தெலுங்கு சினிமாவின் புகழ்பெற்ற இசையமைப்பாளரான எம்.எம்.கீரவாணி, ஆஸ்கர் நாயகன் ஏ.ஆர்.ரஹ்மானுடன் கைகோர்த்துள்ளார்.
தெலுங்கு, தமிழ், மலையாளம், கன்னடம் மற்றும் ஹிந்தி என 5 மொழிகளிலும் இசையமைத்திருப்பவர் மரகதமணி எனப்படும் எம்.எம்.கீரவாணி. நிறைய தெலுங்குப் படங்களுக்கு இசையமைத்துள்ள இவர், ‘நான் ஈ’, ‘இஞ்சி இடுப்பழகி’, ‘பாகுபலி’ மற்றும் ‘பாகுபலி 2’ ஆகிய தமிழ்ப் படங்களுக்கு இசையமைத்துள்ளார்.
இசை அமைப்பதோடு மட்டுமல்லாமல் பாடல்களும் பாடியிருக்கும் இவர், தெலுங்கில் வெளியான ‘அன்னமய்யா’ படத்துக்காக சிறந்த இசையமைப்பாளருக்கான தேசிய விருது பெற்றவர். ‘அழகன்’ படத்துக்காக தமிழக அரசின் மாநில விருதைப் பெற்றுள்ள இவர், ஆந்திர அரசின் நந்தி விருதை 9 முறை பெற்றுள்ளார். 6 முறை ஃபிலிம் ஃபேர் விருதுபெற்ற பெருமையும் இவருக்கு உண்டு.
ஏ.ஆர்.ரஹ்மானின் இசையில், பாடல் ஒன்றைப் பாடியிருக்கிறார் எம்.எம்.கீரவாணி. ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்து வரும் புதிய படம் ஒன்றுக்காக இந்தப் பாடல் ரெக்கார்ட் செய்யப்பட்டுள்ளது. இரண்டு பெரிய மியூஸிக் டைரக்டர்கள் இணைந்துள்ளதால், இந்தப் பாடலுக்கு இப்போதே எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.