தென்னிந்திய நடிகர் சங்கத்தின் அவசர பொதுக்குழுக் கூட்டம் நேற்று(அக்.8) சென்னை தேனாம்பேட்டை காமராஜர் அரங்கத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு நடிகர் சங்கத் தலைவர் நாசர் தலைமைத் தாங்கினார். பொதுச் செயலாளர் விஷால் முன்னிலை வகித்தார்.
இக்கூட்டத்தில் பேசிய விஷால், "கட்டிடம் வந்தவுடன் திருமணம் செய்வேன் என்று கூறியுள்ளேன். அதை மீண்டும் நினைவுப்படுத்துவதற்காக மட்டுமே கார்த்தியின் முன்பு பட்டு வேஷ்டி சட்டை நிற்கிறேன். நடிகர் சங்கத்தைப் பொறுத்தவரை மேடையில் கார்த்தியும், வாசலில் நானும் என இடத்தைப் பிரித்துக் கொண்டு, விழா நல்லபடியாக நடக்க வேண்டும் என்று முடிவு செய்து நிற்கிறோம்.
எங்கள் நிர்வாகத்தில் நல்ல விஷயங்களை மட்டுமே கண்டுபிடிக்க முடியும். ஒரு தவறை கூட நீங்கள் கண்டுபிடிக்க முடியாது. இந்த இடத்தில் என்னமோ இருக்கிறது. பத்திரம் சரியாக இருக்கிறது, நமது சார்பாக அனைத்தும் சரியாக இருக்கிறது. இருந்தாலும், இங்கு கட்டிடம் எழுப்புவதில் சிக்கல் வந்துக் கொண்டே இருக்கிறது. எம்.ஜி.ஆர்.ஆர் ஆவியோ, சிவாஜி ஆவியோ, எஸ்.எஸ்.ஆர் ஆவியோ கட்டிட நிலத்தில் புகுந்துவிட்டது என நினைக்கிறேன். கட்டிடம் கட்டி முடிக்கப்படும்வரை போகாது. மறுபடியும் வழக்கு போட்டுப் போரடிக்காதீர்கள். வருகிறாயா. வா... நேருக்கு நேர் வா... எங்களுடன் நேருக்கு நேராக மோது. என்றைக்குமே நேர்மை மட்டுமே ஜெயிக்கும்.
இன்னொரு இடத்தையும் சுத்தப்படுத்த வேண்டும் என்று தயாரிப்பாளர் சங்கத் தலைவராக ஆனேன். ஆனால், முதலில் நடிகர் சங்கமே முக்கியம். இந்தக் கட்டிடம் அடுத்தாண்டு டிசம்பருக்குள் கட்டி முடிக்கப்படும். விரைவில் எம்ஜிஆர் சமாதியைப் பார்த்துவிட்டு நடிகர் சங்கக் கட்டிடத்தைப் பார்க்க வருவது போன்ற ரீதியில் கட்டிடம் இருக்கும். அடுத்த தேர்தலிலும் நிற்போம். ஏனென்றால் கட்டிடத்தைப் பாதியில் விட்டுவிட்டுப் போகும் எண்ணமில்லை" என்று தெரிவித்தார்.