/indian-express-tamil/media/media_files/2025/10/18/kannu-2025-10-18-16-20-14.jpg)
தமிழ் சினிமாவில், வாழ்க்கைக்கு தேவையான தத்துவங்களை தனது பாடல் வரிகள் மூலம் சொல்லிக்கொடுத்த பெருமைக்கு சொந்தக்காரர் தான் கவியரசர் கண்ணதாசன். எம்.ஜி.ஆர் சிவாஜி தொடங்கி ரஜினிகாந்த் கமல்ஹாசன் என பலருக்கும் தனது பாடல்கள் மூலம் ஹிட் கொடுத்துள்ள கண்ணதாசன் பெரும்பாலான பாடல்களை தனது வாழ்க்கையில் சந்தித்த அனுபவங்களை வைத்து எழுதியுள்ளார்.
அதேபோல் தனது பாடல்கள் மட்டுமல்லாமல், மற்ற கவிஞர்களின் பாடல்களையும் ரசிக்கும் மனம் கொண்ட கண்ணதாசன், வாலி எழுதிய ஒரு பாடலை கேட்டுவிட்டு அவரை பாராட்டி, நான் இறந்தால் நீதான் கவி பாட வேண்டும் என்று கூறியிருந்தார். அதன்படி கண்ணதாசன் இறந்த 3-வது நாள் அவருக்கான கவிஞர் வாலி கவிதை பாடியுள்ளார். மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதனுடன் இணைந்து பல ஹிட் பாடல்களை கொடுத்துள்ளார் கண்ணதாசன். எம்.எஸ்.வி-யும் கண்ணதாசனும் நெருங்கிய நணபர்களாகவே இருந்தனர்.
இந்நிலையில், கவிஞர் கண்ணதாசன் குறித்து எம்.எஸ்.விஸ்வநாதன் பேசிய த்ரோபேக் வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. அதில், ”கவிஞர் கண்ணதாசன் உடல் நிலை பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் இருந்தார். தலைமாட்டில், கால்மாட்டில் இரண்டு பேர் இருக்கிறார்கள். என் உடன் மெட்டு போடுவது மாதிரியும், பாட்டு பாடுவது மாதிரியும் கற்பனை செய்து உளறி கொண்டுள்ளார். உடனே எனக்கு போன் வந்தது. எம்.ஜி.ஆர் தான் போன் செய்தார். விஸ்வநாதா நீ உடனே மருத்துவமனைக்கு சென்று கண்ணதாசனை பாரு என்றார். எனக்கு சில பிரச்சனைகள் இருந்ததால் நான் ஒரு பத்து நாட்களுக்கு பிறகு போகிறேன் என்றேன்.
கவிஞர் ரொம்ப வெறியாக இருக்கிறாராம். அதனால் ஒரு டேப்ரி கார்டுல கண்ணதாசனை ஊக்குவிப்பது போன்றும் பாடல் கம்போஸ் செய்வது போன்றும் ஒரு கேசட் பண்ணு என்று எம்.ஜி.ஆர் சொன்னார். அதை நான் பண்ணிவிட்டு அந்த கேசட் கொண்டு போவதற்குள் எனக்கு கண்ணதாசன் இறந்துவிட்டார் என்று செய்தி வந்துவிட்டது. கண்ணதாசனை பார்க்க முடியாமல் போய்விட்டது. அப்போது கண்ணதாசன் ஒரு கவிதை எழுதி இருந்தார் கடவுளுக்கு.
நான் பல தவறுகள் செய்திருக்கேன் வாழ்க்கையில். ஆனால், யார் குடும்பத்தையும் கெடுத்தது இல்லை. நானே என்னை அழித்துக் கொண்டேன். தமிழ் மீது எனக்கு பற்று இருக்கிறது. ஆசை இருக்கிறது சேவை செய்ய வேண்டும். விஸ்வநாதன் எல்லாம் நான் இறந்துவிட்டால் தாங்கமாட்டான். ஒரு ஐந்து வருடம் என்னை விட்டு வை என்று எழுதியிருந்தார். அந்த கவிதையை கண்ணதாசன் உடலை எடுத்துக் கொண்டு போகும் போது நோட்டீஸ் அடுத்து எல்லோருக்கும் கொடுக்க சொன்னார் எம்.ஜி.ஆர்.
கண்ணதாசனுக்கு முதல் கொல்லி நான் தான் வைத்தேன். அதன் பின்னர் தான் அவர் குழந்தைகள் கொல்லி வைத்தார்கள். என் வாழ்க்கையும் கட்டுப்படுத்த முடியாத துக்கம் முதலில் அம்மா இறந்தது. அதன்பிறகு கண்ணதாசன் இறந்தது. அதன் பிறகு எம்.ஜி.ஆர் இறந்தது. ஒரு கவிஞனும் இசையமைப்பாளரும் நல்ல கணவன் - மனைவி போன்று இருந்தால் தான் இசை என்னும் குழந்தைகள் பிறக்கும்” என்றார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.