“சிம்புவுக்கும் எனக்கும் எந்தப் பிரச்னையும் கிடையாது” - தனுஷ்

மற்றவர்கள் கூறுவதுபோல எனக்கும் அவருக்கும் எந்தப் பிரச்னையும் இல்லை. எங்களுக்கு நடுவில் இருப்பவர்களுக்குள்தான் பிரச்னை உள்ளது.

‘சிம்புவுக்கும் எனக்கும் எந்தப் பிரச்னையும் கிடையாது’ என தனுஷ் தெரிவித்துள்ளார்.

சந்தானம், வைபவி ஷாண்டில்யா நடித்துள்ள படம் ‘சக்க போடு போடு ராஜா’. விடிவி கணேஷ் தயாரிப்பில், சேதுராமன் இந்தப் படத்தை இயக்கியுள்ளார். சிம்பு முதன்முறையாக இந்தப் படத்திற்கு இசை அமைத்துள்ளார். விவேக், இந்தப் படத்தில் காமெடியனாக நடித்துள்ளார். அவருடன் பவர் ஸ்டார் மற்றும் ரோபோ சங்கர் இருவரும் நடித்துள்ளனர். அபிநந்தன் ராமானுஜம் ஒளிப்பதிவு செய்துள்ளார். இந்தப் படம் வருகிற 22ஆம் தேதி ரிலீஸாகிறது.

இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழா, சென்னை கலைவாணர் அரங்கத்தில் நேற்று நடைபெற்றது. அதில் கலந்துகொண்டு இசையை வெளியிட்டார் தனுஷ். அதன்பின் தனுஷ் பேசியதாவது… “சிம்பு அழைத்ததாலேயே இந்த விழாவுக்கு வந்தேன். நான் அழைத்தாலும் அவர் விழாக்களுக்கு வருவார்.

அவரும் நானும் நல்ல நட்புடன் தான் உள்ளோம். மற்றவர்கள் கூறுவதுபோல எனக்கும் அவருக்கும் எந்தப் பிரச்னையும் இல்லை. எங்களுக்கு நடுவில் இருப்பவர்களுக்குள்தான் பிரச்னை உள்ளது. அவர்கள்தான் எங்களுக்கு இடையில் பிரச்னைகளை ஏற்படுத்தி வருகின்றனர்.

நான் இங்கு வந்தபோது சிம்பு ரசிகர்கள் எனக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். அதேபோல் என் விழாக்களுக்கு அவர் வரும்போது, என் ரசிகர்களும் இதேபோன்ற வரவேற்பை அளிப்பார்கள். ரசிகர்கள் அப்படித்தான் இருக்க வேண்டும். சிம்பு, தனது ரசிகர்களுக்காக ஆண்டுக்கு இரண்டு படங்களாவது நடிக்க வேண்டும். அது உங்கள் கடமை. உங்களுடைய ரசிகர்கள் சார்பில் இதை கேட்டுக் கொள்கிறேன்” என்றார் தனுஷ்.

×Close
×Close