‘என்.டி.ஆர். தேசிய விருது’ : ட்விட்டரில் வாழ்த்திக்கொண்ட ரஜினி-கமல்

கமல்ஹாசன் ரஜினியை ‘சூப்பர் ஸ்டார்’ என்று குறிப்பிட்டதைப் போல, ரஜினி கமல்ஹாசனை ‘உலக நாயகன்’ என்று குறிப்பிடவில்லை என சிலர் கம்பு சுற்றத் தொடங்கிவிட்டனர்.

‘என்.டி.ஆர். தேசிய விருது’க்கு தேர்ந்தெடுக்கப்பட்டதற்காக ரஜினிகாந்துக்கு ட்விட்டரில் வாழ்த்து தெரிவித்தார் கமல்ஹாசன். அவருக்கு நன்றி சொன்ன ரஜினிகாந்த், கமல்ஹாசனுக்கும் தன்னுடைய வாழ்த்தை தெரிவித்தார்.

ஒவ்வொரு வருடமும் தெலுங்கில் வெளியாகும் சிறந்த படங்களைத் தேர்ந்தெடுத்து ‘நந்தி விருது’ வழங்கி வருகிறது ஆந்திர அரசு. அத்துடன், ‘என்.டி.ஆர். தேசிய விருது’, ‘பின்.என்.ரெட்டி மாநில விருது’, ‘நாகிரெட்டி & சப்ரணி மாநில விருது’, ‘ரகுபதி வெங்கையா மாநில விருது’ மற்றும் ‘நடுவர் சிறப்பு விருது’ ஆகிய சிறப்பு விருதுகளையும் வழங்கி வருகிறது.

2014, 2015 மற்றும் 2016ஆம் ஆண்டுக்கான விருதுப் பட்டியல் நேற்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதில், ‘என்.டி.ஆர். தேசிய விருது’ 2014ஆம் ஆண்டு கமல்ஹாசனுக்கும், 2016ஆம் ஆண்டு ரஜினிகாந்துக்கும் அறிவிக்கப்பட்டுள்ளது.

விருதுபெற்ற ரஜினிகாந்துக்கு ட்விட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ள கமல்ஹாசன், தனக்கு விருது அறிவித்த ஆந்திர அரசுக்கும் அதில் நன்றி தெரிவித்துள்ளார். “2016ஆம் ஆண்டுக்கான ‘என்.டி.ஆர். தேசிய விருது’க்கு தேர்ந்தெடுக்கப்பட்டதற்கு வாழ்த்துகள் ‘சூப்பர் ஸ்டார்’ ரஜினிகாந்த். மறுபடியும் என்னைக் கவுரப்படுத்திய ஆந்திர அரசுக்கு நன்றி. நான் சினிமாவில் நடிக்கத் தொடங்கிய காலத்தில் இருந்து எனக்குத் தொடர்ந்து ஆதரவு அளித்து வருவதற்கு நன்றிக்கடன்பட்டிருக்கிறேன்” என ட்விட்டரில் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

கமல்ஹாசனின் இந்த ட்வீட்டுக்கு, ரஜினிகாந்த் நன்றி தெரிவித்துள்ளார். கமல்ஹாசனின் ட்வீட்டுக்குப் பதில் அளித்துள்ள ரஜினிகாந்த், “நன்றி கமல். என்னை வாழ்த்தியது போலவே உங்களையும் வாழ்த்துகிறேன், வாழ்த்துகள்” என குறிப்பிட்டுள்ளார்.

இரண்டு மிகப்பெரிய நடிகர்களும் ட்விட்டரில் வெளிப்படையாக வாழ்த்திக் கொண்டதை, ஆரோக்கியமான விஷயமாகப் பார்க்கிறார்கள். அதேசமயம், கமல்ஹாசன் ரஜினியை ‘சூப்பர் ஸ்டார்’ என்று குறிப்பிட்டதைப் போல, ரஜினி கமல்ஹாசனை ‘உலக நாயகன்’ என்று குறிப்பிடவில்லை என சிலர் கம்பு சுற்றத் தொடங்கிவிட்டனர்.

×Close
×Close