உளவுத்துறை அதிகாரி சிவா(மகேஷ் பாபு), சட்டத் திட்டங்களை பெரிதாக மதிக்காதவர். இதனால், பலமுறை மக்களை பல்வேறு ஆபத்துகளில் இருந்து அவர் காப்பற்றியுள்ளார்.
மக்களில் யாராவது சிலர் பயத்துடன் கால் செய்தால், அவரது ஸ்பை ஆப் மூலம், அவரது கணினிக்கு அலெர்ட் சிக்னல் வந்துவிடும். அதுபோன்று வரும் ஒரு போன் காலில் நாயகி ரகுல் ப்ரீத் சிங் பேசுகிறார். அதேபோல், சுடலை எனும் கேரக்டரில் பிண்ணிப் பெடலெடுத்திருக்கும் எஸ்ஜே சூர்யாவிடம் இருந்து வரும் போன் கால், சிவாவின் பயணத்தை மாற்றுகிறது.
சைக்கோ சீரியல் கில்லராக எஸ்.ஜே. சூர்யாவும், அவரது தம்பியாக பரத்தும் நடித்துள்ளனர்.
எஸ்.ஜே.சூர்யாவுக்கு அனைத்து தகவலையும் திரட்டிக் கொடுத்து ஆலோசனைக் கொடுப்பது பரத்தின் வேலை. அதைக் கச்சிதமாக செய்து முடிப்பது அண்ணன் சூர்யாவின் வேலை. இளம் பெண்கள் முதல் வயதானவர்கள் வரை பாகுபாடின்றி இவர்கள் இருவரும் கொலை செய்கின்றனர். கொல்லப்படும் நபர்களின் மரண ஓலமும், கண்ணீரும் தரும் போதைக்காக தான் இவர்கள் கொலைகளை செய்கின்றனர். இந்த சைக்கோ போதை அனுபவத்தை, அவர்கள் சிறு வயதில் இருக்கும் போதே தொடங்கிவிட்டனர்.
ஹீரோ சிவாவின் போலீஸ் தோழி, இரண்டு பெண்கள் மற்றும் ஒரு இளம் பெண் ஆகியோர் துண்டு துண்டாக வெட்டப்பட்டு கிடப்பதை பார்த்த பின், சிவா தனது புலனாய்வைத் தொடங்குகிறார்.
வில்லனின் முகத்தை நேரடியாக கட்டுவதற்கு முன்னதாகவே, அவன் மூலம் ஆடியன்ஸுக்கு அதிகளவு பயத்தை உண்டு செய்து விடுகிறார் இயக்குனர் முருகதாஸ்.
கிறிஸ்டோபர் நோலனின் ‘தி டார்க் நைட்’ படத்தில் ஹூரோவுக்கும், வில்லனுக்கும் இடையேயான மோதலை பார்ப்பது போன்ற அனுபவம் இப்படத்திலும் ஏற்படுகிறது.
இயக்குனர் அப்படத்தின் பாதிப்பை தனது ஸ்பைடர் படத்தில் செயல்படுத்தி இருக்கலாம்.
பேட்மேனை போல மகேஷ் பாபுவும், ஜோக்கரைப் போல சுடலையின் கேரக்டரும் வடிவமைக்கப்பட்டுள்ளது.
லாஜிக்கும், மேஜிக்கும் ஒருசேர, படத்தின் காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளன. படத்தின் இரு முக்கிய பாத்திரங்கள் ஹீரோவும், வில்லனும் தான். வில்லன் ஒரு திட்டம் போட்டால், ஹீரோ அதை வேறு விதமாக முறியடிக்கிறார். இருவருக்கும் இடையேயான காட்சி பிணைப்புகள் அற்புதம்!.
படத்தின் போது நமக்கு ஏற்படும் பயம் மற்றும் டென்ஷன்களை மகேஷ் பாபுவின் டைமிங் காமெடி மூலம் சற்று ஆற்றுகிறார் இயக்குனர்.
முருகதாஸ் இதற்கு முன் தான் இயக்கிய சில படங்களில், பாடல்களை வலிய திணித்திருந்தது போன்று, நல்லவேளையாக இதில் அப்படி எதுவுமில்லை. ஆனால், சிவாவும், சுடலையும் சந்திக்கும் முக்கியமான கட்டத்தில் வரும் ‘ஹாலி ஹாலி’ பாடல் தான் சற்று நெருடலை ஏற்படுத்துகிறது. அதை மட்டும் தவிர்த்திருக்கலாம்.
முருகதாஸின் பல படங்களைப் போன்று, சமூகத்தில் இருக்கும் தீய சக்திகளை அழிப்பதை, மாஸாக நமக்கு கொடுத்திருக்கும் மற்றொரு படம் தான் ஸ்பைடர்.