Advertisment

அறம் - சினிமா விமர்சனம்

இந்தப் படத்தில் நடித்ததற்காக நயன்தாராவிற்கு மிகப்பெரிய சல்யூட். அரசு அதிகாரியாக இருந்துகொண்டு, அரசின் அவலட்சணங்களைப் பேசியிருக்கும் துணிச்சலுக்குப் பாராட்டுகள்.

author-image
cauveri manickam
புதுப்பிக்கப்பட்டது
New Update
aramm nayanthara

மாவட்ட ஆட்சியரான நயன்தாரா, நிகழ்ச்சிக்குச் செல்லும் வழியில் கிராம மக்கள் குடிநீருக்காகப் போராட்டம் நடத்துவதைப் பார்க்கிறார். உடனே அவர்களுக்கு குடிநீர் ஏற்பாடு செய்ய உத்தரவிட்டு பயணத்தைத் தொடரும் நயன்தாராவிற்கு, இன்னொரு கிராமத்தில் ஆழ்துளை கிணற்றுக்குள் விழுந்த தகவல் கிடைக்கிறது.

Advertisment

நிகழ்ச்சியை ரத்துசெய்யச் சொல்லிவிட்டு உடனடியாக சம்பவ இடத்துக்கு விரைகிறார் நயன்தாரா. அந்தக் குழந்தையை வெளியில் எடுக்க அவர் மேற்கொள்ளும் முயற்சிகளும், அதனால் ஏற்படும் சோதனைகளும்தான் படத்தின் கதை.

முதல் நாள் காலையில் தொடங்கும் கதை, மறுநாள் காலையில் முடிந்துவிடுகிறது. ஆனால், அந்த ஒருநாள் முழுவதும் நம்மைப் பதைபதைப்புடன் வைத்திருக்கும் விதத்தில் வெற்றி பெற்றிருக்கிறார் இயக்குநர் கோபி நயினார். ‘கத்தி’ படத்தின் கதை இவருடையது என்ற பிரச்னை கிளம்பியது நினைவிருக்கலாம். குழந்தை குழிக்குள் விழுந்தது முதல் படம் முடியும்வரை ஸீட்டின் நுனியிலேயே நம்மை அமரவைத்து விடுகிறார்.

இந்தப் படத்தில் நடித்ததற்காக நயன்தாராவிற்கு மிகப்பெரிய சல்யூட். அரசு அதிகாரியாக இருந்துகொண்டு, அரசின் அவலட்சணங்களைப் பேசியிருக்கும் துணிச்சலுக்குப் பாராட்டுகள். அரசும், அரசு அதிகாரிகளும் எப்படி கட்டமைக்கப்பட்டிருக்கின்றனர் என்பதைத் தெளிவாக விளக்குகிறார். பெண்ணாக இருந்துகொண்டு தான் அனுபவிக்கும் கஷ்டத்தை அவர் சொல்லும்போது, அவருடைய நிஜ வாழ்க்கை நினைவுக்கு வருகிறது.

படத்தின் விறுவிறுப்புக்கு ஜிப்ரானின் இசை மிகப்பெரிய பலம். திரைக்கதை, இசை, ஒளிப்பதிவு மூன்றும் சேர்ந்து, நம்மையும் குழிக்குள் விழுந்த குழந்தையின் மனநிலையில் வைத்திருக்கிறார்கள். கடைசியில் குழந்தையை வெளியில் எடுக்கும்போது நயன்தாரா கதறி அழுவாரே... அழுவது அவர் மட்டுமல்ல, படம் பார்ப்பவர்களும் என்பதை உணர்ந்துகொள்ள முடிகிறது.

இதுவரை வில்லனாகப் பார்த்துவந்த ராமச்சந்திரன், இந்தப் படத்தில் பாசமான அப்பாவாக பிரமாதமாக நடித்திருக்கிறார். வில்லனாக மட்டுமே நடிக்காமல், இப்படியும் பல படங்களில் நடிங்க ப்ரதர். அவர் மனைவியாக நடித்திருக்கும் சுனு லட்சுமியின் நடிப்பும் அபாரம். ‘காக்கா முட்டை’ சிறுவர்களான விக்னேஷ், ரமேஷ் இருவரில், இளையவரான ரமேஷுக்கு நடிக்க அதிக வாய்ப்பு கிடைத்திருக்கிறது. குழிக்குள் விழுந்த குழந்தையாக நடித்திருக்கும் சிறுமியும் பிரமாதப்படுத்தியிருக்கிறார்.

ரஜினி, கமல்ஹாசன், விஜய், விஷால் என திரைத்துறையில் இருந்து அரசியலுக்கு வரத்துடிப்பவர்களுக்கு படத்தில் நயன்தாரா ஒரு விஷயம் வைத்திருக்கிறார். அது என்னவென்று படத்தைப் பார்த்து தெரிந்து கொள்ளுங்கள். ‘தரமான படம் அறம்’.

Tamil Cinema Gopi Nainar
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment