‘நான் மணிரத்னம் படத்தில் நடிப்பதை யாராலும் தடுக்க முடியாது’ என சிம்பு ஆவேசமாகப் பேசியுள்ளார்.
சந்தானம், வைபவி ஷாண்டில்யா நடித்துள்ள படம் ‘சக்க போடு போடு ராஜா’. விடிவி கணேஷ் தயாரிப்பில், சேதுராமன் இந்தப் படத்தை இயக்கியுள்ளார். சிம்பு முதன்முறையாக இந்தப் படத்திற்கு இசை அமைத்துள்ளார். விவேக், இந்தப் படத்தில் காமெடியனாக நடித்துள்ளார். அவருடன் பவர் ஸ்டார் மற்றும் ரோபோ சங்கர் இருவரும் நடித்துள்ளனர். அபிநந்தன் ராமானுஜம் ஒளிப்பதிவு செய்துள்ளார். இந்தப் படம் வருகிற 22ஆம் தேதி ரிலீஸாகிறது.
இந்தப் படத்தில் இசை வெளியீட்டு விழா நேற்று நடைபெற்றது. இதில் பேசிய சிம்பு, “என் நண்பன் சந்தானம் கேட்டுக் கொண்டதற்காக மட்டுமே இந்தப் படத்துக்கு இசையமைத்தேன். அவர் வளர்ச்சிக்கு எப்போதுமே நான் பக்கபலமாக இருப்பேன்.
கடந்த சில நாட்களாக என்னைப் பற்றி சில பிரச்னைகள் போய்க் கொண்டிருக்கின்றன. அவை அனைத்தும் பொய் என்று நான் சொல்ல மாட்டேன். ‘அன்பானவன் அசராதவன் அடங்காதவன்’ படத்திற்கு எதிர்பார்த்த அளவிற்கு வரவேற்பு கிடைக்கவில்லை. அந்த விஷயத்தில் என்மீது தவறு இருந்தால், படம் எடுக்கும்போதோ அல்லது படத்தை முடித்த பின்னரோ அல்லது படம் ரிலீஸான உடனேயாவது கூறியிருக்க வேண்டும்.
அதை விட்டுவிட்டு, படம் வெளியாகி ஆறு மாதங்களுக்கு மேலான பின்னர் அதைப்பற்றி யாரோ பேசுவதை வைத்து இந்த மாதிரி பண்ணிவிட்டார்கள். என் மீதும் சில தவறுகள் இருக்கும் என்பதை நான் ஒத்துக் கொள்கிறேன். ஆனால், இதுபோன்ற விஷயங்களைப் பற்றிப் பேசுவதற்கு ஒரு முறை இருக்கிறது.
அவர்கள் செய்தது சரியல்ல. அதற்காக நான் நல்லவன் என்று சொல்லவில்லை. நடந்தது நடந்துவிட்டது. அதற்காக மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். அதிகபட்சமாக என்ன செய்து விடுவீர்கள்? என்னை நடிக்க விடாமல் தடுப்பீர்கள். ஆனால், என் ரசிகர்களுக்கு நான் ஏதாவது செய்து கொண்டுதான் இருப்பேன்.
மணிரத்னம் படத்தில் நான் இப்போதும் இருக்கிறேன் என்றுதான் கூறி வருகிறார். அவருக்கு என்மீது ஏன் இவ்வளவு நம்பிக்கை என்று தெரியவில்லை. அவரும் உங்களைப் போல எனக்கு ரசிகரா என்று தெரியவில்லை. ஜனவரி மாதம் 20ஆம் தேதி படப்பிடிப்பு தொடங்கும் என்று கூறியிருக்கிறார். தொடர்ந்து மூன்று மாதங்கள் படப்பிடிப்பு நடக்க இருக்கிறது.
மணிரத்னம் படத்தில் நான் நடிப்பதை யாராலும் தடுக்க முடியாது. உடம்பைக் குறைக்க முயற்சித்து வருகிறேன். ஆனாலும், கொஞ்சம் கடினமாக இருக்கிறது. விரைவில் நல்லது நடக்கும் என நம்புகிறேன்” என்று பேசினார்.