/indian-express-tamil/media/media_files/2024/12/12/Ijn6KhAXhjc7FvVuZ8zT.jpg)
தென்னிந்திய திரையுலகில் முன்னணி நடிகையாக திகழ்ந்து வரும் நடிகை நயன்தாரா திரையுலகில் 22 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளதாக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள நிலையில், அவருக்கு ரசிகர்கள் பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
இந்த செய்தியை ஆங்கிலத்தில் படிக்க இங்கே க்ளிக் செய்யவும்:
மூத்த மலையாள இயக்குநர் சத்யன் அந்திக்காடு இயக்கத்தில் 2003-ம் ஆண்டு வெளியாக 'மனசினக்கரே' படத்தில் கதாநாயகியாக அறிமுகமானவர் தான் நயன்தாரா. அன்று முதல், தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட திரையுலகங்களைத் தன் வசப்படுத்தினார். தற்போது இவர் சினிமா உலகில் 22 ஆண்டுகளை நிறைவு செய்ததையடுத்து, தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் நன்றி தெரிவித்து ஒரு குறிப்பைப் பகிர்ந்துள்ளார்.
அவர் அதில், "முதலில் கேமராவிற்கு முன் வந்து நின்று 22 ஆண்டுகள் ஆகிவிட்டன. சினிமா என் வாழ்க்கையின் காதலாக மாறும் என்று அப்போது எனக்குத் தெரியாது. ஒவ்வொரு காட்சியும், ஒவ்வொரு ஷாட்டும், ஒவ்வொரு அமைதியும் என்னை வடிவமைத்தது, குணப்படுத்தியது, நான் யார் என்பதை உருவாக்கியது. என்றென்றும் நன்றி உணர்வுடன் இருப்பேன்" என்று குறிப்பிட்டுள்ளார்.
இந்தியாவிலேயே அதிக சம்பளம் வாங்கும் நடிகைகளில் ஒருவரான நயன்தாரா, தமிழ் சினிமா மூலமே நட்சத்திர அந்தஸ்தைப் பெற்றார். 2005 ஆம் ஆண்டு சரத்குமாருக்கு ஜோடியாக 'ஐயா' திரைப்படத்தில் தமிழில் அறிமுகமானார். அதன் பிறகு, ரஜினிகாந்துடன் 'சந்திரமுகி', சூர்யாவுடன் 'கஜினி', சிலம்பரசனோடு 'வல்லவன்' போன்ற படங்களில் முன்னணி வேடங்களில் நடித்து தனக்கென ஒரு பெயரைப் பதித்தார்.
அதேபோல், 2006 ஆம் ஆண்டு வெங்கடேஷுக்கு ஜோடியாக பிரம்மாண்ட வெற்றி பெற்ற 'லட்சுமி' திரைப்படத்தின் மூலம் தெலுங்கில் அறிமுகமானார். கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாக நயன்தாரா பல்வேறு தென்னிந்தியத் திரையுலகங்களுக்கு இடையே பணியாற்றி, தன் பெயரில் வெற்றிகளைக் குவித்து, அனைத்து மொழிகளிலும், குறிப்பாகத் தமிழில், தன் நட்சத்திர அந்தஸ்தை அதிகரித்து வருகிறார்.
நயன்தாரா தொடர்ந்து பல்வேறு மொழிகளில் முன்னணி நட்சத்திரங்களின் பிரம்மாண்டமான படங்களில் ஒரு பகுதியாக இருந்து தன் கெரியரை சமன் செய்துள்ளார். 'மாயா', 'டோரா', 'அறம்' மற்றும் 'ஐரா' போன்ற அவர் தனிக் கதாநாயகியாக நடித்த படங்கள், ஒரு படத்தை தன் தோளில் தாங்கிச் செல்லும் அவரது திறமைக்குச் சான்றாக அமைந்தன. தற்போதுவரை அவர் பல்வேறு பிராந்திய மொழிகளில் 75க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.
2022 ஆம் ஆண்டு 'நானும் ரவுடிதான்' திரைப்படத்தின் இயக்குனர் விக்னேஷ் சிவனை மணந்தார். இந்தத் தம்பதிக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். சமீபத்தில் ஷாருக்கான் நடித்த 'ஜவான்' (இது அவரது பாலிவுட் அறிமுகம்) மற்றும் 'அன்னபூரணி: தி காடஸ் ஆஃப் ஃபுட்' ஆகிய படங்களில் நயன்தாரா நடித்திருந்தார். அடுத்து பல படங்களை கைவசம் வைத்துள்ள நயன்தாரா நிவின் பாலிக்கு ஜோடியாக 'டியர் ஸ்டூடண்ட்ஸ்' மற்றும் மம்மூட்டி, மோகன்லால் ஆகியோருக்கு ஜோடியாக 'பேட்ரியட்' ஆகிய மலையாள படங்கள் கவினுக்கு ஜோடியாக நடிக்கும் 'ஹாய்' ஆகிய படங்கள் உள்ளன.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.