நெல்சன் வெங்கடேஷ் இயக்கும் புதிய படத்தில், ஹீரோவாக நடிக்கிறார் எஸ்.ஜே.சூர்யா.
‘ஒருநாள் கூத்து’ படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் நெல்சன் வெங்கடேசன். தினேஷ், மியா ஜார்ஜ், நிவேதா பெத்துராஜ், ரித்விகா, ரமேஷ் திலக், பால சரவணன் ஆகியோர் இந்தப் படத்தில் நடித்திருந்தனர். கடந்த ஆண்டு ஜூன் மாதம் வெளியான இந்தப் படத்துக்கு, ஜஸ்டின் பிரபாகரன் இசையமைத்திருந்தார். இந்தப் படத்தில் இடம்பெற்ற ‘அடியே அழகே…’ பாடல் சூப்பர் ஹிட்டானது.
இந்தப் படத்தைத் தொடர்ந்து, அடுத்த படத்துக்கான வேலைகளில் இறங்கியுள்ளார் நெல்சன் வெங்கடேசன். இந்தப் படத்தில், எஸ்.ஜே.சூர்யா ஹீரோவாக நடிக்கிறார். மற்ற நடிகர், நடிகைகள் இன்னும் முடிவு செய்யப்படவில்லை.
எஸ்.ஆர்.பிரபு இந்தப் படத்தைத் தயாரிக்கிறார். ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனத்தின் மூலம் பல படங்களைத் தயாரித்து வரும் எஸ்.ஆர்.பிரபு, தன்னுடைய இன்னொரு நிறுவனமான பொட்டென்ஷியல் ஸ்டுடியோஸ் மூலம் இந்தப் படத்தைத் தயாரிக்கிறார்.
செல்வராகவன் இயக்கத்தில் எஸ்.ஜே.சூர்யா நடித்துள்ள ‘நெஞ்சம் மறப்பதில்லை’ படம் ரிலீஸுக்குத் தயாராக இருக்கிறது. தற்போது அஸ்வின் சரவணன் இயக்கும் ‘இறவாக்காலம்’ படத்தில் நடித்து வருகிறார் எஸ்.ஜே.சூர்யா.