பெங்களூரில் இன்று நடைபெற்ற மூன்றாம் கட்ட பேச்சுவார்த்தையும் தோல்வியில் முடிந்ததை அடுத்து, மார்ச் 1ஆம் தேதி முதல் புதுப்படங்கள் ரிலீஸாகாது என்பது உறுதியாகிவிட்டது.
மத்திய அரசின் ஜி.எஸ்.டி. மற்றும் உள்ளாட்சி கேளிக்கை வரியால் தியேட்டர் கட்டணங்கள் கணிசமாக உயர்ந்துள்ளன. அத்துடன், பொது இடங்களில் படப்பிடிப்பு நடத்தவும் கட்டணங்கள் உயர்த்தப்பட்டுள்ளன. அதுமட்டுமின்றி, க்யூப், யு.எஃப்.ஓ. கட்டணங்களும் அதிகரிக்கப்பட்டுள்ளன. மேலும், திருட்டு விசிடி மற்றும் இணையதளப் பதிவேற்றங்களாலும் சினிமா உலகம் பாதிக்கப்பட்டு வருகிறது.
எனவே, இவற்றை எதிர்த்து மார்ச் 1ஆம் தேதி முதல் வேலை நிறுத்தத்தில் ஈடுபட இருக்கிறது தெலுங்குத் திரையுலகம். அத்துடன், இதை தென்னிந்திய சினிமா வேலை நிறுத்தமாக நடைபெற தமிழ், மலையாளம் மற்றும் கன்னடத் திரையுலகிற்கும் அழைப்பு விடுத்தது. அந்த அழைப்பு ஏற்று, மார்ச் 1ஆம் தேதி முதல் தென்னிந்தியாவின் நான்கு மொழி சினிமாவைச் சேர்ந்தவர்களும் வேலை நிறுத்தத்தில் ஈடுபட இருக்கின்றனர். அதன்படி மார்ச் 1ஆம் தேதி முதல் எந்த புதுப்படமும் ரிலீஸ் ஆகாது என அறிவிக்கப்பட்டது.
எனவே, சினிமா சங்கங்களுடன் க்யூப் மற்றும் யு.எஃப்.ஓ. நிறுவனங்கள் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டன. முதல்கட்ட பேச்சுவார்த்தை ஹைதராபாத்திலும், இரண்டாம்கட்ட பேச்சுவார்த்தை சென்னையிலும் நடைபெற்றது. இரண்டிலுமே உடன்பாடு எட்டப்படாத நிலையில், இன்று (பிப்ரவரி 23) பெங்களூரில் மூன்றாம் கட்ட பேச்சுவார்த்தை நடைபெற்றது. இதிலும் சுமூக உடன்பாடு ஏற்படவில்லை. எனவே, வருகிற மார்ச் 1ஆம் தேதி முதல் புதுப்படங்கள் ரிலீஸாகாது என்பது உறுதியாகிவிட்டது.