A.R.Rahman's Discography: ’பிகில்’ படத்திலிருந்து நேற்று வெளியான ‘சிங்கப் பெண்ணே’ பாடலை ஊரே கொண்டாடிக் கொண்டிருக்கிறது. நடிகர் விஜய், இயக்குநர் அட்லீ, இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மானின் கூட்டணி ஏற்கனவே ‘மெர்சல்’ படத்தில் வெற்றிக் கொடி நாட்டியிருப்பதால் ‘பிகில்’ ஆல்பத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்திருப்பது, ஆச்சர்யப்படுவதற்கு இல்லை.
’சிங்கப் பெண்ணே’ பாடல் உருவாக்கத்தின் போது பாடலாசிரியர் விவேக், ”தீ, புயல்ன்னா ஆண்கள், பூ, தென்றல்ன்னா பெண்கள்ங்கற கண்ணோட்டத்த மாத்தி, அவங்களுக்குள்ள வலிமை இருக்குன்னு சொல்ற மாதிரி இருக்கணும்” என்பார். எத்தனை உண்மை? இங்கே பூ, தென்றல் போல ஆண்களும் இருக்கிறார்கள், புயல் போன்ற பெண்களும் இருக்கிறார்கள். இந்தப் பாடலை ஏ.ஆர்.ரஹ்மானும் ஷாஷா திருப்பதியும் இணைந்துப் பாடியிருப்பார்கள். குறிப்பாக அதிக எனர்ஜியுடன் அதிக உற்சாகத்துடன் பாடியிருக்கிறார் ரஹ்மான்.
பொதுவாக ரஹ்மானின் ஒவ்வொரு ஆல்பமும் வெளியாகும் போதும், பாடல் பிடிக்கவில்லை என்ற விமர்சனம் தான் அதிகம் எழும். காரணம் நவீன இசைக்கருவிகள் அவரின் பாடலை ஆக்கிரமித்திருக்கும். இது சிலருக்கு பிடிப்பதில்லை. ‘ரஹ்மான்னாலே ஸ்லோ பாய்சன், அதனால கேக்க கேக்க தான் அதோட இனிமையை உணர முடியும்’ என மற்றொருபுறம் காலரை தூக்கி விட்டுக் கொள்கிறார்கள் அவரது தீவிர விசிறிகள்!
இது ’பிகில்’ படத்தின் ‘சிங்கப்பெண்ணே’ பாடலைப் பற்றிய கட்டுரை அல்ல, அதனைப் பாடிய ஏ.ஆர்.ரஹ்மானின் குரலில் உள்ள மேஜிக்கைப் பற்றிய தொகுப்பு.
ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கும் பெரும்பாலான படங்களில், அந்த சூழலைப் பொறுத்து, அவர் ஒரு பாடலைப் பாடி விடுவார். அவர் குரலில் பதிவு செய்யப்பட்ட பாடல்கள் ரசிகர்களிடம் இன்னும் சிறப்பு கவனம் பெறும். அப்படி நிறைய பாடல்களை தமிழ், தெலுங்கு, இந்தி, ஆங்கிலம் ஆகிய மொழிகளில் பாடியிருக்கிறார். அவற்றில் மிஸ் பண்ணக் கூடாத 10 தமிழ் பாடல்களைப் பற்றிப் பார்ப்போம். இத்தனை குறைந்த எண்களுக்குள் அவரின் பாடல்களை அடக்குவது கடினம் தான், இருப்பினும் முயற்சி செய்கிறோம்.
காதலன் (1994) - ஊர்வசி ஊர்வசி
இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் நடிகர் பிரபு தேவா நடிப்பில் 1994-ம் ஆண்டு வெளியான காதலன் படத்தில் இப்பாடல் இடம் பெற்றிருக்கும். 90’ஸ் கிட்ஸ் தொடங்கி, 90’ஸ் யங்ஸ்டர்ஸ் வரைக்கும் அனைவரையும் குதூகலிக்க செய்த பாடல் இது. ரஹ்மானின் குரலில் ஒரு உற்சாகமும், துள்ளளும் இருக்கும். கல்லூரி இளைஞர்களின் மனநிலையை இந்தப் பாடலில் அப்படியே காணலாம். காட்சியாக எடுத்துக் கொண்டால், பிரபுதேவாவின் நடனமும், வடிவேலுவின் எக்ஸ்பிரஷனும் அதிக வலு சேர்த்திருக்கும். இன்றைய ’பஸ்டே’, ’ரூட்டு தல’ கலாச்சாரத்தை அப்போதே தொடங்கி வைத்தப்படம். 25 வருடம் கழித்தும் இன்றும் ஃபிரெஷ்ஷாக இருப்பதே இதன் சிறப்பு!
காதல் தேசம் (1996) - முஸ்தபா முஸ்தபா
இயக்குநர் கதிர் இயக்கியிருந்த ’காதல் தேசம்’ படத்தில் இடம் பெற்றிருந்த இப்பாடல் இன்றும், கல்லூரியின் கடைசி நாள் விழாக்களில் அதிக உணர்வுகளை சுமந்துக் கொண்டு ஒலிக்கிறது. அன்றைய காலகட்டத்தில் இப்பாடலை டிவி-யில் பார்க்கும் போது, குறிப்பாக கைகளை இடது-வலதாக அசைக்கும் போது கோரஸ் குரலோடு தாமும் முணு முணுத்துக் கொண்டே கல்லூரி நட்பை எண்ணி கண்ணீர் சிந்திய இளைஞர்கள் அதிகம். கல்லூரி நட்பின் சாரம்சத்தை ரஹ்மானின் குரல் அத்தனை அழகாய் பிரதிபலித்திருக்கும்.
உயிரே (1998) - சந்தோஷ கண்ணீரே
இயக்குநர் மணிரத்னம் இந்தியில் இயக்கிய ‘தில் சே’, படம் தமிழில் ‘உயிரே’ என்ற பெயரில் வெளியானது. 90-களின் இறுதியில் இருந்த இளைஞர்களின் காதல் தோல்வியில் அதிக பங்கெடுத்த பாடல் இது! இந்தப் பாடலின் பல்லவியான ‘கண்ணீரே கண்ணீரே’ என்பதை ரஹ்மான் பாடும் போது, அந்த தவிப்பு, ஏக்கம், காதல், பிரிவின் வலி என அத்தனையும் கச்சிதமாக வெளிப்படும். இப்போதும் பலரின் வலிகளுக்கு ’வாலினி’யாய் செயல்படுகிறது.
கன்னத்தில் முத்தமிட்டால் (2002) - வெள்ளைப்பூக்கள்
ஒரு நீண்ட கோபம், வெறுப்பு, எரிச்சல் போன்ற சூழலில் இருந்து உங்களை மீட்க அதிக மெனக்கெட தேவையில்லை. அமைதியான சூழலில், மெல்லிய ஒலியில் ஹெட்ஃபோன்களை பயன்படுத்தி, கண்களை மூடிக் கொண்டு இந்தப் பாடலைக் கேளுங்கள், மேற்கூறிய உணர்வு சார்ந்த பிரச்னைகளுக்கு இதுவே ‘இன்ஸ்டண்ட்’ நிவாரணி!
சில்லுன்னு ஒரு காதல் (2006) - நியூயார்க் நகரம்
மனைவி அல்லது காதலி மேல் அதீத அன்பு வைத்திருக்கும் நீங்கள், சூழ்நிலையால் அவர்களை தற்காலிகமாக பிரிந்திருக்கிறீர்களா? அப்படியெனில் உங்கள் உணர்வுகள் பெரும்பாலும் இந்தப் பாடலை ஒத்திருக்கும். எளிமையாக சொல்ல வேண்டுமெனில், சில்லுன்னு ஒரு காதல் திரைப்படத்தின் முதல்பாதி காதலர்களுக்கும், இரண்டாம் பாதி திருமணமானவர்களுக்கும் பிடிக்கும். ஆனால் இந்த இரண்டு தரப்புக்குமே ‘நியூயார்க் நகரம்’ பாடல் பிடிக்கும்! அதுதான் இந்தப் பாடலின் சிறப்பு!
அழகிய தமிழ் மகன் (2007) - எல்லாப் புகழும்
சோர்ந்து போயிருக்கும் நம்மை ஊக்கப்படுத்தி, புத்துணர்ச்சி பெற செய்வதில் இந்தப் பாடலின் பங்கு அதிகம். வாழ்க்கையில் எத்தனை தடைகள் வந்தாலும், சோதனைகள் வந்தாலும், எங்கும் தங்கிவிடாமல், நதி போல ஓடிக் கொண்டிருக்க வேண்டும் என்பதை ரஹ்மானின் குரலில் கேட்கும் போது, நமக்குள் புது ரத்தம் பாய்ச்சிய ஃபீலிங் கியாரண்டி!
விண்ணைத் தாண்டி வருவாயா (2010) - மன்னிப்பாயா
90’ஸ் கிட்ஸ் வளர்ந்து கல்லூரியில் படிக்கும் போது வெளியான இப்பாடல், அன்றைய காதலர்களின் வலிகளுக்கு மருந்தானது. காதலின் வலியை மையமாக வைத்து இன்று வரை பல பாடல் வந்துக் கொண்டிருந்தாலும், ’மன்னிப்பாயா’ பாடலுக்குக் கிடைத்திருக்கும் வரவேற்பும் வெற்றியும் வேறு லெவல். ரஹ்மானும், ஷ்ரேயா கோஷலும் இணைந்துப் பாடியிருக்கும் இப்பாடல் இன்றும் பலரின் ஃபேவரிட்.
ஓ காதல் கண்மணி (2015) - மெண்டல் மனதில்
மணி ரத்னம் - ஏ.ஆர்.ரஹ்மான் கூட்டணியில் வெளிவந்த மீண்டுமொரு வெற்றிப்படம். தமிழ் சினிமாவே பேய்க்கதைக்குள் மூழ்கி இருந்த போது, ரொமாண்டிக் படமாக வெளிவந்து ரசிகர்களின் கவனம் ஈர்த்தது. பரபரப்பான நகர சாலைகளில், பைக்கில் பறந்து திறியும் காதலர்களின் உற்சாகத்தையும், குதூகலத்தையும் தனது குரலில் பிரதிபலித்திருப்பார் ரஹ்மான்.
மெர்சல் (2017) - நீ தானே
விஜய் - அட்லீ - ரஹ்மான் கூட்டணி முதன்முறையாக இணைந்தப் படம். ’நியூயார்க் நகரம்’ பிரிவு, ‘மன்னிப்பாயா’ வலி என்றால், ’நீ தானே’ பாடல் தேனில் ஊற வைத்த ஜாமுனைப் போல் மிருதுவானதும், இனிமையானதும்! மெல்லிய இசையில் அழகிய வார்த்தைகளால் கோர்த்து, ஆளுயர மாலை தொடுத்திருப்பார் ரஹ்மான். இதுவும் ரஹ்மான் - ஷ்ரேயா கோஷல் வெற்றி ‘காம்போ’ தான்!
செக்க சிவந்த வானம் (2018) - மழைக்குருவி
ரஹ்மான் ‘சோலோ’வாகப் பாடிய இந்தப் பாடல் ஒரு சிட்டுக் குருவியின் கதையைப் பற்றிக் கூறுவது போல இருக்கும். பாடலின் முதல் பாதியில் காதலின் இன்பத்தையும், பின்னர் அதன் துன்பத்தையும், உற்சாகம், சோகம் என வெரைட்டியான மாடுலேஷனில் தனித்துக் காட்டியிருப்பார் ரஹ்மான்!
மேற்கூறிய பாடல்களைத் தவிர ஏ.ஆர்.ரஹ்மான் பாடிய, ‘கோலாம்பஸ் கோலாம்பஸ்’, ‘ஹம்மா ஹம்மா’, ’நோ பிராப்ளம்’, ‘என்றென்றும் புன்னகை’, ‘அதிரடிக்காரன்’, ‘இரும்பிலே ஓர் இருதயம்’, ‘ஏலே கீச்சான்’, ‘நெஞ்சே எழு’, ‘ஒரு விரல் புரட்சி’, ‘சிங்கப்பெண்ணே’ என இன்னும் பல பாடல்களும் மிஸ் பண்ணக் கூடாத பாடல்கள் தான். 10 பாடல்கள் என்ற வரையறை இருப்பதால், அவற்றை தனித்துக் கூற இயலவில்லை. ’ரெண்டு கண்ணில் எந்த கண் நல்ல கண்’ என்பது போல, ரஹ்மானின் பெஸ்ட் பாடல்களை வரிசைப்படுத்துவதில் உள்ள நடைமுறை சிக்கல்களை புரிந்துக் கொள்வீர்களாக!
குறிப்பு: மேலே குறிப்பிடப்பட்டிருக்கும் பாடல்கள், அவை வெளியான வருடத்தின் அடிப்படையில் வரிசைப்படுத்தப்பட்டுள்ளது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.