Advertisment

ரிச்சி - விமர்சனம்

ஒன்றே முக்கால் நேரம்தான் படம். ஆனால், ஒருநாள் முழுக்க பார்த்துக் கொண்டிருப்பது போன்ற உணர்வு ஏற்படுகிறது.

author-image
cauveri manickam
புதுப்பிக்கப்பட்டது
New Update
Richie_poster

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள மணப்பாடு கிராமத்தில், கிறிஸ்துமஸ் தினத்தன்று இரண்டு கொலைகள் நடக்கின்றன. அவை எப்படி நடந்தன என்பதைக் கண்டுபிடித்து தொடர் எழுதுவதற்காக, கொல்லப்பட்ட நபர்கள் சம்பந்தப்பட்டவர்களை விசாரிக்கிறார் ரிப்போர்ட்டரான ஷ்ரத்தா ஸ்ரீநாத். அவர்கள் ஒவ்வொருவரும் கதையின் ஒரு பகுதியைச் சொல்கிறார்கள். அது ஷ்ரத்தா ஸ்ரீநாத்துக்கு மட்டும் புரிந்திருக்கும் போல. அவர் தொடரை ஆசிரியரிடம் தர, அவரோ விரைவில் வெளியிடலாம் என்கிறார். ஆனால், படம் பார்த்த நாம் என்ன கதையெனத் தெரியாமல் பேந்தப் பேந்த விழித்துக் கொண்டு, படம் முடிந்தபின்னும் இருக்கையிலேயே அமர்ந்திருக்கிறோம்.

Advertisment

‘நேரம்’ படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகமான நிவின் பாலிக்கு, இது நேரடி முதல் தமிழ்ப்படம். இதற்காகப் பல வருடங்கள் கதை கேட்டு, இந்தப் படத்தைத் தேர்ந்தெடுத்ததாகச் சொன்னார். அய்யோ பாவம்... இப்படி ஒரு படத்தில் நடித்ததற்குப் பதில் ‘பிரேமம்’ படத்தை ரீமேக் செய்து நடித்திருந்தால் கூட ஒரு வருடத்துக்கு ஓடியிருக்கும். நிவின் பாலி மீதிருக்கும் க்ரேஸை, இயக்குநர் கெளதம் ராமச்சந்திரன் கொஞ்சம் கூட பயன்படுத்திக் கொள்ளவில்லை.

இத்தனைக்கும் கன்னடத்தில் சூப்பர் ஹிட்டான ‘உளிடவரு கண்டந்தே’ படத்தின் ரீமேக்தான் இது. தமிழுக்காக மாற்றம் செய்கிறோம் என்று கதை மற்றும் கதாபாத்திரங்களை மட்டும் எடுத்துக்கொண்டு சொந்தமாகத் திரைக்கதை அமைத்திருக்கிறார்கள். அதில்தான் கோட்டையும் விட்டிருக்கிறார்கள். ஃபிளாஷ்பேக் கதை சொல்லும் ஒவ்வொருவருமே, நிவின் பாலிக்கு ஆளுக்கொரு ஓப்பனிங் கொடுப்பது எரிச்சலாக இருக்கிறது.

துப்பாக்கி பெல்ட்டும், கூலிங் கிளாஸுமாக நிவின் பாலி கெட்டப் அசத்தல். ஆனால், அந்தக் கேரக்டரை சரியாகச் செய்ய முடியாமல் தவிக்கிறார் நிவின் பாலி. அவரே டப்பிங் பேசியிருப்பதால், மலையாள வாசனையைத் தவிர்க்க முடியவில்லை. அதுவும், அவர் இழுத்து இழுத்துப் பேசுவதால், ஒரு டயலாக் முடிவதற்குள் ஓடிப்போய் ‘உச்சா’ போய்விட்டு வந்துவிடலாம். பல இடங்களில் டப்பிங் மிஸ்ஸாகிறது.

அவரைத் தவிர படத்தில் பெரிதாக யாருக்கும் வேலையில்லை. நட்டி மற்றும் ‘ஆடுகளம்’ முருகதாஸ் மட்டுமே கொஞ்சம் நடித்திருக்கிறார்கள். மற்றபடி பிரகாஷ் ராஜ், துளசி, லட்சுமிப்பிரியா சந்திரமெளலி என திறமையான நடிகர்களுக்கு கொஞ்சம் கூட வேலை இல்லாதது வருத்தமே! ஒன்றே முக்கால் நேரம்தான் படம். ஆனால், ஒருநாள் முழுக்க பார்த்துக் கொண்டிருப்பது போன்ற உணர்வு ஏற்படுகிறது.

ஒளிப்பதிவும், இசையும்தான் படத்தைப் பார்க்கும் பொறுமையைத் தருகின்றன. மற்றபடி இடையில் அடிக்கடி குட்டித் தூக்கம் போட்டு எழுந்தாலும் கவலையில்லை. ஏனென்றால், படத்தை முழுதாகப் பார்த்தவர்களுக்கு கூட படத்தின் கதை புரியாதபோது, நாம் குட்டித் தூக்கம் போட்டு எழுவதில் தவறே இல்லை. மொத்தத்தில், நிவின் பாலியின் தவறான கதைத்தேர்வு இந்தப் படம்.

Tamil Cinema Shraddha Srinath Nivin Pauly Natty Natarajan Subramaniam Gautham Ramachandran
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment