நயன்தாராவின் முதல் படம் ரிலீஸாகி நேற்றுடன் 14 ஆண்டுகள் ஆகிவிட்டதால், அவருடைய ரசிகர்கள் டிரெண்டாக்கியுள்ளனர்.
திருவல்லாவில் உள்ள மார்த்தோமா கல்லூரியில் ஆங்கில இலக்கியம் படிக்கும்போது மாடலிங்கில் ஈடுபட்டவரை, இயக்குநர் சத்யன் அந்திக்காட் தன்னுடைய ‘மனசினக்கரே’ மலையாளப் படத்தில் நடிகையாக அறிமுகப்படுத்தினார். 2003ஆம் ஆண்டு கிறிஸ்துமஸ் தினத்தில் இந்தப் படம் ரிலீஸானது. இந்தப் படம் ரிலீஸாகி நேற்றுடன் 14 ஆண்டுகள் ஆகிவிட்டன.
தொடர்ந்து மலையாளப் படங்களில் நடித்துக் கொண்டிருந்த நயன்தாரா, 2005ஆம் ஆண்டு ரிலீஸான ‘ஐயா’ படத்தில் சரத்குமார் ஜோடியாக தமிழில் அறிமுகமானார். அடுத்த படத்திலேயே ‘சூப்பர் ஸ்டார்’ ரஜினியுடன் ஜோடி போடும் வாய்ப்பு கிடைத்தது. பி.வாசு இயக்கிய ‘சந்திரமுகி’ படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நடித்தார்.
அதன்பிறகு சூர்யா, விஜய், எஸ்.ஜே.சூர்யா, ஜீவா, சிம்பு, அஜித், தனுஷ், ஆர்யா, ஜெயம் ரவி, விஜய் சேதுபதி, விக்ரம், கார்த்தி, சிவகார்த்திகேயன் என எல்லா முன்னணி நடிகர்களுடனும் நடித்துவிட்டார். த்ரிஷாவுக்கு ரஜினியுடன் நடிக்காத குறை இருப்பது போல, நயனுக்கு கமலுடன் நடிக்காத குறை இருக்கிறது.
தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என 4 தென்னிந்திய மொழிகளிலும் நடித்துவிட்டார். ஆனால், இதுவரை ஒரே ஒரு கன்னடப் படத்தில் மட்டுமே நடித்துள்ளார். உபேந்திராவுடன் நடித்த ‘சூப்பர்’ படம்தான் அது. தெலுங்கிலும் இதே பெயரில் இந்தப் படம் ரிலீஸானது.
ஹீரோயினாக இருந்தாலும், தனக்குப் பிடித்த மூன்று பேருக்காக ஒரு பாட்டுக்கு டான்ஸ் ஆடியிருக்கிறார் நயன்தாரா. ரஜினி, விஜய் மற்றும் தனுஷ் தான் அந்த மூவரும். ‘சிவாஜி’ படத்தில் ரஜினியுடன் ‘பல்லேலக்கா’ பாடலுக்கும், ‘சிவகாசி’ படத்தில் விஜய்யுடன் ‘கோடம்பாக்கம் ஏரியா’ பாடலுக்கும், ‘எதிர்நீச்சல்’ படத்தில் தனுஷுடன் ‘லோக்கல் பாய்ஸ்’ பாடலுக்கும் ஆடியிருக்கிறார். இதுதவிர, ஒரு மலையாளப் படத்திலும் ஒரு பாடலுக்கு ஆடியிருக்கிறார்.
நயனின் சினிமா வாழ்க்கை போலவே, சொந்த வாழ்க்கையும் ஏற்ற, இறக்கங்களைச் சந்தித்ததுதான். சிம்பு, பிரபுதேவாவுக்குப் பிறகு தற்போது இயக்குநர் விக்னேஷ் சிவன் மீது அன்பாக இருக்கிறார்.
சென்னை, எக்மோர் மியூஸியம் எதிரே அமைந்துள்ள அபார்ட்மெண்டில் தான் தற்போது வசித்து வருகிறார்.
‘ராஜா ராணி’ படத்துக்காக தமிழக அரசு விருதும், ‘புதிய நியமனம்’ படத்துக்காக கேரள அரசு விருதும், ‘ராம ராஜ்யம்’ படத்துக்காக ஆந்திர அரசு விருதும் பெற்றவர். அத்துடன், தமிழ் சினிமாவுக்குப் பங்காற்றியதற்காக தமிழக அரசின் ‘கலைமாமணி’ விருதும் பெற்றுள்ளார்.
ஹீரோக்களுடன் டூயட் பாடிக் கொண்டிருப்பது அலுக்கவே, ஹீரோயினுக்கு முக்கியத்துவம் உள்ள படங்களில் நடிக்கத் தொடங்கினார். ‘மாயா’, ‘டோரா’, ‘அறம்’ படங்கள் அந்த வகையைச் சேர்ந்ததுதான். சமூகக் கருத்துடன் சமீபத்தில் வெளியான ‘அறம்’, நயனுக்கு மிகப்பெரிய மார்க்கெட்டை உருவாக்கியிருக்கிறது. இந்தப் படத்தின் இரண்டாம் பாகம் விரைவில் உருவாக இருக்கிறது என்கிறார்கள்.
தன்னுடைய தோல்விகளுக்கு மற்றவர்களை நோக்கி கைகாட்டாமல், தன்னை நோக்கியே கைகாட்டிக் கொள்வதுதான் நயனின் ப்ளஸ். அந்தக் குணம்தான் இத்தனை வருடங்களாக அவரை முன்னணியில் வைத்திருக்கிறது. அதுமட்டுமல்ல, எத்தனை அடிகள் வாங்கினாலும், சாம்பலில் இருந்து உயிர்த்தெழும் ‘பீனிக்ஸ்’ பறவையாக அவரை உயிர்த்தெழ வைத்துள்ளது.
அஜய் ஞானமுத்து இயக்கத்தில் ‘இமைக்கா நொடிகள்’ படத்தில் நடித்துள்ள நயன், அடுத்து சக்ரி டோலட்டி இயக்கத்தில் ‘கொலையுதிர் காலம்’, நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ‘கோலமாவு கோகிலா’ மற்றும் சில தெலுங்குப் படங்களிலும் நடித்து வருகிறார்.