சென்னையில் நடைபெறும் சர்வதேச திரைப்பட விழாவில், தமிழில் உருவாகியுள்ள ஓரின ஈர்ப்பு திரைப்படம் திரையிடப்பட உள்ளது.
15வது சென்னை சர்வதேச திரைப்பட விழா, டிசம்பர் 14ஆம் தேதி முதல் 21ஆம் தேதி வரை நடைபெற இருக்கிறது. சென்னையில் உள்ள தேவி, தேவிபாலா, சத்யம், கேசினோ, அண்ணா, தாகூர் ஃபிலிம் செண்டர், ரஷ்யன் செண்டர் ஆஃப் சயின்ஸ் அண்ட் கல்ச்சர் ஆகிய தியேட்டர்களில் படங்கள் திரையிடப்பட உள்ளன.
இந்த திரைப்பட விழாவில், ‘என் மகன் மகிழ்வன்’ என்ற படமும் திரையிடப்பட உள்ளது. ஆண்களின் ஓரின ஈர்ப்பு பற்றிய இந்தப் படம், தமிழில் ஓரின ஈர்ப்பு பற்றி எடுக்கப்பட்ட முதல் படமாகும். அனுபமா குமார், அபிஷேக் ஜோசப், அஸ்வின்ஜித், கிஷோர், ஜெயப்பிரகாஷ் என பிரபல நடிகர்கள் இந்தப் படத்தில் நடித்துள்ளனர். ரத்தின குமார் ஒளிப்பதிவு செய்ய, சாந்தன் இசையமைத்துள்ளார். படத்தை இயக்க்கியுள்ள லோகேஷ் குமார், ஏற்கெனவே ஓரின ஈர்ப்பு உள்ளிட்ட சமூகப் பிரச்னைகள் பற்றி பல குறும்படங்களை இயக்கியுள்ளார்.
கிட்டத்தட்ட 2 மணி நேரம் ஓடக்கூடிய இந்தப் படத்துக்கு, சென்சார் அதிகாரிகள் யு/ஏ சான்றிதழ் கொடுத்துள்ளனர். மெல்போர்னில் நடைபெற்ற இண்டியன் ஃபிலிம் ஃபெஸ்டிவல், நியூயார்க்கில் நடைபெற்ற நியூபெஸ்ட் எல்.ஜி.பி.டி. ஃபிலிம் ஃபெஸ்டிவல், கொல்கத்தா இண்டர்நேஷனல் எல்.ஜி.பி.டி. ஃபிலிம் மற்றும் வீடியோ ஃபெஸ்டிவல் ஆகிய திரைப்பட விழாக்களிலும் இந்தப் படம் திரையிடப்பட்டுள்ளது. அத்துடன், கடந்த வருடம் நடைபெற்ற கோவா ஃபிலிம் பஜாரிலும் திரையிடப்பட்டுள்ளது.
இந்தியாவில் ஓரின ஈர்ப்பு தடை செய்யப்பட்டுள்ள நிலையில், அதைப்பற்றிய படம் என்பது இந்தப் படத்துக்கு எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. அதுவும், கலாச்சாரம் என்ற பெயரில் கட்டுண்டு கிடக்கும் தமிழ்நாட்டில், தமிழில் இந்தப் படம் உருவாகியிருக்கிறது. முதன்முதலில் தமிழ்நாட்டில் திரையிடப்படும் இந்தப் படம், பல்வேறு கேள்விகளை எழுப்பும் என்று தெரிகிறது.