விஜய் நடிப்பில், அட்லீ இயக்கத்தில் ரிலீஸான ‘மெர்சல்’ படம், இங்கிலாந்து நேஷனல் ஃபிலிம் அவார்ட்ஸுக்கு நாமினேட் ஆகியுள்ளது.
விஜய் மூன்று வேடங்களில் நடித்த படம் ‘மெர்சல்’. அட்லீ இயக்கிய இந்தப் படத்தை, தேனாண்டாள் ஃபிலிம்ஸ் நிறுவனம் தயாரித்திருந்தது. தேனாண்டாள் ஃபிலிம்ஸின் 100வது படமான இது, 100 கோடி ரூபாய்க்கும் மேல் செலவு செய்து எடுக்கப்பட்டது. நித்யா மேனன், சமந்தா, காஜல் அகர்வால் மூவரும் ஹீரோயின்களாக நடித்திருந்தனர். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்திருந்தார்.
‘மெர்சல்’ படம், கடந்த வருடம் தீபாவளிக்கு ரிலீஸானது. இந்தப் படத்தில், ஜி.எஸ்.டி. மற்றும் டிஜிட்டல் இந்தியா குறித்த வசனங்கள் இடம்பெற்றிருந்தன. இதனால், ‘மெர்சல்’ படத்திற்கு பாஜகவினர் எதிர்ப்பு தெரிவித்தனர். அத்துடன், படத்தில் இடம்பெற்றுள்ள வசனங்களை நீக்கும்படி போராட்டங்களும் நடத்தினர். ‘மெர்சல்’ படத்துக்கு இந்த எதிர்ப்பு மூலம் இலவச விளம்பரம் கிடைத்தது. எனவே, படத்தின் வசூலும் அதிகமானது.
இந்நிலையில், இங்கிலாந்தின் நேஷனல் ஃபிலிம் அவார்ட்ஸுக்கு நாமினேட் ஆகியுள்ளது ‘மெர்சல்’. சிறந்த வெளிநாட்டுப் படங்களுக்கான பிரிவில் நாமினேட் செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் இருந்து ‘மெர்சல்’ மட்டுமே நாமினேட் செய்யப்பட்டிருப்பது பெருமைக்குரிய விஷயம். அதேபோல், சிறந்த துணை நடிகருக்கான விருதுக்கு விஜய் நாமினேட் செய்யப்பட்டிருக்கிறார்.