீ தான் காரணம் என்கிறார்கள். விஜய்க்குப் பெரும் தொகை சம்பளமாகப் பேசியது போக, தானும் பெரும் தொகையை சம்பளமாக வாங்கிக் கொண்டாராம் அட்லீ. அத்துடன், ஏகப்பட்ட செலவுகளையும் இழுத்துவிட, திட்டமிட்ட 100 கோடியைத் தாண்டி செலவாகிவிட்டதால், அதை எடுக்க முடியுமா என்ற சந்தேகத்திலும், வருத்தத்திலும் இருக்கிறது தயாரிப்பு தரப்பு.

* ‘மெர்சலாயிட்டேன்’ என ஏற்கெனவே தான் பதிவுசெய்து வைத்திருப்பதாகவும், ‘மெர்சல்’ படத்திற்குத் தடைவிதிக்க வேண்டும் எனவும் ராஜேந்திரன் என்பவர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். வழக்கை விசாரித்த தனி நீதிபதி, தயாரிப்பாளர்கள் சங்கம் மற்றும் தென்னிந்திய வர்த்தக சபையில் பதிவுசெய்து வைப்பதிருப்பது சட்டப்படி செல்லாது என்பது, ‘மெர்சல்’ என்பதற்கு ட்ரேட் மார்க் வாங்கி வைத்திருப்பதால் பெயரைப் பயன்படுத்த தடை இல்லை என்று தீர்ப்பு வழங்கினார். இதை எதிர்த்து மேல் முறையீடு செய்தார் ராஜேந்திரன். இரண்டு நீதிபதிகள் கொண்ட பெஞ்ச் முன்பு இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. தனி நீதிபதி கூறிய தீர்ப்பில் தலையிட மறுத்த அவர்கள், அவர் கூறியே தீர்ப்பே பொருந்தும் என்று சொல்லி வழக்கைத் தள்ளுபடி செய்தனர்.

* தமிழக அரசின் 10 சதவீத கேளிக்கை வரியை விலக்கிக் கொள்ளாவிட்டால், 6ஆம் தேதி முதல் புதுப்படங்களை ரிலீஸ் செய்ய மாட்டோம் என்று அறிவித்தன தயாரிப்பாளர்கள் சங்கமும், திரையரங்கு உரிமையாளர்கள் சங்கமும். ஆனால், தமிழக அரசு அதற்கு செவிசாய்க்காததால், புதுப்படங்களை ரிலீஸ் செய்யவில்லை. 8 நாட்களுக்குப் பிறகு சிலகட்டப் பேச்சுவார்த்தையின் முடிவில் 8 சதவீதமாக குறைக்கப்பட்டது. கடந்த வெள்ளிக்கிழமைதான் இந்தப் பிரச்னை முடிவுக்கு வந்தது. அதுவரை, தீபாவளிக்காவது புதுப்படங்கள் ரிலீஸாகுமா என்ற கேள்வி இருந்தது.

* படத்தைப் பார்த்த சென்சார் போர்டு உறுப்பினர்கள், படத்துக்கு யு/ஏ சான்றிதழ் கொடுத்தனர். நீண்ட வருடங்கள் கழித்து யு/ஏ படத்தில் நடித்துள்ளார் விஜய். டிவியில் ஒளிபரப்ப வேண்டுமானால், இன்னொரு முறை அதற்கெனத் தனியாக சென்சார் செய்து யு சான்றிதழ் பெறவேண்டும். யு/ஏ மூலம் குழந்தை ரசிகர்களை இழக்கிறாரா விஜய் என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

* விலங்குகள் நல வாரியத்திடம் இருந்து விலங்குகளைப் பயன்படுத்தியதற்கான தடையில்லா சான்று பெறுவதில் சிக்கல் ஏற்பட்டது. வாரத்துக்கு ஒருமுறை, அதாவது புதன்கிழமைதான் சினிமா தொடர்பான பணிகளை விலங்குகள் நல வாரியம் மேற்கொள்ளும் என்பதால், தீபாவாளிக்கு ‘மெர்சல்’ ரிலீஸ் ஆவதில் சிக்கல் ஏற்பட்டது. தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை விஜய் சந்தித்ததை அடுத்து, நேற்று அவசரமாகக் கூடிய விலங்குகள் நல வாரியத்தின் கூட்டம், எச்சரிக்கையுடன் தடையில்லா சான்று கொடுத்துள்ளது. விலங்குகள் சம்பந்தப்பட்ட காட்சிகள் வெளிநாட்டில் படமாக்கப்பட்டது என்று கூறி, சான்றிதழைப் பெற்றுள்ளது தயாரிப்பு நிறுவனம். அத்துடன், விலங்குகள் சம்பந்தப்பட்ட 17 நிமிடக் காட்சிகளில் 15 நிமிடங்கள் குறைக்கப்பட்டு, 2 நிமிடங்கள் மட்டுமே பயன்படுத்த அனுமதிக்கப்பட்டுள்ளது.

* படத்துக்கு யு/ஏ சான்றிதழ் கிடைத்திருப்பதாக அட்லீ கடந்த 6ஆம் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். ‘நாங்கள் தடையில்லா சான்று வழங்காமல், நீங்கள் எப்படி அதற்குள் சென்சார் சான்றிதழைக் கொடுக்கலாம்?’ என விலங்குகள் நல வாரியம் கேள்வி எழுப்பியுள்ளது. இந்தக் கேள்விக்குப் பதிலளித்த சென்சார் போர்டு அதிகாரிகள், ‘நாங்கள் வாய்மொழியாகத்தான் சொல்லியிருக்கிறோமே தவிர, முறைப்படி இன்னும் சான்றிதழை வழங்கவில்லை’ என்று கூறியது. விலங்குகள் நல வாரியம் தடையில்லா சான்றிதழை நேற்று அளித்துள்ளதால், இன்று சென்சார் சான்றிதழ் முறைப்படி வழங்கப்படும்.

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Entertainment News by following us on Twitter and Facebook

Web Title:Mersal faced so many problems

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
Advertisement

இதைப் பாருங்க!
X