சந்தீப் கிஷணும், விக்ராந்தும் நெருங்கிய நண்பர்கள். ஆனால், சந்தீப்புக்குத் தெரியாமல் அவர் தங்கையும், விக்ராந்தும் காதலிக்கின்றனர். வில்லன் கும்பல் விக்ராந்தைப் போட்டுத்தள்ள முயற்சிப்பதைத் தெரிந்துகொள்ளும் சந்தீப், எதற்காக அவரைக் கொல்லப் போகிறார்கள்? கொல்லப்போவது யார்? என்று தேடி அலைகிறார். விடை கிடைக்கும்போது அவருக்கு மட்டுமல்ல, பார்க்கும் நமக்கும் அதிர்ச்சி காத்திருக்கிறது. அது என்ன என்பதுதான் படம்.
நட்பு, தங்கை செண்டிமெண்ட், மருத்துவச் சீர்கேடு என எல்லாவற்றையும் கலந்துகட்டி ஒரே படத்தில் சொல்ல முயற்சித்திருக்கிறார் சுசீந்திரன். ஆனால், எதையுமே உருப்படியாகச் சொல்லவில்லை என்பதுதான் உண்மை.
திரைக்கதைக்கு திருப்பங்கள் முக்கியம்தான். ஆனால், திருப்பங்களே திரைக்கதையாக அமைந்துவிட முடியாது என்பதை சுசீந்திரன் உணர்ந்துகொள்ள வேண்டும். இங்கு சுற்றி, அங்கு சுற்றி படம் பார்க்கும் நம்மையும் சுற்ற விடுகிறார்.
தன் பெண்ணுக்கு இலவச எம்.டி. ஸீட் கிடைப்பதற்காக கூலிப்படையை நாடும் தந்தையால், வேறு கல்லூரியில் காசு கொடுத்து எம்.டி. ஸீட் வாங்க முடியாதா? இத்தனைக்கும் அமைச்சரின் பினாமியாக இருக்கும் அந்த ஆடிட்டரிடம் 100 கோடி ரூபாய் கறுப்புப் பணம் இருப்பதாகச் சொல்கிறார்கள். அப்படியானால் மகளை ஃபாரீனுக்கே அனுப்பி எம்.டி. படிக்க வைத்திருக்கலாமே?
இப்படி படத்தின் அடிப்படையையே கோட்டை விட்டுவிட்டு, என்னென்னமோ சொல்லி சமாளித்திருக்கிறார். ஒரு இடம்தான் இப்படி என்றால் பரவாயில்லை, படம் முழுக்கவே இப்படித்தான் இருக்கிறது. காட்சிகள் எல்லாமே இதற்கு முன்னர் சுசீந்திரன் இயக்கிய படங்களில் இருந்தே எடுக்கப்பட்டுள்ளன.
‘மாநகரம்’ என்ற வெற்றிப் படத்தில் நடித்த சந்தீப் கிஷணுக்கு, இது மிகப்பெரிய சறுக்கல். இத்தனைக்கும் சந்தீப்பின் தெலுங்கு மார்க்கெட்டை வைத்து அங்கும் இந்தப் படம் ரிலீஸாகியிருக்கிறது. தமிழ் தெரியாத ஹீரோயின் மெஹ்ரீன் உதட்டசைவும், டப்பிங்கும் பொருந்தவில்லை. அத்துடன், இந்தப் படத்தில் அவர் ஏன் இருக்கிறார் என்றும் புரியவில்லை. சந்தீப் – மெஹ்ரீன் காதல் காட்சிகளில் சிரிப்புதான் வருகிறது.
‘பாண்டிய நாடு’ படத்தில் கொஞ்ச நேரமே வந்தாலும் கிடைத்த முக்கியத்துவம் கூட, முழுப்படத்தில் வந்தும் விக்ராந்துக்கு கிடைக்கவில்லை. சூரியும், அப்புக்குட்டியும் படத்தில் இருக்கிறார்கள். நல்ல நடிகை என்று பெயரெடுத்த துளசி கூட ஓவர் ஆக்டிங் செய்திருக்கிறார். விக்ராந்த் மீது அவருக்கு அப்படியென்ன கோபம் என்றே தெரியவில்லை.
சுசீந்திரன் – டி.இமான் கூட்டணியில் எத்தனையோ படங்கள் நன்றாக வந்திருந்தாலும், இந்தப் படத்தில் அது மிஸ்ஸிங். பின்னணி இசையில் கோட்டைவிட்ட டி.இமான், ‘ரயில் ஆராரோ’ பாடலில் மட்டும் கொஞ்சம் கரிசனம் காட்டுகிறார். ‘நெஞ்சில் துணிவிருந்தால்’ தியேட்டருக்குச் சென்று இந்தப் படத்தைப் பார்க்கலாம்.