தன்னை அடித்த வில்லனை, நாயகன் திருப்பி அடிக்கக் காத்திருக்கும் மிகச் சாதாரண கதைதான் ‘நிமிர்’.
உதயநிதி ஸ்டாலின் அப்பாவான இயக்குநர் மகேந்திரன், மிகச்சிறந்த புகைப்படக் கலைஞர். அதனால், உதயநிதியும் சின்ன வயதிலேயே கேமராவைத் தூக்கிவிடுகிறார். ஆனால், அவருக்கு ஒழுங்காக புகைப்படம் எடுக்கத் தெரியாது. இருந்தாலும், எப்படியோ சமாளித்து காலத்தை ஓட்டி வருகிறார்.
உதயநிதியைக் காதலிக்கும் பார்வதி நாயர், அவரை விட்டுவிட்டு பணக்கார மாப்பிள்ளையைக் கரம்பிடிக்கிறார். இதற்கிடையில், அவரை அடித்து விடுகிறார் சமுத்திரக்கனி. அவரைத் திருப்பி அடிக்கும்வரை செருப்பே அணியமாட்டேன் என சபதம் எடுக்கிறார் உதயநிதி. அப்புறம் நமீத ப்ரமோத்துடன் காதல் வேறு.
சமுத்திரக்கனியை உதயநிதி அடித்தாரா? நமீத ப்ரமோத்துடனான காதல் என்னவானது? என்பதுதான் கதை.
மலையாளத்தில் வெளியான ‘மகேஷிண்டே பிரதிகாரம்’ படத்தின் தமிழ் ரீமேக்தான் இந்தப் படம். ஃபஹத் ஃபாசில் நடித்த கேரக்டரில் உதயநிதி ஸ்டாலின் நடித்துள்ளார். மலையாளப் படத்தைப் பார்த்தவர்களுக்கு இந்தப் படம் பிடிக்காதுதான். ஆனால், மலையாளப் படத்தைப் பார்க்காதவர்களுக்கு இந்தப் படம் பிடிக்க வாய்ப்புண்டு.
தென்காசியில் கதை நடப்பதாக இருந்தாலும், அச்சு அசல் மலையாளப் படம் போலவே இருப்பது இந்தப் படத்தின் மிகப்பெரிய குறை. உதயநிதி ஸ்டாலின், மகேந்திரன் என ஒருசில கேரக்டர்கள் தவிர, பெரும்பாலான கேரக்டர்கள் மலையாளிகளாகவே இருக்கிறார்கள். அதுவும் படம் தொடங்கும்போது வரும் பாட்டு, ‘நீங்கள் ஒரு மலையாளப் படத்தைப் பார்க்கப் போகிறீர்கள்’ என தலையில் அடித்து உள்ளே தள்ளுகிறது. சொல்லப்போனால், ஒரு மலையாளப் படத்தை ஏன் மலையாளத்திலேயே ரீமேக் செய்திருக்கிறார் ப்ரியதர்ஷன் என்ற கேள்விதான் எழுகிறது.
உதயநிதியைப் பொறுத்தவரையில், அவர் சினிமா வாழ்க்கையில் இந்தப் படம் மிக முக்கியமானது. எந்தவிதமான பந்தா, குத்துப்பாட்டு, சண்டைகள் இல்லாமல் இயல்பாக இருக்கிறது. மசால் வடை திங்க மட்டுமே பயன்பட்டிருக்கிறார் பார்வதி நாயர். சின்னச் சின்ன பாவனைகளுடன் ரசிக்க வைக்கிறார் நமீத ப்ரமோத்.
இயக்குநர் மகேந்திரனைக் கூட உப்புக்கு சப்பாணி போல் நடிக்க வைத்திருக்கிறார்கள். யாருக்கும் எந்த முக்கியத்துவமும் இல்லாமல், ஒரே மாதிரி ஸ்லோவாகப் போகிறது கதை. படத்தில் ஆறுதலான மிகப்பெரிய விஷயம், ஏகாம்பரத்தின் ஒளிப்பதிவு. தென்காசியின் இயற்கை அழகை அப்படியே அள்ளிவந்து திரையில் தெளித்திருக்கிறார்.
இதுபோன்ற கதைகள் மலையாள ரசிகர்களுக்கு ஓகே. ஆனால், தமிழ் ரசிகர்களுக்கு?