நடிகர் விஜய் ஆண்டனி நடிக்கும் ‘த்ரில்லர்’ திரைப்படமான காளி திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் செவ்வாய் கிழமை வெளியானது. இத்திரைப்படத்தை இயக்குநரும், நடிகர் மற்றும் தயாரிப்பாளர் உதயநிதி ஸ்டாலினின் மனைவியுமான கிருத்திகா உதயநிதி இயக்குகிறார்.
#Kaali first look is here!!!Enjoyin every bit of it ???? @vijayantony @mrsvijayantony @Richardmnathan @editorkishore pic.twitter.com/NEyMAEIVva
— kiruthiga udhayanidh (@astrokiru) 5 September 2017
இயக்குநர் ரஞ்சித் இயக்கி, நடிகர்கள் கார்த்தி, கலையரசன் ஆகியோர் நடித்த திரைப்படம் ‘மெட்ராஸ்’. இந்த திரைப்படத்திற்கு முன்னதாக ‘காளி’ என்ற பெயரே சூட்டப்பட்டது. ஆனால், சில காரணங்களுக்காக பெயரை ‘மெட்ராஸ்’ என மாற்ற வேண்டியிருந்தது. மெட்ராஸ் திரைப்படத்தில் நடிகர் கார்த்தியின் பெயர் காளி என்பது குறிப்பிடத்தக்கது. இதையடுத்து ‘கபாலி’ திரைப்படத்திற்கும் ‘காளி’ என பெயர் வைக்க முடிவு செய்யப்பட்டு பின்னர் அப்பெயரை சூட்ட முடியாமல் போனது. இதேபோல், கடந்த 1980-ஆம் ஆண்டு நடிகர் ரஜினிகாந்த் நடித்த திரைப்படத்தின் பெயர் ‘காளி’. இப்படி பல வகைகளில் தமிழ் சினிமாவுடன் நெருங்கிய தொடர்பு கொண்டிருக்கும் பெயர் ‘காளி’.
இப்போது, ‘காளி’ எனும் பெயரில் இசையமைப்பாளரும், நடிகருமான விஜய் ஆண்டனி திரைப்படம் நடிக்க, கிருத்திகா உதயநிதி இத்திரைப்படத்தை இயக்குகிறார். கிருத்திகா இயக்கிய முதல் திரைப்படம் ‘வணக்கம் சென்னை’. கடந்த 2013-ஆம் ஆண்டு இத்திரைப்படம் வெளியான நிலையில், சுமார் 4 ஆண்டுகளுக்கு பிறகு காளி திரைப்படத்தை இவர் இயக்குகிறார். இத்திரைப்படத்தை விஜய் ஆண்டனி ஃபிலிம் கார்ப்பரேஷன் நிறுவனம் சார்பாக அவரது மனைவி ஃபாத்திமா விஜய் ஆண்டனி தயாரிக்கிறார்.
விஜய் ஆண்டனியின் முந்தைய திரைப்படங்களைவிட சவாலான கதாபாத்திரத்தில் நடிப்பதாக திரைப்படக் குழுவினர் தெரிவித்துள்ளனர். இத்திரைப்படத்திற்கு பெரும் எதிர்பார்ப்பு தற்போது முதலே கிளம்பியுள்ளது.