மெர்சல் – விமர்சனம்

ஜி.எஸ்.டி. தொடங்கி மத்திய, மாநில அரசுகளுக்கு எதிராகப் பல கருத்துகளைத் தைரியமாகக் கூறியுள்ளார் விஜய்.

விஜய், நித்யா மேனன், சமந்தா, காஜல் அகர்வால், எஸ்.ஜே.சூர்யா, சத்யராஜ், வடிவேலு, கோவை சரளா, யோகிபாபு, மொட்டை ராஜேந்திரன், சத்யன் என ஏகப்பட்ட நட்சத்திரங்கள் நடிப்பில் வெளியாகியுள்ள படம் ‘மெர்சல்’. அட்லீ இயக்கியுள்ள இந்தப் படத்துக்கு, ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். தேனாண்டாள் ஸ்டுடியோ லிமிடெட் நிறுவனம் தயாரித்துள்ளது.

வெற்றிமாறனான அப்பா விஜய், ஊரில் ஒரு கோயில் கட்ட நினைக்கிறார். பூமி பூஜை நடக்கும் சமயத்தில் அங்கு தீவிபத்து நடக்க, அங்கிருந்து பல கிலோமீட்டர்கள் தள்ளி இருக்கும் மதுரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்வதற்கும் இரண்டு குழந்தைகள் இறந்துவிடுகின்றனர். எனவே, தற்போது இங்கு கோயில் கட்டுவதைவிட மருத்துவமனைதான் கட்ட வேண்டும் என்று முடிவெடுக்கிறார்.

உடனே விஜய் மனைவியான நித்யா மேனன் தன் தாலியைக் கழற்றித்தர, அங்குள்ள எல்லாருமே தங்களிடம் இருப்பதைக் கொடுக்கிறார்கள். அதைவைத்து அந்த இடத்தில் மிகப்பெரிய மக்கள் நல மருத்துவமனை கட்டுகிறார் விஜய். அந்த மருத்துவமனையை ஏமாற்றிப் பிடுங்கிக் கொள்ளும் எஸ்.ஜே.சூர்யா, நித்யா மேனன் இறப்பதற்கும் காரணமாகிறார். அத்துடன், விஜய்யையும் கொன்றுவிடுகிறார். ‘நீ செய்தது இரண்டாகத் திரும்பிவரும்’ என சாகும்போது சாபம் விடுகிறார் விஜய். அவருடைய மகன்களான இரண்டு விஜய்யும் சேர்ந்து வில்லனான எஸ்.ஜே.சூர்யாவை அழிப்பதுதான் படத்தின் கதை.

மூன்று வேடங்களில் மொத்தப் படத்தையும் தாங்கி நிற்கிறார் விஜய். அதுவும் அந்த அப்பா கேரக்டர் இருக்கிறதே… ஆங்காங்கே எட்டிப் பார்க்கும் வெள்ளை முடியும், முறுக்கு மீசையுமாக கிராமத்தானுக்கே உரிய கெத்துடன் அவ்வளவு அழகாக இருக்கிறார். டான்ஸ், ஃபைட் என எல்லாவற்றிலும் வெளுத்து வாங்கியிருக்கிறார். அவர் செய்யும் மேஜிக்குகள் அனைத்தும் அட்டகாசம்.

ஹீரோயின்களில் நித்யா மேனனுக்குத்தான் நடிப்பதற்கு வாய்ப்பு கொடுத்திருக்கிறார்கள். குண்டாக இருந்தாலும் அவ்வளவு அழகாக இருக்கிறார்கள் இந்த நித்யா மேனன், வித்யா பாலன் வகையறாக்கள். காஜலுக்கும், சமந்தாவுக்கும் பெரிதாக வேலையில்லை. மெட்ராஸ் பாஷையில் கொஞ்சமாக ஈர்க்கிறார் சமந்தா.

படத்துக்குப் படம் நடிப்பில் மெருகேறிக்கொண்டே போகிறார் வில்லன் எஸ்.ஜே.சூர்யா. சிரித்துக் கொண்டே கழுத்தறுக்கும் பாணியை அவரிடம் இருந்துதான் கற்றுக்கொள்ள வேண்டும். போலீஸ் அதிகாரியாக வரும் சத்யராஜ், தன்னுடைய பாணியில் ரசிக்க வைக்கிறார். நீண்ட நாட்களுக்குப் பிறகு வடிவேலுவைப் பார்த்து சிரிக்க முடிகிறது. மொட்டை ராஜேந்திரன், யோகிபாபு, சத்யன் ஆகியோர் வந்து போகிறார்கள்.

இந்தப் படத்தில் இருந்து கொஞ்சம், அந்தப் படத்தில் இருந்து கொஞ்சம் என உருவியிருக்கிறார் அட்லீ. அதனால், அடுத்தடுத்து நடக்கப்போகும் சம்பவங்களை எளிதாக யூகிக்க முடிகிறது. ஆனாலும், அதை சுவாரசியமாகக் கொண்டு செல்வதில் அட்லீக்கு நிகர் அட்லீதான்.

பாடல்களில் ஜொலித்த அளவுக்குப் பின்னணி இசையில் ஈர்க்கத் தவறிவிட்டார் ஏ.ஆர்.ரஹ்மான். விஷ்ணுவின் ஒளிப்பதிவு ‘வாவ்’ சொல்ல வைக்கிறது. இதுதான் முதல் படம் என்று சொல்ல முடியாத அளவுக்கு அருமையாக காட்சிப்படுத்தி இருக்கிறார்.

‘கத்தி’ படத்தில் விவசாயம் பற்றியும், விவசாயிகள் பற்றியும் விரிவாகப் பேசிய விஜய், இந்தப் படத்தில் மருத்துவத் துறையின் சீர்கேடுகளை புட்டுப் புட்டு வைத்திருக்கிறார். ஜி.எஸ்.டி. தொடங்கி மத்திய, மாநில அரசுகளுக்கு எதிராகப் பல கருத்துகளைத் தைரியமாகக் கூறியுள்ளார் விஜய்.

மொத்தத்தில் இந்தப் படம் விஜய் படங்களின் சூப்பர் ஹிட் வரிசையில் சேரும் என்பது உறுதி.

Get the latest Tamil news and Entertainment news here. You can also read all the Entertainment news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Mersal movie review

Next Story
சென்னையில் ஒருநாள் 2 – விமர்சனம்Dengue fever, Tamilnadu Government, Kerala Government, Central Government,
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com
Best of Express