‘பத்மாவத்’ படத்தை தடைசெய்யக்கோரி ராஜஸ்தான், மத்தியப் பிரதேச அரசுகள் விடுத்த வேண்டுகோளை உச்சநீதிமன்றம் நிராகரித்துள்ளது.
சஞ்சய் லீலா பன்சாலி இயக்கத்தில் உருவாகியுள்ள ஹிந்திப் படம் ‘பத்மாவத்’. தீபிகா படுகோனே, ஷாகித் கபூர், ரன்வீர் சிங், அதிதி ராவ் ஆகியோர் இந்தப் படத்தில் நடித்துள்ளனர். வயாகாம் 18 மோஷன் பிக்சர்ஸுடன் சேர்ந்து இந்தப் படத்தைத் தயாரித்துள்ள சஞ்சய் லீலா பன்சாலி, பாடல்களுக்கும் இசை அமைத்துள்ளார்.
ராஜ்புத் வம்சத்து அரசியான ராணி பத்மினியின் கதை இது. ராணி பத்மினியாக தீபிகா படுகோனே நடித்துள்ளார். இந்தப் படம் அறிவிக்கப்பட்டதில் இருந்தே பல்வேறு பிரச்னைகள் எழுந்தன. தீபிகா படுகோனே தலைக்கு 10 கோடி ரூபாய் வரை விலை நிர்ணயம் செய்யப்பட்டது. எனவே, கடந்த மாதம் ரிலீஸாக வேண்டிய படம், தேதி குறிப்பிடப்படாமல் தள்ளி வைக்கப்பட்டது.
இந்தக் கலவரங்கள் சற்றே ஓய்ந்துள்ள நிலையில், படத்தைப் பார்த்த சென்சார் போர்டு அதிகாரிகள் ‘யு/ஏ’ சான்றிதழ் வழங்கியுள்ளனர். வருகிற 25ஆம் தேதி குடியரசு தின விடுமுறையை முன்னிட்டு இந்தப் படம் ரிலீஸாக இருக்கிறது. ஆனால், ஹரியானா, குஜராத், இமாச்சலப் பிரதேசம், மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான் மற்றும் உத்தர்காண்ட் ஆகிய 6 மாநிலங்களில் இந்தப் படம் ரிலீஸாகத் தடை விதிக்கப்பட்டது.
இந்தத் தடையை எதிர்த்து, உச்சநீதிமன்றத்தில் தயாரிப்பு நிறுவனம் மனுத்தாக்கல் செய்தது. இந்த வழக்கு ஜனவரி 18ஆம் தேதி விசாரணைக்கு வந்தது. விசாரணைக்குப் பின், மேற்கண்ட மாநிலங்களில் ‘பத்மாவத்’ படத்தை ரிலீஸ் செய்ய எந்த தடையும் இல்லை என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. அத்துடன், பிற மாநிலங்களில் தடை விதிக்கக்கூடாது எனவும் தெரிவித்துள்ளது. ஆனாலும், படத்தை ரிலீஸ் செய்யவிட மாட்டோம் என சில அமைப்புகள் கூறிவருகின்றன.
இந்நிலையில், சென்சார் போர்டு ‘பத்மாவத்’ படத்துக்கு அளித்த தணிக்கைச் சான்றிதழை திரும்பப் பெறவேண்டும் என உச்சநீதிமன்றத்தில் பொதுநல வழக்கு மனு செய்யப்பட்டது. தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, நீதிபதி ஏ.எம்.கான்வில்கர் மற்றும் டி.ஒய்.சந்திரசூர் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு இந்த மனு ஜனவரி 19ஆம் தேதி விசாரணைக்கு வந்தது. ‘இந்தப் படம் ரிலீஸானால் உயிர், சொத்துகளுக்கு பெரும் அச்சுறுத்தல் ஏற்படும். சட்டம், ஒழுங்கு பாதிக்கப்படும்’ என அந்த மனுவில் கூறப்பட்டிருந்தது.
ஆனால், அந்தக் காரணத்தை நீதிபதிகள் நிராகரித்துவிட்டனர். ‘சட்டம், ஒழுங்கைப் பாதுகாப்பது எங்கள் வேலையல்ல. அது மாநில அரசுகளின் கடமை’ என்று சொல்லி மனுவை நிராகரித்துவிட்டனர்.
இந்நிலையில், ‘பத்மாவத்’ படத்துக்கு தடை விதிக்கக்கோரி ராஜஸ்தான் மற்றும் மத்தியப் பிரதேச அரசுகள் உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தன. மனுவை விசாரித்த நீதிபதிகள், படத்துக்கு தடைவிதிக்க மறுத்துவிட்டனர். எனவே, இந்தியா முழுவதும் 25ஆம் தேதி படம் ரிலீஸாவது உறுதி செய்யப்பட்டுள்ளது.