தமிழக அரசு விதித்திருந்த 10 சதவீத கேளிக்கை வரியை நீக்கக்கோரி, கடந்த 6ஆம் தேதி முதல் புதுப்படங்களை ரிலீஸ் செய்யாமல் சினிமாத் துறையினர் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். தமிழக அரசுக்கும், சினிமாத் துறையினருக்கும் நடைபெற்ற இறுதிக்கட்டப் பேச்சுவார்த்தைக்குப் பிறகு, 8 சதவீதமாக கேளிக்கை வரி குறைக்கப்பட்டுள்ளது.
இதனால், கடந்த இரண்டு வாரமாக நிறுத்தி வைக்கப்பட்டுருந்த புதுப்படங்களின் ரிலீஸுக்கு விடுதலை கிடைத்துள்ளது. குறிப்பாக, தீபாவளிக்கு ரிலீஸாகுமா, ஆகாதா என்று பல்வேறு விவாதங்களைக் கிளப்பிய விஜய்யின் ‘மெர்சல்’ படம் ரிலீஸாக க்ரீன் சிக்னல் ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து தலைமைச் செயலகத்தில் பத்திரிகையாளர்களுக்குப் பேட்டியளித்த விஷால், “தமிழக அரசுடன் நடந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டுவிட்டது. 8 சதவீதமாக கேளிக்கை வரி குறைக்கப்பட்டுள்ளது. எனவே, திட்டமிட்டபடி தீபாவளிக்கு ‘மெர்சல்’ படம் ரிலீஸாகும். இன்னொரு படமும் தீபாவளிக்கு ரிலீஸாக இருக்கிறது” எனத் தெரிவித்தார்.
தியேட்டர்களில் விழாக்காலங்களில் அதிக கட்டணம் வசூலிக்கப்படுவது குறித்த கேள்விக்கு, “படத்தைத் தயாரிக்கும் நாங்களே குறைவான கட்டணத்தில்தான் டிக்கெட்டை விற்கச் சொல்கிறோம். டிக்கெட்டில் உள்ளதைவிட அதிக விலை சொன்னால், டிக்கெட்டை வாங்க வேண்டாம்” எனத் தெரிவித்த விஷால், பார்க்கிங் கட்டணம் நீக்கம் உள்ளிட்ட கோரிக்கைகள் குறித்து அரசிடம் தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும் கூறினார்.