நாளை முதல் ஃபெப்சி ஸ்டிரைக்! திட்டமிட்டப்படி ஷூட்டிங் நடக்கும்: தயாரிப்பாளர் சங்கம் அதிரடி!

ஃபெப்சி ஊழியர்கள் நாளை வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டாலும், திட்டமிட்டப்படி அனைத்து படப்பிடிப்புகளும் நடைபெறும்

சம்பள விவகாரம் தொடர்பாக தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்துக்கும், ஃபெப்சி தொழிலாளர்கள் அமைப்புக்கும் (தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனம்) இடையே அண்மை காலமாகவே கடும் மோதல் ஏற்பட்டு வந்தது. சம்பள பிரச்னை தொடர்பாக பல்வேறு படப்பிடிப்புகள் நிறுத்தப்பட்டன. இதனால், தயாரிப்பாளர்கள் நஷ்டம் அடைந்ததாக கூறப்பட்டது.

அதனைத் தொடர்ந்து நடைபெற்ற தயாரிப்பாளர்கள் சங்கத்தின் அவசரக் கூட்டத்தில், படப்பிடிப்புகளை ஃபெப்சி தொழிலாளர்கள் நிறுத்தியதற்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டது. ஃபெப்சி தொழிலாளர்கள் இல்லாமல் வேறு தொழிலாளர்களை வைத்து படப்பிடிப்புகளை தயாரிப்பாளர்கள் நடத்திக்கொள்ளலாம் என்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதற்கு ஃபெப்சி தொழிலாளர்கள் அமைப்பு கடும் கண்டனம் தெரிவித்தது.

இந்நிலையில், ஃபெப்சியின் தலைவர் ஆர்.கே.செல்வமணி அளித்த பேட்டியில், சுமார் எட்டு ஆண்டுகளாக சம்பளப் பிரச்னை இருந்து வருகிறது. சம்பள விவகாரம் தொடர்பாக, மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை பெப்சியும், தயாரிப்பாளர் சங்கமும் ஒப்பந்தம் போட வேண்டும். பொதுவிதிகளை புத்தகமாக அச்சிட வேண்டும். அப்போதுதான் படப்பிடிப்புகளில் ஏதாவது பிரச்னை ஏற்பட்டால், அதைக் கண்டறிந்து தீர்வு காண முடியும். இதற்காக பேச்சுவார்த்தைகள் நடந்த போதும், எந்த முடிவும் எட்டப்படாமல் இழுபறி நிலையாகவே நீடித்து வந்தது.

எனவே, ஏற்கனவே பேசி முடித்த சம்பளத்தை வழங்க வேண்டும். தயாரிப்பாளர்கள் சங்கம், பெப்சி தொழிலாளர்களோடு வேலை செய்ய மாட்டோம் என்று எடுத்த முடிவை திரும்பப்பெற வேண்டும். பொதுவிதிகள் கையெழுத்தாக வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி ஆகஸ்ட் 1-ம் தேதி முதல் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடவுள்ளோம் என தெரிவித்தார்.

இந்த நிலையில், தயாரிப்பாளர்கள் சங்க துணைத் தலைவர் பிரகாஷ் ராஜ் இன்று அளித்துள்ள பேட்டியில், “ஃபெப்சி ஊழியர்கள் நாளை வேலை நிறுத்தத்திலும் ஈடுபட்டாலும், திட்டமிட்டப்படி அனைத்து படப்பிடிப்புகளும் நடைபெறும். ஷூட்டிங் எந்தவிதத்திலும் பாதிக்கப்படாது. வேலையே இல்லாத நாட்களிலும் சம்பளம் கொடுக்க வேண்டும் என்று கூறுவது எந்த விதத்தில் நியாயம்? ஒருபோதும், ஃபெப்சியுடன் ஒத்துப் போக மாட்டோம் என நாங்கள் கூறவில்லை. ஆனால், வேலை இல்லா நாட்களிலும் சம்பளம் கேட்கிறார்கள். தமிழ் சினிமாவுக்கு மட்டும் ஃபெப்சி ஊழியர்கள் வேலை செய்யவில்லை. மற்ற மொழி சினிமாக்களிலும் அவர்கள் பணிபுரிந்து சம்பளம் வாங்குகிறார்கள். எனவே, அவர்கள் ஸ்டிரைக் நடத்திலும், ஷூட்டிங் நிச்சயம் நடக்கும். அனைத்து நடிகர், நடிகைகளும் எங்களுக்கு ஒத்துழைப்பார்கள்” என்று தெரிவித்துள்ளார்.

×Close
×Close