பாலாவின் வழக்கமான குரூர கதையில், இந்த முறை கொஞ்சம் மென்மை சேர்த்து சொல்லப்பட்டுள்ள படம் தான் ‘நாச்சியார்’.
அப்பா - அம்மா பேர் கூடத் தெரியாமல், கல்யாணங்களில் சமையல் வேலை பார்த்து வாழும் சின்னப் பையன் ஜீ.வி.பிரகாஷ். தன்னுடைய வயசு எவ்வளவு என்று கூடத் தெரியாமல் வாழும் அப்பாவி. ஒருநாள் சமையல் வேலைக்குப் போகும்போது, அந்தக் கல்யாண வீட்டில் வேலை பார்க்கும் இவானாவைச் சந்திக்கிறார். இருவருக்கும் இடையில் காதல் ஏற்படுகிறது.
இருவரும் காதலித்து வரும் வேளையில், ஒருநாள் இருவருக்குமிடையே உறவு நிகழ்ந்து விடுகிறது. இதனால், கர்ப்பமாகிறார் இவானா. இந்த விஷயம் போலீஸுக்குத் தெரியவர, வழக்கைக் கையில் எடுக்கிறார் அசிஸ்டண்ட் கமிஷனரான ஜோதிகா. மைனர் பெண்ணைக் கெடுத்ததாக ஜீ.வி.பிரகாஷைக் கைது செய்கிறது போலீஸ். ஆனால், இருவரின் சம்மதத்துடன் தான் உறவு நடந்ததாகச் சொல்கிறார் இவானா.
இருந்தாலும், சிறுவர் சீர்திருத்தப் பள்ளிக்கு அனுப்பப்படுகிறார் ஜீ.வி.பிரகாஷ். இவானாவை, ஜோதிகாவே தன் கஸ்டடியில் எடுத்து, தன் வீட்டிலேயே வைத்துப் பாதுகாக்கிறார். இவானாவுக்கு ஆண் குழந்தை பிறக்க, அந்தக் குழந்தைக்கு டிஎன்ஏ டெஸ்ட் எடுத்துப் பார்க்கும்போதுதான் அது ஜீ.வி.பிரகாஷுக்குப் பிறந்த குழந்தையில்லை எனத் தெரிய வருகிறது. பின்னர், அந்தக் குழந்தை யாருக்குப் பிறந்தது? அதன் பிறகு என்ன நடக்கிறது? என்பது மீதிக்கதை.
நேர்மையான போலீஸ் அதிகாரி நாச்சியாராக வரும் ஜோதிகாவுக்கு, இதுவரை நடித்திராத முற்றிலும் புதுமையான வேடம். அவருடைய திமிர்த்தனமும், கெத்தும் ரசிக்க வைக்கிறது. அதற்காக என்ன ஏதென்று விசாரிக்காமல் அப்பாவியைக் கூட அடித்துத் துவைப்பது எந்த வகையில் சேர்த்தி என்று தெரியவில்லை.
அப்பாவி இளைஞனாக ஜீ.வி.பிரகாஷ் நடித்திருக்கிறார். பார்ப்பதற்கு ‘பிதாமகன்’ விக்ரமை நினைவுபடுத்தினாலும், நல்லவேளை ஜீ.வி.பிரகாஷை சுடுகாட்டில் வேலைசெய்ய வைக்கவில்லை பாலா. காதலியிடம் கொஞ்சும் இடங்களில் அழகோ அழகு.
இவானா, சினிமாவுக்கு நல்ல அறிமுகம். மூக்கும் முழியுமாக அம்சமாக இருக்கிறார். ஒவ்வொரு காட்சியிலும் அவர் வெளிப்படுத்தும் முகபாவங்கள் அசத்தலாக இருக்கின்றன. அடுத்தடுத்து நல்ல இயக்குநர்களின் படங்களில் நடித்தால் இன்னும் மிளிரக்கூடிய வாய்ப்பு அதிகமாகவே இருக்கிறது.
பாலா படங்கள் என்றாலே கொடூர மனநிலையுடன் தான் போகவேண்டும் என்ற சிந்தனையை இந்தப் படம் கொஞ்சம் மாற்றியிருக்கிறது. முதல் பாதி முடியும்போது, ‘இது பாலா படமா?’ என்று நினைக்கத் தோன்றுகிற அளவுக்கு மென்மையைக் கடைப்பிடித்திருக்கும் பாலா, இடைவேளைக்குப் பிறகு தன் கோர முகத்தைக் காட்டுகிறார். ஆனால், அந்தக் காட்சி ஏற்கெனவே ஒரு படத்தில் வந்துவிட்டதால், பெரிதாக தாக்கத்தை ஏற்படுத்தவில்லை.
தேனி ஈஸ்வரின் ஒளிப்பதிவில், துரத்தல் காட்சிகள் பதைபதைக்க வைக்கின்றன. இந்தப் படத்துக்கு இளையராஜா தான் இசை என்பதை, டைட்டில் கார்டு பார்த்துதான் தெரிந்துகொள்ள முடிகிறது.
பொதுவாக ஒரு படம் நன்றாக இருக்கிறதோ, இல்லையோ... படம் பார்த்து முடித்த திருப்தி இருக்கும். ஆனால், அப்படி ஒரு திருப்தியை இந்தப் படம் தரவில்லை என்பதுதான் உண்மை.