விஜய் நடிப்பில் கடந்த வருடம் தீபாவளிக்கு ரிலீஸான ‘மெர்சல்’ படம், இந்தப் பொங்கலுக்கு மறுபடியும் ரிலீஸாக இருக்கிறது.
அட்லீ இயக்கத்தில், விஜய் நடிப்பில் ரிலீஸான படம் ‘மெர்சல்’. விஜய் மூன்று வேடங்களில் நடித்துள்ள இந்தப் படத்தில், நித்யா மேனன், சமந்தா, காஜல் அகர்வால் என மொத்தம் 3 ஹீரோயின்கள் நடித்தனர். எஸ்.ஜே.சூர்யா, சத்யராஜ், வடிவேலு, கோவை சரளா, சத்யன், மொட்டை ராஜேந்திரன், யோகி பாபு உள்ளிட்ட பலர் இந்தப் படத்தில் நடித்திருந்தனர்.
தேனாண்டாள் ஃபிலிம்ஸின் நூறாவது படமான இது, 100 கோடி ரூபாய்க்கும் மேல் செலவு செய்து எடுக்கப்பட்டது. படத்துக்கு கிடைத்த வரவேற்பால் 250 கோடி ரூபாய்க்கும் மேல் வசூலித்தது. இந்தப் படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார்.
படத்தில் ஜி.எஸ்.டி., டிஜிட்டல் இந்தியா மற்றும் பண மதிப்பிழப்பு நீக்கம் போன்ற மத்திய அரசுத் திட்டங்களை விமர்சித்துள்ளதாகக் கூறி, பாஜக அரசு இந்தப் படத்தை எதிர்த்தது. இதனால் படத்துக்கு எக்ஸ்ட்ரா விளம்பரம் கிடைத்தது.
கடந்த வருடம் தீபாவளிக்கு இந்தப் படம் ரிலீஸானது. இந்நிலையில், இந்தப் படத்தை வருகிற பொங்கலுக்கு மறுபடியும் ரிலீஸ் செய்கின்றனர். சென்னை கோயம்பேட்டில் உள்ள ரோகிணி தியேட்டரில், பொங்கல் விடுமுறைக்கு ‘மெர்சல்’ படம் ரிலீஸாகிறது. இந்தப் படத்தைப் பார்க்க இதுவரை 500க்கும் மேற்பட்டோர் டிக்கெட் முன்பதிவு செய்துள்ளனர்.
சூர்யா நடிப்பில் ‘தானா சேர்ந்த கூட்டம்’, விக்ரம் நடிப்பில் ‘ஸ்கெட்’, பிரபுதேவா நடிப்பில் ‘குலேபகாவலி’ ஆகிய படங்கள் பொங்கலுக்கு ரிலீஸாக இருக்கின்றன.