‘வேண்டாத பொண்டாட்டி கை பட்டால் குற்றம், கால் பட்டால் குற்றம்’ என்றொரு பழமொழி உண்டு. விஜய் படங்களுக்கு இந்தப் பழமொழி நன்றாகப் பொருந்தும். ‘துப்பாக்கி’, ‘கத்தி’ படங்களைத் தொடர்ந்து, ‘மெர்சல்’ படமும் பிரச்னைகளில் சிக்கியுள்ளது. ‘துப்பாக்கி’ மற்றும் ‘கத்தி’ படங்களுக்கு எல்லாம் ஒன்றிரண்டு பிரச்னைகள்தான் வந்தன. ஆனால், எங்கிருந்துதான் வருகிறது என்று யோசிக்க முடியாத அளவுக்கு ‘மெர்சல்’ படத்துக்கு புதுப்புது பிரச்னைகள் கிளம்பி வருகின்றன.
தலைப்பு பிரச்னை, தமிழக அரசின் கேளிக்கை வரியால் புதுப்படங்கள் ரிலீஸ் செய்வதில் பிரச்னை, விலங்குகள் நல வாரியத்தில் தடையில்லா சான்று பெறுவதில் பிரச்னை என பிரச்னைக்கு மேல் பிரச்னைகளை சந்தித்துக் கொண்டிருக்கிறது ‘மெர்சல்’ படம். எவ்வளவு பிரச்னைகள் வந்தாலும், எல்லாவற்றையும் தீர்த்துவிட்டு தீபாவளிக்கு எப்படியாவது படத்தை ரிலீஸ் செய்தே தீருவது என்ற முடிவில் இருக்கிறது தேனாண்டாள் ஸ்டுடியோ லிமிடெட்.
‘மெர்சல்’ படத்துக்கு வேறு என்னென்ன பிரச்னைகள் வரலாம்?
* தமிழ் சினிமாவின் மாறாத டயலாக்கான ‘இது என் படத்தின் கதை’ என யாராவது நீதிமன்றத்தின் படியேறலாம்.
* அப்பா - இரண்டு மகன்கள் கேரக்டர் விஜய் நடித்திருப்பதால், நிஜமாகவே குடும்பத்தில் அப்பா - இரண்டு மகன்கள் உள்ளவர்கள் வழக்கு தொடுக்கலாம்.
* 43 வயதான விஜய்க்கு, 30 வயது கூட ஆகாத நித்யா மேனன் அம்மாவா என நித்யா மேனன் ரசிகர்கள் வழக்கு தொடுக்கலாம்.
* கோயில்களில் ஆடு வெட்டும் அரிவாளை வைத்து விஜய் போஸ் கொடுத்திருப்பதால், கோயில் பூசாரிகள் சண்டைக்கு வரலாம்.
* தங்கள் சங்கத்திடம் முன் அனுமதி பெறாமல் விஜய்க்கு கேரக்டர்கள் கொடுத்ததால் மருத்துவர்கள் சங்கமும், மேஜிக் கலைஞர்கள் சங்கமும் வழக்கு தொடுக்கலாம்.
* காஜல் அகர்வாலுக்கு மட்டும் உசத்தியான டாக்டர் விஜய் ஜோடி, சமந்தாவுக்கு மட்டும் மேஜிக் கலைஞர் விஜய் ஜோடியா என சமந்தாவின் ரசிகர்கள் சண்டை போடலாம்.
* கமல் நடித்த ‘அபூர்வ சகோதரர்கள்’ படத்தின் காப்பி என்று கூறப்படுவதால், காப்பி ரைட்ஸ் கேட்டு நீதிமன்றம் செல்லலாம்.
* ‘ஆளப்போறான் தமிழன்’ என்று பாட்டு வைத்ததால், போருக்காகக் காத்திருக்கும் ரஜினி ரசிகர்களுக்கு வருத்தம் ஏற்பட்டு வாய்த் தகராறு உண்டாகலாம்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.