“எனக்கு மிகவும் பிடித்த நடிகர் ரஜினிகாந்த்” - அனுஷ்கா

‘எனக்கு மிகவும் பிடித்த நடிகர் ரஜினிகாந்த். அதற்காக மற்றவர்களைப் பிடிக்காது என்று அர்த்தம் இல்லை’ என அனுஷ்கா தெரிவித்துள்ளார்.

‘எனக்கு மிகவும் பிடித்த நடிகர் ரஜினிகாந்த். அதற்காக மற்றவர்களைப் பிடிக்காது என்று அர்த்தம் இல்லை’ என அனுஷ்கா தெரிவித்துள்ளார்.

அனுஷ்கா நடித்துள்ள ‘பாகமதி’ படம் வருகிற 26ஆம் தேதி ரிலீஸாகிறது. அசோக் இயக்கியுள்ள இந்தப் படம், தமிழ், தெலுங்கு மற்றும் ஹிந்தியில் ரிலீஸாகிறது. இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று நடைபெற்றது.

அதில் கலந்துகொண்டு பேசிய அனுஷ்கா, “நான் நடித்த ‘பாகுபலி’ படத்துக்கும், இந்த ‘பாகமதி’ படத்துக்கும் எந்த தொடர்பும் கிடையாது. அது வேறு கதை, இது வேறு கதை. இது ஒரு திகில் படம். இதில், சஞ்சனா என்ற ஐ.ஏ.எஸ். அதிகாரியாக நடித்திருக்கிறேன். இந்தப் படத்தின் இயக்குநர் மற்றும் தயாரிப்பாளர் இருவரும் எனக்கு நன்கு அறிமுகமானவர்கள்.

கதையும், என்னுடைய கதாபாத்திரமும் பிடித்ததால் மட்டுமே இந்தப் படத்தில் நடிக்க சம்மதித்தேன். இதுவும் கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள கதைதான். உன்னி முகுந்தன் ஹீரோவாக நடித்திருக்கிறார். எனக்கு சண்டைக் காட்சி எதுவும் இல்லை. தமிழ் ரசிகர்களுக்கு ‘பாகமதி’ படத்தை ரொம்பவே பிடிக்கும்.

‘இஞ்சி இடுப்பழகி’ படத்துக்காக என் உடல் எடையைக் கூட்டி நடித்தேன். உடம்பு குண்டான பின்பு, அதைக் குறைக்க முயற்சி செய்தேன். கொஞ்சம் கொஞ்சமாக எடையைக் குறைத்து வருகிறேன். யோகா மூலம் என் உடல் எடை ஓரளவு குறைந்திருக்கிறது.

தமிழ் சினிமாவில் எனக்குப் பிடித்த நடிகர் ரஜினிகாந்த். இப்படி சொல்வதன் மூலம் மற்ற நடிகர்களை எனக்குப் பிடிக்காது என்று அர்த்தம் அல்ல. எல்லா ஹீரோக்களும் என் நண்பர்கள் தான்.

எனக்குத் திருமணம் செய்துவைக்க, என் பெற்றோர்கள் நெருக்கடி கொடுக்கிறார்கள் என்ற தகவலில் உண்மை இல்லை. முதலில், நல்ல பையன் கிடைக்கட்டும். அவரை எனக்குப் பிடித்தால் உடனே திருமணம்தான். நண்பர்கள், ரசிகர்கள் என எல்லோரையும் அழைத்து, அவர்கள் வாழ்த்துகளுடன் திருமணம் செய்து கொள்வேன்.

எனக்கும், பிரபாஸுக்கும் காதல் இருந்து வருவதாகவும், இருவரும் திருமணம் செய்துகொள்ள முடிவு செய்திருப்பதாகவும் பேசப்படுவதில் உண்மை இல்லை. நிச்சயமாக அவருடன் எனக்குத் திருமணம் இல்லை. பிரபாஸ் எனக்கு நல்ல நண்பர், அவ்வளவுதான்.

‘தெய்வத் திருமகள்’, ‘தாண்டவம்’ ஆகிய இரண்டு படங்களும் தமிழில் எனக்குப் பிடித்த படங்கள். ‘பாகுபலி’ படத்துக்காக எனக்குத் தேசிய விருது கிடைக்கவில்லை என நான் வருத்தப்படவில்லை. ரசிகர்கள், பொதுமக்கள் இருதரப்பினருக்கும் என் நடிப்பு பிடித்தால் போதும். அவர்களின் பாராட்டுகள் தான் மிகப்பெரிய விருதுகள்” என்று கூறினார்.

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest Entertainment news in Tamil.

×Close
×Close