சென்னை: பிரேமம் படத்திற்கு பின்னர் நிவின் பாலி நடித்து வெளிவந்த "ஆக்ஷன் ஹீரோ பிஜு, ஜேக்கப்பிண்டே ஸ்வர்க ராஜ்யம்" உள்ளிட்ட படங்களும் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்றது. மேலும், நிவின் பாலி இரட்டை வேடத்தில் நடித்த 'சகாவு' படமும் திரையரங்குகளில் தற்போது வெற்றி நடை போட்டு ஓடிக்கொண்டிருக்கிறது.
இந்நிலையில், தற்போது நிவின் பாலியின் தமிழ் படமான 'ரிச்சி'யின் போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது. நிவின் பாலி தனது ட்விட்டர் கணக்கில் வெளியிட்டுள்ள அந்த போஸ்டருக்கு லைக்குகள் குவிந்த வண்ணம் உள்ளன. நிவின் பாலி அந்த ட்வீட்டில் தெரிவித்துள்ளதாவது, படத்தின் நிறைவிற்காக காத்திருக்கிறோம். எனது நேரடியான முதல் தமிழ் திரைப்படம் ரிச்சி-யின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் என்று குறிப்பிட்டு, போஸ்டரையும் வெளியிட்டுள்ளார். படம் குறித்த அடுத்த கட்ட தகவல்கள் விரைவில் வெளியிடப்படும் என்று தனது ட்வீட்டில் குறிப்பிட்டுள்ளார்.
ரிச்சி-யின் போஸ்டர் வெளியிடப்பட்டுள்ள நிலையில், படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே தற்போது எழ தொடங்கியுள்ளது.
ரக்ஷித் ஷெட்டி இயக்கத்தில், கடந்த 2014-ம் ஆண்டு வெளிவந்து ஹிட் அடித்த 'உள்ளிடவரு கண்டந்தே' என்ற கன்னட படத்தின் ரீமேக் தான் ரிச்சி. அறிமுக இயக்குநர் கௌதம் ராமச்சந்திரன் இயக்கத்தில் உருவாகும் இப்படத்தில் நிவின் பாலியுடன் இணைந்து, 'சதுரங்க வேட்டை' நட்டி, அசோக் செல்வன், ஷரதா ஸ்ரீநாத், லக்ஷ்மி பிரியா, பிரகாஷ் ராஜ் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் முடியும் தருவாயில் உள்ளதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக ரிச்சி-யின் டீசர் விரைவில் வெளிவரும் எதிர்பார்க்கப்படுகிறது.
'உள்ளிடவரு கண்டந்தே' என்ற கன்னட படத்தின் ரிமேக் என்பதால், கதைக்களம் அதுபோல தான் இருக்கும். உள்ளிடவரு கண்டந்தே படமானது குற்ற வழக்கை அடிப்படையாக கொண்ட படமாகும். 'நேரம்' படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்குள் புகுந்த நிவின் பாலி, அப்படத்தில் சாதுவான மற்றும் இயல்பான கதாப்பாத்திரத்தில் நடித்திருப்பார். ஆனால், ரிச்சி திரைப்படத்தில் முற்றிலும் மாறுபட்ட கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார் நிவின்.