தமிழக சினிமாத்துறைக்கு விதிக்கப்பட்டுள்ள இரட்டை வரி விதிப்பிற்கு எதிர்ப்புத் தெரிவித்து, திட்டமிட்டப்படி இன்று முதல் தமிழகம் முழுவதும் திரையரங்குகள் மூடப்படும் என்று தமிழ் திரைப்பட வர்த்தக சபை தலைவர் அபிராமி ராமநாதன் அறிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், "தமிழகம் முழுவதும் திரையரங்குகளில் காட்சிகள் ரத்து செய்யப்படுகிறது. 1000 தியேட்டர்கள் வரை மூடப்படுகிறது. நாங்கள் ஜி.எஸ்.டி.யை எதிர்க்கவில்லை. நாடு முழுவதும் 'ஒரு தேசம், ஒரே வரி' எனும் கொள்கையை ஏற்றுக் கொள்கிறோம். ஆனால், மற்ற துறையினருக்கு இல்லாமல், சினிமாத் துறைக்கு மட்டும் இரட்டை வரி விதிக்கப்பட்டுள்ளது. ஜி.எஸ்.டி. வரி 28% மற்றும் கேளிக்கை வரி 30% ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஆக மொத்தம் 58% நாங்கள் வரி செலுத்த வேண்டும். அப்படியெனில், 100 ரூபாய் டிக்கெட்டிற்கு நாங்கள் 58 ரூபாயை அரசுக்கே செலுத்த வேண்டும். இவ்வளவு தொகையாக வரியாகவே அரசுக்கு செலுத்தினால், நாங்கள் எப்படி தொழில் செய்ய முடியும்?.
தியேட்டர்களில் 100 ரூபாய் அல்லது அதற்கு கீழ் டிக்கெட் விற்பனை செய்தால், 18% வரி செலுத்த வேண்டும். அதுவே ரூ.101 முதல் விற்பனை செய்யும் டிக்கெட்டுகளுக்கு 28% வரி செலுத்த வேண்டும். இதுதான் ஜி.எஸ்.டி முறை. இது போதாதென்று மாநில அரசும், 30% கேளிக்கை வரி விதித்துள்ளது. அதுவும் மிகவும் ரகசியமாக இந்த மசோதாவை அரசு நிறைவேற்றியுள்ளது. யாருக்கும் தெரியாமல் மிகவும் ரகசியமாக வைத்திருந்து, வெள்ளியன்று மாலை 5 மணிக்கு இதனை அறிவிக்கிறது. இது எங்களுக்கு முன்பே தெரியவில்லை. மீடியாவான உங்களுக்கே இது தெரியவில்லை. மீடியாவுக்கே தெரியாமல் இதனை அரசு நிறைவேற்றி இருப்பது மிகவும் அதிசயமாக உள்ளது.
உலகத்திலேயே, சினிமாத் துறையைச் சேந்தவர்களுக்கு தங்களது பொருளுக்கு தாங்களே விலையை நிர்ணயிக்க அதிகாரம் இல்லாமல் இருப்பது இங்குதான். எங்களது பொருளை மக்கள் நிச்சயம் ஆதரிப்பார்கள் என்று தெரிந்தால் 300 ரூபாய்க்கு விற்கவும் முடியாது. சரி! 50 ரூபாய்க்கு விற்கலாம் என்று நினைத்தாலும் முடியாது. அதிகமாக விற்கவும் சுதந்திரம் இல்லை, குறைவாக விற்கவும் சுதந்திரம் இல்லை.
எனவே, நாங்கள் ஜி.எஸ்.டி.யை எதிர்க்கவில்லை. ஆனால், எங்களது கோரிக்கை நிறைவேறும் வரை தியேட்டர்கள் இயங்காது. கடந்த வெள்ளியன்று வெளியான 'இவன் தந்திரன்' பட இயக்குனர் ஆர்.கண்ணன் வேண்டுகோளின் படி, அவரது படம் தியேட்டர்களில் தொடர்ந்து ஓடுவது குறித்து நிச்சயம் கலந்து பேசி நல்ல முடிவு எடுக்கப்படும். அதேபோல், ரிலீஸாகியுள்ள மற்ற படங்களுக்கும் ஒரு வழிவகை செய்யப்படும்" என்றார்.