“தனுஷ் தங்கள் மகன்” என மதுரையைச் சேர்ந்த கதிரேசன் - மீனாட்சி தம்பதியினர் கூறிவருகின்றனர். கடந்த வருடம் நவம்பர் மாதம் தொடங்கிய இந்தப் பிரச்னை, ஒரு வருடத்தை எட்டப் போகிறது.
மதுரை மாவட்டம் மேலூர் மலம்பட்டியைச் சேர்ந்தவர்கள் கதிரேசன் - மீனாட்சி தம்பதி. “சின்ன வயதில் காணாமல் போன தங்கள் மகன் கலையரசன் தான் தனுஷ். தங்களுக்கு வயதாகிவிட்டதால் ஜீவனாம்சம் வழங்க வேண்டும்” என்று கடந்த வருடம் மேலூர் நீதிமன்றத்தில் இவர்கள் வழக்கு தொடுத்தனர். ஆரம்பத்தில் அவ்வளவாகக் கண்டு கொள்ளப்படாத இந்த வழக்கு, ‘நீதிமன்றத்தில் நேரில் தனுஷ் ஆஜராக வேண்டும்’ என மேலூர் நீதிமன்றம் உத்தரவிட்டது, பரபரப்பு அடைந்தது.
‘கதிரேசன் - மீனாட்சி யார் என்றே தனக்குத் தெரியாது என்பதால், இந்த வழக்கைத் தள்ளுபடி செய்ய வேண்டும்’ என மதுரை உயர்நீதிமன்றக் கிளையில் தனுஷ் சார்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. ‘தனுஷ் தங்கள் மகன் தான்’ என்பதற்கான ஆதாரங்களைச் சமர்ப்பித்த தம்பதியினர், தனுஷின் அங்க அடையாளங்களையும் குறிப்பிட்டனர்.
எனவே, தனுஷ் தரப்பில் சாதகமான ஆவணங்களை சமர்ப்பிக்குமாறு நீதிபதி உத்தரவிட்டார். ஆனால், கஸ்தூரி ராஜா சமர்ப்பித்த ஆவணங்களிலும் சந்தேகம் இருப்பதாக தம்பதியினர் சந்தேகம் கிளப்ப, அங்க அடையாளத்தைச் சரிபார்க்க உத்தரவிட்டார் நீதிபதி. எனவே, மதுரை உயர்நீதிமன்றக் கிளையில் ஆஜரானார் தனுஷ்.
மதுரை மருத்துவக் கல்லூரி டீன் தலைமையிலான மருத்துவக்குழு, தனுஷின் அங்க அடையாளங்களைச் சரிபார்த்து நீதிமன்றத்தில் அறிக்கை சமர்ப்பித்தது. ஆனால், அங்க அடையாளங்க அழிக்கப்பட்டுள்ளது என்றொரு குண்டையும் போட்டனர் கதிரேசன் - மீனாட்சி தம்பதியினர். அத்துடன் டி.என்.ஏ. பரிசோதனை செய்யவும் உத்தரவிட்டனர். இதனால், இந்த வழக்கு மிகுந்த பரபரப்பானது.
ஒருவழியாக இறுதிக்கட்டத்தை எட்டிய இந்த வழக்கின் தீர்ப்பு, கடந்த ஏப்ரல் மாதம் வழங்கப்பட்டது. தனுஷின் கோரிக்கையை ஏற்று, வழக்கைத் தள்ளுபடி செய்தது மதுரை உயர்நீதிமன்றக் கிளை.
ஆனாலும், மனம் தளராத கதிரேசன் - மீனாட்சி தம்பதி, தனுஷ் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட ஆவணங்கள் போலியானவை என இந்த மாத இறுதியில் மதுரை புதூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அங்கு நடவடிக்கை எடுக்கப்படாததை அடுத்து, மதுரை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் இன்று புகார் கொடுக்கப்பட்டுள்ளது.
அப்போது செய்தியாளர்களிடம் பேசிய கதிரேசன், “என் மனைவிக்கு உடல்நலம் சரியில்லாமல் இருக்கிறது. தனுஷிடம் இருந்து காசு, பணம் தேவையில்லை. அவர் நேரில் வந்து ஒருமுறை என் மனைவியைப் பார்த்தால் போதும், குணமாகிவிடும்” என்று கூறினார்.