ஜெயதேவன்
முதலிடம் பெற்றவர்களைக் கொண்டாட இந்தச் சமூகம் தயாராக இருக்கிறது. கடைசி இடம் பெறுபவர்களும் வேறு வகையில் கவனம் ஈர்க்கிறார்கள். ஆனால், இந்தச் சராசரிகளின் நிலைதான் பரிதாபம். யாருடைய கவனத்தையும் பெறாமல், எந்த அங்கீகாரமும் பெறாமல் சராசரிகளாகவே வாழ்ந்துவிட்டுப் போகிறார்கள். அப்படிப்பட்ட சராசரிகளில் ஒருவனின் வாழ்க்கையைச் சொல்கிறது ‘கூட்டத்தில் ஒருத்தன்’. கூட்டத்தில் ஒருவராக வாழ்ந்து முடிந்துவிடுவதும், தனித்து நிற்பதும் அவரவர் கையில்தான் உள்ளது என்னும் உண்மையைச் சொல்ல முயலும் இப்படம் அதை எப்படிச் சொல்லியிருக்கிறது என்று பார்ப்போம்.
அரவிந்த் (அசோக் செல்வன்) சிறு வயதிலிருந்தே எல்லாவற்றிலும் சராசரி. வீட்டிலும் பள்ளியிலும் பிற இடங்களிலும் அவனுடைய இருப்பு யாருடைய கவனத்தையும் பெறாத உதிரித்தன்மை கொண்டது. தற்செயலாக அவன் சந்திக்கும் ஜனனியின் (ப்ரியா ஆனந்த்) மூலம் வாழ்க்கையில் ஒரு பிடிப்பு ஏற்படுகிறது. எல்லாவற்றிலும் சிறந்து விளங்கும் ஜனனியின் மனதை வெல்ல வேண்டுமென்றால் தானும் சாதிக்க வேண்டும் என்னும் கட்டாயத்தில் அரவிந்த் சிக்கிக்கொள்கிறான். தீயவர்களைத் தட்டிக் கேட்கும் தாதா சத்யாவின் உதவியுடன் (சமுத்திரக்கனி) சில ‘சாதனை’களை நிகழ்த்தி, ஜனனியின் காதலைப் பெறும் அவன் அந்தச் சாதனைகள் வந்த விதத்தினால் பெரும் சிக்கலில் மாட்டிக்கொள்கிறான். அந்தச் சிக்கல் தரும் சறுக்கல் அவனை மீண்டும் கூட்டத்தில் ஒருவனாக ஆக்கிவிடுமா என்பதுதான் மீதிக் கதை.
இதழியளாராக இருந்து திரைப்பட இயக்குநரானவர்களின் வரிசையில் வந்திருக்கும் த.செ. ஞானவேல் இயக்கியிருக்கும் முதல் படம். பொழுதுபோக்கு அம்சங்களைத் தவிர்க்காமல் சமூகப் பார்வையுடன் முக்கியமான ஒரு விஷயத்தைக் கவனப்படுத்தியிருக்கிறார். முதலிடம், கடைசி இடம், நடுத்தரம் என்பதெல்லாம் பிறர் தர வாரா என்பதைச் கதையம்சத்துடன் சொல்லியிருக்கிறார்.
சமூகத்துக்குச் செய்தி சொல்லும் படங்களில் பொதுவாகப் பிரச்சார நெடி அடிக்கும். சித்தரிப்பில் யதார்த்தம் பலவீனமாக இருக்கும். பாத்திரங்கள் வகைமாதிரிப் படிவங்களாக இருப்பார்கள். பத்து நிமிடங்களுக்கு ஒருமுறை யாராவது புத்திமதியோ பொன்மொழியோ சொல்லிக்கொண்டிருப்பார்கள். அல்லது வாழ்க்கையின் மகத்துவத்தை வியந்துகொண்டிருப்பார்கள். இந்தப் படத்தில் அப்படிப்பட்ட அம்சங்கள் அதிகம் இல்லை. வகைமாதிரிப் பாத்திரங்களும் செயற்கையான சில திருப்பங்களும் இருந்தாலும் பொதுவாகப் பிரச்சார நெடியோ பொன்மொழி மழையோ இல்லாமல் இயல்பாகவே நகர்கிறது படம்.
சொல்லிக்கொள்ளும்படியான திறமைகளோ ஊக்கமோ இல்லாத அரவிந்தின் வாழ்வில் ஏற்படும் மாற்றங்கள் உரிய காரணத்தோடு நிகழ்கின்றன. அதாவது, ‘செயற்கை’யான திருப்பங்களைச் ‘செயற்கை’யாகவே நிகழவைத்து, அதையே படத்தின் ஆதார முடிச்சாக மாற்றியிருப்பது பாராட்டத்தக்க திரைக்கதை உத்தி. அரவிந்தின் குட்டு அம்பலமாவதும் தாதாவுக்கு ஏற்படும் நிலையும் நம்பகத்தன்மையுடன் காட்டப்படுகின்றன. நகைச்சுவைக்கென்று தனியாக மெனெக்கெடாமல் கதையுடன் சேர்ந்து வரும் கலகலப்பு படத்தின் ஓட்டத்துக்குத் துணைசெய்கிறது.
பாத்திர வார்ப்புகளில் இன்னும் கவனம் செலுத்தியிருக்கலாம். சராசரிகள் மீது சமூகத்தின் கவனம் படிவதில்லை என்பது உண்மைதான். ஆனால், அரவிந்திடம் அவன் அப்பா நடந்துகொள்ளும் விதம் ஒப்புக்கொள்ளும் படி இல்லை. ஜனனியின் பாத்திரமும் அவள் அரவிந்தை அணுகும் விதமும் வகைமாதிரித் தன்மை கொண்டிருக்கிறது. கல்லூரி வாழ்க்கைக்குப் பிறகு நாயகனின் வாழ்வில் ஏற்படும் மாற்றங்கள் நம்பகத்தன்மையுடனும் உத்வேகமூட்டும் வகையிலும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. கிளைமாக்ஸ் உள்படச் சில திருப்பங்கள் தற்செயல் நிகழ்வுகளையே சார்ந்திருப்பதும் ஒரு பலவீனம்.
யாருடைய கவனத்துக்கும் வராத சராசரிகள் பற்றிக் கவனப்படுத்துவது இந்தக் குறைகளை மீறி படத்தைத் தூக்கி நிறுத்துகிறது. வாழ்க்கையை வெற்றி, தோல்வியை வைத்து அளக்கக் கூடாது என்பதை அழுத்தமாகச் சொல்கிறது படம். அர்த்தமுள்ள வாழ்க்கையை வாழ ஒருவர் பெரிய திறமைசாலியாக இருக்க வேண்டியதில்லை என்பதையும் அழகாகக் காட்டிவிடுகிறது.
திறமையோ தன்னம்பிக்கையோ இல்லாத சராசரி இளைஞனாக வரும் அசோக் செல்வன் சவாலான வேடத்தைத் திறமையாகக் கையாண்டிருக்கிறார். அசட்டுத்தனம், தாழ்வு மனப்பான்மை, குற்ற உணர்ச்சி, இழப்பின் வலி ஆகியவற்றை நன்றாக வெளிப்படுத்துகிறார். ப்ரியா ஆனந்தின் பாத்திரம் வழக்கமானதுதான் என்றாலும் அவர் பக்குவமான நடிப்பை வழங்கியிருக்கிறார்.
சமுத்திரக்கனி, முத்துராமன், நாசர், மாரிமுத்து, ஜான் விஜய் ஆகியோரின் தேர்ந்த நடிப்பு படத்துக்கு உறுதுணை. பாலசரவணனின் காமெடி பல இடங்களில் எடுபடுகிறது.
நிவாஸ் கே.பிரசன்னாவின் இசையில் பாடல்கள் இனிமை. ‘நீ இன்றி’ பாடல் மனதில் ரீங்கரித்துக்கொண்டிருக்கிறது. பின்னணி இசை திரைக்கதையின் ஒரு பகுதியாகவே உள்ளது. வர்மாவின் ஒளிப்பதிவு புத்துணர்வு தரும் காட்சி அனுபவம்.
யார் வேண்டுமானாலும் பெரும் காரியங்களைச் செய்ய முடியும் என்பதைக் காட்சிப்படுத்தும் படம். அத்தகைய மனிதர்கள் சிலரைப் படத்தின் முடிவில் அடையாளப்படுத்துவது நெகிழவைக்கிறது. படம் முடிந்த பிறகு திரையில் தோன்றும் அந்த மக்கள் சேவகர்களின் நீண்ட பட்டியலை ரசிகர்கள் நின்று முழுமையாகப் பார்த்துவிட்டுச் செல்வது படம் ஏற்படுத்தும் தாக்கத்துக்குச் சான்று.