‘நயன்தாராவை நான் செலக்ட் பண்ணவில்லை, அவர்தான் என்னை செலக்ட் செய்தார்’ என ‘அறம்’ இயக்குநர் கோபி நயினார் தெரிவித்துள்ளார்.
கோபி நயினார் இயக்கத்தில் கடந்த வாரம் வெளியான படம் ‘அறம்’. அரசை நோக்கி கேள்வி கேட்கும் சமூகக் கருத்துள்ள படமாக ‘அறம்’ வெளியாகியுள்ளது. கலெக்டராக நயன்தாரா நடிக்க, ‘காக்கா முட்டை’ சிறுவர்கள் விக்னேஷ், ரமேஷ், ராமச்சந்திரன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். ஜிப்ரான் இந்தப் படத்துக்கு இசையமைத்துள்ளார்.
‘அறம்’ படத்தின் இரண்டாம் பாகம் எடுக்கவும் நயன்தாரா ஓகே சொல்லியுள்ள நிலையில், முக்கியமான தகவல் ஒன்றைக் கூறியுள்ளார் கோபி நயினார். “இந்தக் கதைக்காக நான் நயன்தாராவை செலக்ட் செய்யவில்லை. நான் கதையைச் சொல்லும்போது, செலக்ட் செய்யும் இடத்தில் நயன்தாரா தான் இருந்தார். அப்புறம், இந்தக் கதையை நான் எழுதும்போது வெறும் மாவட்ட கலெக்டர் என்றுதான் எழுதினேன். அது பெண் கேரக்டர் என நான் எழுதவில்லை” என்று தெரிவித்துள்ளார்.
ஆக, நயன்தாரா கதையைக் கேட்டு ஓகே சொன்ன பிறகுதான் அந்த கலெக்டர் கேரக்டர் பெண் கதாபாத்திரமாக உருவாக்கப்பட்டிருக்கிறது. ஆனால், பெண் கேரக்டராக இருந்ததால்தான் அந்தக் கதாபாத்திரம் வலிமையாகவும் இருந்தது என்பதை ஒப்புக் கொள்ளத்தான் வேண்டும்.